Made in China | மீண்டும் முளைக்கும் கொறோனா ‘முதல்’ வாதம்
கொறோனாவரைஸ் எங்கிருந்து, எப்படி ஆரம்பித்தது என்ற விவாதம் மீண்டுமொரு தடவை மேடைக்கு வந்திருக்கிறது. பார்வையாளர் மத்தியில் பலவித ‘கிசு கிசு’க்கள் தமக்குள் சுய தனிமைப்படுத்தலை மேற்கொண்டுள்ளன. சில நம்பக்கூடியவை, சில முடியாதவை.
கடந்த டிசம்பரில் வைரஸ் முதலில் மனிதருள் குடிபுகுந்தபோது, அது சீனாவின் வூஹான் சந்தையில் இருந்து ஆரம்பித்தது என்னும் கருத்து, உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பView Postட்டிருந்தது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்றம்பும் அதை ‘வூஹான் வைரஸ்’ எனக்கூறி அதற்குச் சான்றிதழ் வழங்கியிருந்தார். வேறு பல சந்தர்ப்பங்களில் போல, இந்தத் தடவையும் ட்றம்ப் கூறியது சரியாக வந்துவிடுமோ என்றதொரு ‘கிசு கிசு’ இப்போது வெளி மண்டலத்துக்கு வந்திருக்கிறது.
வெளவால் வைரஸ்
வூஹானில் இரண்டு ஆய்வுகூடங்களில் வெளவால் வைரஸ்கள் மீது நீண்ட காலமாக ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. டிசம்பரில் வெளி வந்த வைரஸ் வெளவாலிலிருந்து வந்தது என்பதை வெகு சில நாட்களிலேயே உறுதிப்படுத்திவிட்டன இந்த ஆய்வுகூடங்கள். அதெப்படி சாத்தியமானது? ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு அவரகளிடம் இதே வைரஸ் (மாதிரி) இருந்திருக்க வேண்டும். இங்கு தான் ‘கிசு கிசு’ வே ஆரம்பிக்கிறது. அத்தோடு இந்த இரண்டு ஆய்வுகூடங்களும் பாதுகாப்பு விடயங்களில் மெத்தனப் போக்கைக் கொண்டிருந்தன எனபதும் பதியப்பட்ட ஒன்று.
ஷி ஜென்ங்க்லி என்பவர் வூஹான் இன்ஸ்டிடியூட் ஒஃப் வைரோலொஜி என்ற நிறுவனத்தில் வைரஸ்கள் பற்றி ஆராயும் ஒரு விஞ்ஞானி. அந்த நிறுவனத்தில் BSL-4 தரத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஆய்வுகூடத்தை ஷி நிர்வகிக்கிறார். (Bio Safety Level – 4 என்பது அதியுச்ச பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டிய ஆய்வு கூடம். இது மூன்று வருடங்களுக்கு முன்னர் ஆர்ம்பிக்கப்பட்டிருந்தது. ஆகக் குறைந்த தரம் BSL-1). வூஹானில் வைரஸ் தொற்றுப் பிரச்சினை அறிவிக்கப்பட்ட போது, அது இந்த ஆய்வுகூடத்திலிருந்து தான் ஆரம்பித்தது என சீனாவிலும், வெளிநாடுகளிலும் வலைத்தளச் சமூகங்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.
உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் நாயகம் டாக்டர் ரெட்றோஸ் கெப்றெயேசு, இக் குற்றச்சாட்டுகளை ஒரு பொய்த்தகவல்களின் ‘தகவற்தொற்று’ (‘infodemic’) எனக்கூறிப் புறந்தள்ளி விட்டார். வேறு சிலர், இந்த வைரஸ் ஒரு ‘ஆய்வுகூடத் தயாரிப்பு’ எனக் கூறினர். இருப்பினும், இவ் வைரஸின் மரபணு வரிசையை (genome sequence) செய்த உலகின் பல விஞ்ஞானிகளும் இது ‘ஆய்கூடத் தயாரிப்பாக’ இருக்க வாய்ப்பில்லை எனக் கூறிவிட்டனர். இதனால் இந்த இரண்டு ‘தகவற் தொற்றுக்களும்’ கால்கள் முளைக்க முன்னரே முடக்கப்பட்டு விட்டன.
இவ் வைரஸ் தொற்று விடயத்தில், டாக்டர் ரெட்றோஸ்கெப்றெயேசுவின் கையாளல் ஆரம்பத்திலிருந்தே பிரச்சினைகளுடன் இருந்து வருகிறது. சீனாவில் இவ் வைரஸ் படு வேகமாக வளர்ந்து வருகின்ற வேளையில் அதை ஒரு pandemic தரத்துக்கு உயர்த்துவதற்கு அவர் தயக்கம் காட்டியிருந்தார் என்ற குற்றச்சாட்டுமுண்டு. ஆரம்பத்திலேயே இது pandemic எனப் பிரகடனப்பட்டிருந்தால், சீனாவிலிருந்து பல்லாயிரக் கணக்கானோர் வெளிநாடுகளுக்கு இவ் வைரஸைக் கொண்டுசென்றிருக்க முடியாது. அவரின் தயக்கத்துக்கும், சீனத் தலைவர்களுடனான நெருக்கத்துக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்ற கேள்விதான் இன்று அவரைப் பதவியிலிருந்து இறக்குவதற்கான முயற்சிகள்.
தற்போது, சீனாவிலும், வெளிநாடுகளிலுமுள்ள பல விஞ்ஞானிகள், இவ் வைரஸ் தொற்று வூஹான் ஆய்வுகூடத்திலிருந்தே ஆரம்பித்தது என்ற கருதுகோளை வலுப்படுத்தி வருகிறார்கள். வ்இஞ்ஞாநி ஷி யின் ஆய்வுகூடத்தில் இருந்து இக் கிருமி கசிந்து வெளியேறியிருக்கிறது என அவர்கள் கருதுகிறார்கள். ஆனால் அதற்கான வலுவான ஆதாரங்கள் இதுவரைக்கும் கிடைக்கவில்லை.
நியூ ஜேர்சி றட்ஜெர்ஸ் பல்கலைக்கழகத்திலுள்ள வாக்ஸ்மான் இன்ஸ்டிடியூட் ஒஃப் மைக்கிறோபயோலொஜியில் பணிபுரியும் உயிரியலாளரான றிச்சார்ட் எப்றைட் கூறுகையில், “ஆய்வுகூட விபத்துக்கள் நடைபெறுவது ஒன்றும் புதிதல்ல. அவற்றைப் பொய்ச் செய்திகள் என்றோ, கட்டுக் கதிகள் என்றோ இலகுவாகப் புறந்தள்ளிவிட முடியாது” என்கிறார்.
ஆராய்ச்சி
சீனாவில், வெளவால் வரைஸ் மீதான ஆராய்ச்சி சார்ஸ் (2002-2003) தொற்று முடிவடையும் காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது.
முதலாம் சார்ஸ் தொற்று, சீனாவின் தென் மாகாணமான குவாண்டொங்க்கில் ஆரம்பமாகி ஆசியாவின் பல பகுதிகளிலும் பரவியிருந்தது. கிட்டத்தட்ட 8000 பேர் தொற்றுக்குள்ளாகி, அதில் மரணமடைந்தவர்களில் 84 வீதமானோர் சீனர்கள். அவ் வைரஸ் வெளவாலிலிருந்து காட்டுப் பூனைக்குத் தொற்றி அதிலிருந்து மனிதருக்குத் தாவியது எனப் பின்னர் கண்டுபிசித்திருந்தார்கள். சீனாவின் யுன்னாண் மாகாணத்தில் உள்ள பல குகைகளில் பெருந்தொகையான வெளவால்கள் காணப்படுகின்றன.
கடந்த 10 வருடங்களாக, ஷியும், வூஹான் நகரத்திலுள்ள வேறு பல விஞ்ஞானிகளும் இப்படியான குகைகளுக்குச் சென்று பல வகையான வெளவால்களைப் பிடித்து அவற்றிலிருந்து விதம் விதமான வைரஸ்களைச் சேகரித்து வந்துள்ளனர். ஆசியாவிலேயே மிகப் பெரிய வைரஸ் வங்கி வூஹானில் இருக்கும் ஷி பணி புரியும் இன்ஸ்டிடியூட் தான் என அவர்களது தகவல் நிருபம் தெரிவிக்கிறது.
“வெளவால்களில் அவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் பயனாக, பல வேறு வடிவங்களில் சார்ஸ் வைரஸ்களை அவர்கள் அடையாளபடுத்தியுள்ளனர் எனவும், அவற்றில் சில மனிதரின் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியன” என ஷியுடன் இணைந்து ஆய்வறிக்கை ஒன்றை 2010 இல் வெளியிட்ட ஹொங்கொங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இன்னுமொரு விஞ்ஞானி லியோ பூன் கூறுகிறார்.
ஜனவரி மாதத்தில் கொறோனாவைரஸின் மரபணு வரிசை அறியப்பட்டதும், தனது வைரஸ் வங்கியிலிருந்து எடுக்கப்பட்ட வைரஸின் மரபணு வரிசையுடன் அது 96 வீதம் ஒத்துப்போவதாக ஷி தெரிவித்திருந்தார்.
வூஹான் இன்ஸ்டிடியூட்
வூஹான் இன்ஸ்டிடியூட் இப்படிப் பல ஆராய்ச்சிகளின் மையாமாக இருப்பினும், அது சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்படுவதற்கு வெளிநாட்டு நிபுணர்களின் உதவி தேவைப்பட்டது.
லியோன், பிராண்சிலுள்ள ஜான்மெரியூ BSL-4 ஆய்வுகூடத்துடன் உதவியுடநும், பிரென்ச், சீன அரசுகளின் அங்கீகாரத்துடனும், வூஹானில் 32,292 சதுர அடி பரப்பளவுள்ள வூஹான் இன்ஸ்டிடியூட் ஆரம்பிக்கப்பட்டு, 2017 இல் தனது நடவடிக்கைகளை ஆறம்பித்திருந்தது.
இவ்வாய்வுகூடத்தின் பணியாளர்கள், பிரான்ஸ், கனடா, அமெரிக்கா மற்றும் உள்நாட்டு நிபுணர்களிடம் முறையான பயிற்சிகளைப் பெற்றிருந்தார்கள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. இதை எந்தவொரு உலக நிறுவனங்களும் கண்காணிப்பதில்லை எனவும், உலக சுகாதார நிறுவனம், அவ்வப்போது ஆய்வுகூட பாதுகாப்புக் கையேடுகளைப் பிரசுரிக்கிறது எனவும் அறிய முடிகிறது.
விபத்து
இந்த 11 மில்லியன் மக்கள் வாழும் நகரில், வூஹான் இன்ஸ்டிடியூட்டைத் தவிர வேறு சில ஆய்வுகூடங்களும் வைரஸ்களைச் சேமிக்கும் வேலைகளைச் செய்து வருகின்றன.
பெப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியளவில், வூஹானை உள்ளடக்கிய, சீனாவின் இரண்டு பிரபலமான பொலிரெக்னிக்குகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், வூஹானிலுள்ள நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் (Wuhan Certre for Disease Control and Prevention (CDC)) ஆய்வுகூடமொன்றில் நடைபெற்ற வெளவால்கள் தொடர்பான விபத்தொன்று பற்றி ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்கள். அவ் விபத்தின்போது வெளவால்களினால் தாக்கப்பட்டு, சிறுநீர் கழிக்கப்பட்ட ஒரு ஆராய்ச்சியாளர் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
இந்த நோய்க் கட்டுப்பாட்டு மையம் சார்ஸ்-கொவ்-2 வைரஸின் ‘மூலம்’ எனப் பரவலாகப் பேசப்பட்ட வூஹான் கடலுணவுச் சந்தை இருக்குமிடத்திலிருந்து 280 மீட்டர்கள் தூரத்திலுள்ளது. ஆரம்பத்தில் கோவிட்-19 நோயாளிகள் கொத்துக் கொத்தாக சிகிச்சை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட மருத்துவமனை நோய்க் கட்டுப்பாட்டு மையத்துக்கு நேரெதிரே, தெருவுக்கு அப்பால் இருக்கிறது.
Sars-Cov-2 வைரஸ் இப்படியான ஒரு ஆய்வுகூடங்கள் ஒன்றிலிருந்துதான் வெளிவந்திருக்க வேண்டுமென அவ் வறிக்கையை வெளியிட்ட விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
இவ் வைரஸின் மூலம் பற்றிய வேறு ஏதும் தடயங்களை விஞ்ஞானிகள் சமர்ப்பிக்காத வரைக்கும், இதுவே மிகவும் சாத்தியமான ஒன்றாக இருக்கும் என்கிறார் உயிரியலாளர் எப்றைட்.
சார்ஸ் வைரஸ் ஆரம்பத்தில் சிங்கப்பூர், ராய்பேய், பேஜிங்க் (இரண்டு தடவைகள்) ஆகிய இடங்களிலிலுள்ள ஆய்வுகூடங்களிலிருந்து வெளிவந்திருந்தமையை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
சென்ற டிசம்பர் மாதம், சீனாவின் கான்சு மாகானத்திலுள்ள விலங்குப் பரிசோதனை கூடத்திலிருந்து தப்பிய புருசெல்லா (Brucellaa) என்ற பக்டீரியா 100 பேரில் தொற்றியிருந்தது.
சார்ஸ் மற்றும் இதர கொறோனா குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ்கள் காற்றில் பரவுவதாகவோ அல்லது உயிருக்குத் தீங்கு விளைவிப்பதாகவோ அறிந்திருக்கப்படவில்லை என்பதால், அவற்றின் மீதான பரிசோதனைகளை மேர்கொள்பவர்கள் குறைந்த பாதுகாப்பு அணிகளுடனும், ஆய்வுகூடத் தொழில்நுட்பவியலாளர்கள் உடற்கவசங்கள் இல்லாமலும், கிருமியகற்றுச் செய்யாமலும் பணியாற்ற அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். வைரசுடன் பணியாற்றிய எவரும் அதன் தொற்றை வெளியே கொண்டுவந்திருக்கலாம்.
இருப்பினும், Sars-Cov-2 வைரஸ் மனிதரில் தொற்றிக்கொள்வதற்கு முன்னர் இன்னுமொரு விலங்கில் தொற்றிய பின்னரே அது சாத்தியமாகவிருக்க முடியுமெனச் சில விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். 2003 Sars நோய்த் தொற்று அப்படித்தான் நிகழ்ந்தது.
கோவிட்-19 வைரஸ் அதன் முன்னோடியான SARS வைரஸுக்கு மிக நெருக்கமான தோற்றப்பாட்டைக் கொண்டிருக்கிறது.
ஆனால், ஷியும், அவரது அமெரிக்கச் சகபாடிகளும், ஆய்வுகூடச் சூழலில், இவ் வைரஸ் வெளவால்களிலிருந்து நேரடியாக தொற்றும் வல்லமை உள்ளதென்பதை நிரூபித்துள்ளனர்.
இடை நிலைக் காவிகள்
வைரஸ் மனிதரில் தாவுவதற்கு முன்னர் இடையில் இன்னுமொரு விலங்கில் தாவியிருக்கவேண்டுமென்னும் கருதுகோள் நிரூபிக்கப்படுவதும் அவ்வளவு சுலபமானதாக இருக்குமென்பதில்லை.
வூஹான் நகரையும், அது இருக்கும் ஹூபே மாகாணத்தையும் சீனா இரும்புப் பிடிக்குள் கொண்டுவந்த போது, நோய்த் தடுப்பு நடவடிக்கையாக, வூஹான் கடலுணவுச் சந்தையிலிருந்த, வன விலங்குகள் உட்பட்ட, அத்தனை உயிர்களையும் அரசாங்கம் கொன்றழித்து எரித்து விட்டது. கட்டிடம் முழுவதும் கிருமியழிப்புச் செய்து கழுவித் துடைக்கப்பட்டு விட்டது. எனவே எந்த விலங்கு இந்த வைரஸைக் கொண்டிருந்தது எனக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு தவறிவிட்டது.
2017 இல் மலேசியாவிலிருந்து சீனாவுக்குக் கடத்தப்பட்டதாகக் கருதப்படும் எறும்புண்ணி விலங்குகளில் காணப்படும் வைரஸின் மரபணு வரிசை, SARS-CoV-2 வைரஸின் மரபணு வரிசையோடு 85.5-92.4 வீதம் ஒத்துள்ளதாக, மார்ச் மாதம் வெளிவந்த Nature என்னும் சஞ்சிகையில் வெளிவந்த ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.இதன் மூலம் அந்த இடை நிலை விலங்கு எறும்புண்ணியாக இருக்கலாமென ஊகிக்கப்படுகிறது.
தற்போது அமெரிக்கா, உலகின் கோவிட்-19 மையமாக மாறிய பின்னர், ஜனாதிபதி ட்றம்ப், சீனாவே வைரஸை உலகெங்கும் அனுப்பியதென்ற கருத்துப்படப் பேசி வருவதும், அதற்கு சீனா மறுப்பறிக்கை விடுவதுமாக இருப்பதால் SARS-CoV-2 வை ஒரு ‘Made in China’ வைரஸாகக் காட்ட மேற்கு நாடுகள் மேலும் முயற்சிகளை எடுக்கலாம்.
எப்படியிருந்தாலும், தாம் விரும்பிய விலங்குகளுடன் வெகு சமரசமாக ஒத்திசைந்து வாழ்ந்துகொண்டிருந்த வைரஸ்களை நமது வீடுகளுக்குள் கொண்டு வந்த மனிதர்கள் கண்டனத்துக்குரியவர்களே.
– மாயமான்
No related posts.