கீல்வாதத்திற்குப் (Arthritis) பாவிக்கும் மருந்து கோவிட் சிகிச்சையாகப் பரிசோதனை செய்யப்படவிருக்கிறது
கீல்வாத சிகிச்சையில் பொதுவாகப் பாவிக்கப்படும் Adalimumab எனப்படும் அழற்சியைக் கட்டுப்படுத்தும் (anti-inflammation) மருந்தை முதியோர் இல்லங்களில் கோவிட் நோய் தொற்றியவர்களில் பரீட்சார்த்தமாகப் பாவிக்க பிரித்தானியாவின் ஒக்ஸ்ஃபோர்ட் பலகலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் தீர்மானித்துள்ளார்.
முதியோர் இல்லங்களில் வாழும் கீல்வாத நோயாளிகள் வெகு சிலரே கோவிட் தொற்றோடு மருத்துவமனை வருகிறார்கள் என்பதை அவதானித்த பின்னர் இப் பரிசோதனைக்குத் திட்டமிடப்பட்டது.
Adalimumab எனப்படும் பிரித்தானியாவில் கடந்த 20 வருடங்களாகப் பாவனையில் இருக்கிறது. வேறு நாடுகளில், வேறு பெயர்களில் இது விற்கப்படலாம். Anti-tumour necrosis factor (anti-TNF) என்ற வகையைச் சேர்ந்த இந்த மருந்து கீல்வாத நோயளிகளில் காணப்படும் அழற்சியையும், குடல்நோய்களைத் தீர்க்கவும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. முற்றிய நிலையிலுள்ள கோவிட்-19 நோயாளிகளில் பொதுவாக ஏற்படும் “cytokine storm” எனப்படும் உடலின் தற்காப்பு முயற்சியின் அதிகப்பட்ட தாக்கத்தினால், அழற்சியும் அதற்கான எதிர்வினையையும் உடல் வெளிப்படுத்துகின்றது.
கோவிட்டின் முதலாவது அலையின்போது மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் முதியோர் இல்லங்களில் வாழ்வோரே. எனவே அவர்களில் இப் பரிசோதனையை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளோம் என்கிறார், ஒக்ஸ்ஃபோர்ட் பலகலைக்கழகப் பேராசிரியர் டன்கன் றிச்சார்ட்ஸ்.
இப் பரிசோதனையின்போது Adalimumab என்ற மருந்து, ஒரு தடவை மட்டும், தோலுக்குக் கீழ் ஏற்றப்படும். அதன் விளைவுகள் 2 வாரங்களுக்கு நீடிக்கும் என்கிறார்கள்.
Covid-19 Therapeutics Accelerator எனப்படும் அமைப்பினால் இப்பரிசோதனை நிகழ்த்தப்படவுள்ளது. Wellcome, the Gates Foundation மற்றும் Mastercard இதற்கு நிதியுதவியை வழங்குகின்றன.
“ஆரம்பத்தில் மேற்கொள்ளப்படும் சிகிச்சையால், அதிமிகு அழற்சியைத் (hyper-inflammation) தொடங்காமல் தடுத்து நிறுத்த முடியும்” என்கிறார் றிச்சார்ட்ஸ்.
இப் பரிசோதனையில் 500 முதல் 750 பேர்வரையில் பங்கெடுப்பார்கள். இவர்கள் கோவிட் நோய்த் தொற்றுள்ளவர்களாகவும், இரத்தப் பரிசோதனையில் அழற்சி இருப்பது உறுதிசெய்யப்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
இப் பரிசோதனை வெற்றியளிக்குமானால், பிரித்தானியாவில் உடனடியாகப் பாவனைக்கு வரும். மருத்துவமனை வசதிகள் குறைந்த உலக நாடுகளிலும் இச் சிகிச்சை வசதிகளை அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
No related posts.