வைரஸ் தொற்று | மூலிகைகளைத் தேடி ஓடும் சீனர்கள்!

உலகை அச்சுறுத்திவரும் ‘கொறோனாவைரஸ்’ நோய்க்கான மருந்து என்று எதுவுமில்லாத நிலையில் சீன விஞ்ஞானிகள் ஒரு மூலிகை மருந்து பலனளிப்பதாக நேற்று அறிவித்திருந்ததைத் தொடர்ந்து சீனாவின் பல பாகங்களிலும் மக்கள் மூலிகைக் கடைகளுக்குப் படையெடுத்து வருகின்றனர்.

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொள்வதைத் தவிர இந் நோய்க்கு வேறு சிகிச்சைகள் இல்லை. சீனாவிலும் இந்தியாவிலும் (இதற்குக் காரணம் போகர் என்ற சித்தர் என்பது ஒரு செய்தி) பல்லாயிரக் கணக்கான வருடங்களாக நோய் நிவாரணிகளாக மூலிகைகளே பாவனையில் இருந்துவந்தன. தற்போது மேற்குலகில் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெரும்பானமையானவை மூலிகை மருந்துகளை மூலாதாரமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டவை.

இலங்கையிலும் தற்போதய அரசு சுதேச சித்த / ஆயுர்வேத மருத்துவ முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. கொறோனா வைரஸுக்கும் சுதேச வைத்திய முறைகளில் ஏதாவது மருந்து கிடைக்குமா என ஆராயுமாறு ஜனாதிபதி ராஜபக்ச நேற்று உத்தரவிட்டிருக்கிறார்.

சீன விஞ்ஞானிகள் நேற்று விடுத்த அறிவித்தலின்படி, ‘ஹணிசக்கிள்’ (honeysuckle) எனப்படும் ஒரு பூவில் மனித நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் பண்பு இருப்பதாகச் செய்தி பரவியிருந்தது. ‘ஷுவாங்குவாங்கிளியன்’ (Shuanghuanglian) என்பது அம்மூலிகைக்குப் பெயர். வைரஸ் தொற்றை நிறுத்திவைக்கக்கூடிய பண்பு இம் மூலிகைக்கு இருப்பதாக சீன விஞ்ஞான அகடமி செய்தி வெளியிட்டிருந்ததைத் தொடர்ந்து மக்கள் ஓடவாரம்பித்திருக்கிறார்கள்.

இம் மருந்திநால் நோயின் நிலையில் மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. சீன அரச ஊடகங்கள் இவ்விடயத்தில் எச்சரிக்கையோடு இருக்கும்படி அறிவுறுத்தி வருகின்றன. இருப்பினும் கடைகளிலும், இணையத்தள வியாபார நிலையங்களிலும் மூலிகைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பது மட்டும் தெரிகிறது.

இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 300 க்கும் மேற்படலாம் எனவும் நோய் தொற்றினோரின் எண்ணிக்கை 14,000 பேருக்கும் அதிகமாகவுமுள்ள நிலையில் அரசினாலும் திட்டவட்டமான சிகிச்சை முறைகளைப் பரிந்துரைக்க முடியாமலுள்ளது.

இதே வேளை, அரச நிறுவனமான தேசிய சுகாதார ஆணையம் 6,000 மூலிகை வைத்தியர்களை வூஹான் மாகாணத்துக்கு அனுப்பி, நோய்க்கான சிகிச்சை முறைகளை ஆராய்ந்து பரிந்துரைக்குமாறு அனுப்பியுள்ளது. சீனாவின் மூலிகை வைத்திய முறைகள் 2400 வருடம் பழமை வாய்ந்தவை எனப்படுகிறது.

பிரான்ஸ் நாட்டின் ‘சீன மருத்துவ கல்வி ஆணையத்தின்’ (Chinese Medicine Academic Council of France) உறுப்பினரான மார்க் பிறெட் என்பவரின் கருத்துபடி, காய்ச்சல், சளி போன்ற வருத்தங்களுக்கு மூலிகை வைத்தியம் தீர்வுகளைத் தரமுடியும் என நம்புவதாகத் தெரிவித்தார். இருப்பினும், இந்த வகையான வைத்தியமுறை ஒவ்வொருவரது உடலுக்கும் தனித்துவமானது எனவே அதீத கவனம் தேவை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சீன அரசாங்கம் பாரம்பரிய வைத்திய முறைகளை ஊக்கப்படுத்தி வருவதோடு ஆதரவும் வழங்கி வருகிறது. ‘சார்ஸ்’ காலத்தில் பலர் இம் முறைகளைப் பாவித்திருந்தனர். அத்தோடு, சீனாவின் அதிகரித்துவரும் அரசியல் பொருளாதார ஆதிக்கத்தைப் பயன்படுத்தி ஆசிய, ஆபிரிக்கக் கண்டங்களிலுள்ள நாடுகளில் இவ்வைத்திய முறைகளை அறிமுகப்படுத்தவும், அபிவிருத்தி செய்யவும் சீனா திட்டமிட்டுள்ளது. ‘இப் பாரம்பரிய வைத்திய முறை சீன நாகரிகத்தின் அரும்பொருட் செல்வம்’ எனச் சமீபத்தில் சீன அதிபர் சி ஜிம்பிங் கூறியிருக்கிறர்.

சீன அரசின் பல்லாண்டுகால முயற்சியின் பலனாக, உலக சுகாதார நிறுவனம் தற்போது சீன மருத்துவத்தை அங்கீகரித்து, சர்வதேச நோய்கள் வகைப்படுத்துதல் திட்டத்தில் ஒரு அங்கமாக அங்கீகரித்துள்ளது. இருப்பினும், இதற்குப் பல மேற்குலக கல்வியாளர் மத்தியில் பலத்த எதிர்ப்பும் தோன்றியுள்ளது.

Print Friendly, PDF & Email