வைட்டமின் D மாத்திரை முற்றிய புற்றுநோய் பரவலை (metastatic) குறைக்கிறது – ஆய்வு
வைட்டமின் D இற்கும் புற்றுநோய்க்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என மிக நீண்ட காலமாக ஆராய்ச்சியாளர் தலையைப் பிய்த்துக்கொண்டு வந்தனர். பூமத்தியரேகையை அண்டி வாழும் மக்கள் புற்றுநோயால் இறப்பது மிகக்குறைவு எனப் பல ஆய்வுகள் தொடர்ச்சியாகத் தெரிவுவித்துவந்த நிலையில் ஆராய்ச்சியாளர் ஒரு முடிவுக்கு வந்தனர். இப் பகுதியில் வாழும் மக்கள் அதிகம் சூரிய ஒளியைப் பெறுவதால் அவர்களது உடலில் வைட்டமின் D யின் அளவு அதிகமாக இருப்பது ஒரு காரணமாகவிருக்கலாம் என்ற சந்தேகம் அவர்களுக்கு இருந்து வந்தது.
2018 இல் செய்யப்பட்ட வைட்டமின் D, ஒமேகா-3 மனிதப் பரிசோதனைகளின் (VITAL) பெறுபேறுகள் புற்றுநோயின் ஆரம்பத்திற்கும் வைட்டமின் D இற்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், ஆனால் புற்றுநோயால் மரணம் ஏற்படுவதைக் குறைக்கின்றது எனவும் முடிபுகளை எடுக்கக்கூடிய அளவுக்கு ஆதாரங்களை வழங்கியிருந்தன.
தற்போது பிறிஹாம் மற்றும் பெண்கள் மருத்துவமனையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு மேற்கொண்ட VITAl இன் இரண்டாம் கட்ட ஆய்வின்படி, வைட்டமின் D மாத்திரைகளை உண்பவர்களுக்கு முற்றிய புற்றுநோய் உஅடலின் ஏனைய பகுதிகளுக்குப் பரவும் (metastatic) ஆபத்தைக் குறைக்கிறது எனக் கண்டறிந்துள்ளது.
ஜாமா சஞ்சிகையில் சமீபத்தில் வெளியான கட்டுரை ஒன்றில் இக் குழுவின் ஆய்வு பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் முற்றிய புற்றுநோய் உள்ளவர்கள் வைட்டமின் D மாத்திரைகளை உண்பவர்களாக இருக்கும்போது அவர்களில் 17% பேர் நோயினால் மரணமடைவது தவிர்க்கப்பட்டது எனவும், அவர்களது உடல் எடைச் சுட்டி (BMI) கட்டுப்பாட்டில் இருந்தால் இவ் விகிதாசாரம் 38% மாக அதிகரிக்கிறது எனவும் கண்டறிந்துள்ளார்கள்.
புற்றுநோய் ஒரு உறுப்பில் ஆரம்பித்து முற்றிய நிலையில் ஏனைய உறுப்புகளுக்குப் பரவுவதை metastatic அல்லது stage 4 நிலை என மருத்துவர்கள் கூறுவார்கள்.
“வைட்டமின் D மாத்திரைகளை உண்பதன் மூலம் முற்றிய புற்றுநோய் மேலும் பரவுவதைக் குறைக்க முடியும் என்பதே இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன” என இவ்வாய்வுடன் தொடர்புடைய மருத்துவர் போலெற் சாண்ட்லெர் தெரிவித்துள்ளார்.
5 வருடங்களுக்கு மேல் செய்யப்பட்ட மேற்குறிப்பிட்ட VITAL ஆய்வு, புற்றுநோய்களற்ற, 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் 55 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆகிய பல்லின மக்களில் செய்யப்பட்டது. நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட இம் மக்களில் முதலாவது பிரிவிற்கு வைட்டமின் D (நாளொன்றுக்கு 2000 IU) மற்றும் ஒமேகா-3 ஆகிய மாத்திரைகளும், இரண்டாவது பிரிவிற்கு வைட்டமின் D மற்றும் மருந்துப் போலியும் (placebo) மூன்றாவது பிரிவிற்கு ஒமேகா-3 யும் மருந்துப் போலியும், நான்காவது பிரிவிற்கு தனியே மருந்துப் போலிகளையும் விஞ்ஞானிகள் கொடுத்திருந்தனர். அவர்களது எதிர்பார்ப்பு இம் மக்களில் எவருக்காவது புற்றுநோயோ அல்லது இருதய வியாதியோ ஆரம்பிக்கிறதா என்பதை அறிவதே.
இவ்வாய்வில் பங்குபற்றிய 25,000 பேர்களில் 1,617 பேருக்கு அடுத்த 5 வருடங்களில் புற்றுநோய் ஆரம்பித்திருந்தது. மார்பகம், விந்தகம், பெருங்குடல், குதம், சுவாசப்பை உள்ளிட்ட பலவகையான புற்றுநோய்கள் இவற்றில் அடங்கும். வைட்டமின் D மாத்திரையை உட்கொண்ட 13,000 பேர்களில் 226 பேருக்கு முற்றிய புற்றுநோய் பீடித்திருந்தது. அதேவேளை வைட்டமினுக்குப் பதிலாக மருந்துப் போலியை உட்கொண்டவர்களில் 274 பேருக்கு புற்றுநோய் உண்டாகியிருந்தது. பங்குபற்றியவர்களில், வைட்டமின் D யை உட்கொண்ட, சாதாரண உடல் எடைச் சுட்டி (BMI=25) யைக் கொண்ட 7,843 பேரில் 58 பேரில் மட்டுமே முற்றிய புற்றுநோய் காணப்பட்டது. ஒப்பீட்டளவில் மருந்துப்போலி எடுத்தவர்களில் 96 பேருக்கு முற்றிய புற்றுநோய் உருவாகியிருந்தது.
உடற் பருமன் அதிகமுள்ளவர்களிலும், அழற்சி (inflammation) உள்ளவர்களிலும் வைட்டமின் D யின் செயற்பாடு குறைவாக இருக்கிறது எனப் பிறிதொரு ஆய்வு கூறுகிறது.
புற்றுநோயாளிகளில் வைட்டமின் D யின் அளவு 72 வீதம் குறைவு எனவும், உடலில் அதிகளவு கொழுப்பு இருப்பவர்களுக்கு புற்றுநோய் வருவது அதிகமெனவும் வேறு ஆர்ய்வுகளும் தெரிவிக்கின்றன.
மொத்தத்தில் வைட்டமின் D மாத்திரைகளை உட்கொள்வதும், உடலின் எடையைச் சாதாரண அளவுக்கு வைத்திருப்பதும் புற்றுநோய்கள் முதல் பலவிதமான நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும் என்பதே இவ்வாய்வு தெரிவிக்கிறது என்கிறார் டாக்டர் சாண்ட்லெர்.
No related posts.