வேகமாகப் பரவிவரும் ‘குரங்கம்மை’ (monkeypox)

அறிகுறிகள் என்ன?

அகத்தியன்

Monkeypox என்னும் நோய்க்கு இன்னும் தமிழில் பெயர் சூட்டப்படவில்லை. அதனால் வசதிக்காக அதைக் ‘குரங்கம்மை’ என அழைக்கிறேன். ஆபிரிக்காவில் பல தசாப்தங்களாகப் பீடித்துவரும் நிலையிலும் இந்நோய் மீது இப்போதுதான் மேற்கத்திய மக்கள் அச்சம் கொள்கிறார்கள். எந்த நோயாகவிருந்தாலும் அது ஆசிய ஆபிரிக்க நாடுகளுக்குள் முடங்கிக்கொள்ளும்வரை அதைப்பற்றி யாரும் அக்கறை கொள்ளப் போவதில்லை. கோவிட்டும் சீனாவை விட்டுப் புறப்படாதவரை உலகம் அதைக் கண்டுகொண்டிருக்காது.

கடந்த வாரம், குரங்கம்மை, ஆபிரிக்காவுக்கு வெளியால், இதுவரை 11 நாடுகளில் 120 மனிதர்கள் மேல் தாவியிருக்கிறது. கனடா, அமெரிக்கா, பிரித்தானியா இவற்றுள் அடக்கம். இது பரவும் வேகம் மருத்துவ சமூகத்தை ஆச்சரியத்துக்குள்ளாக்கியிருக்கிறது. இதற்கு முன்னர் வந்த பெரியம்மை (Smallpox) ஒரு கொள்ளைநோயாகப் பரவி உலகில் பல்லாயிரக்கணக்கான மக்களைக் காவுகொண்டிருந்தது. அதன் பரவலைத் தடுக்க இப்போது தடுப்பு மருந்து பாவனையில் உள்ளது.

‘குரங்கம்மை’ ஒரு வைரஸினால் பரவும் வியாதி. ஆய்வுகூடங்களில் பரிசோதனைக்குப் பாவிக்கப்பட்ட குரங்குகளில் 1958 இல் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இதர காட்டு விலங்குகள், எலிகள் போன்றவற்றிலிருந்து தொற்றுவதாக அப்போது கருதப்பட்டது. பின்னர், இது தொற்றிய ஒருவரிலிருந்து இன்னொருவருக்குத் தாவுமெனவும் அறியப்பட்டது. மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க நாடுகளில் வருடமொன்றுக்கு சில ஆயிரக்கணக்கானவர்கள் இத்தொற்றுக்கு ஆளாகுவது வழக்கம். ஆபிரிக்க நாடுகளுக்குப் போய்வருபவர்கள் மூலமும், இறக்குமதி செய்யப்படும் ஆபிரிக்க வனவிலங்குகள் மூலமும் இது வெளிநாடுகளுக்கும் பரவுகிறது. ஆனால் கடந்த வாரம் பரவியதாக அறியப்பட்ட ‘குரங்கம்மை’ ஒரு புதிய வைரஸ் திரிபினால் பரவுகிறதோ என விஞ்ஞானிகள் அச்சமுறுகிறார்கள்.

‘குரங்கம்மை’ SARS-CoV-2 வகையைச் சார்ந்தது அல்ல. அது மனிதரிலிருந்து மனிதருக்குத் தொற்றுமெனினும் கோவிட் வைரஸ் போன்று இலகுவாகத் தொற்றும் ரகமல்ல என வைரலியல் ஆராய்ச்சியாளர் ஜே ஹூப்பர் கூறுகிறார். பெரியம்மைக்கு (smallpox) நெருங்கிய உறவினரான இக் குரங்கம்மையின் தொற்றைத் தடுப்பதற்கு ‘பெரியம்மை’த் தடுப்பூசி போதுமானது என்கிறார் ஹூப்பர். கோவிட் வைரஸ் போலக் காற்றின் மூலம் பரவாமல், குரங்கம்மை ஆளுக்கு ஆள் தொடுகை மற்றும் எச்சில், உடற்கழிவுகள் மூலம் பரவுகிறது.

அறிகுறிகள்

ஆரம்ப நிலையில் காய்ச்சல் (சுரம்), நிணநீர்க்கணு வீக்கம் (enlarged lymph nodes), முற்றிய நிலையில் முகம், கைகள், கால்களில் கொப்புளங்கள் (distinctive fluid-filled lesions) ஆகியன ‘குரங்கம்மை’யின் அறிகுறிகளாகும். பெரும்பாலான நோயாளிகள் மருந்துகள் ஏதுமின்றிச் சில வாரங்களில் குணமாகிவிடுகிறார்கள். ‘குரங்கம்மை’ கோவிட்டைப் போல் அறிகுறிகள் ஏதுமின்றி ‘அமைதியாகப்’ பரவும் ஒன்றல்ல என்பது இதுவரையான ஆராய்ச்சிகளின் முடிவு.

ஆராய்ச்சி

தற்போது பரவிவரும் குரங்கம்மை வைரஸின் மரபணுக் கட்டமைப்பை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள். இதுவரை கிடைத்த தகவல்களின்படி மேற்கு ஆபிரிக்காவில் காணப்படும் குரங்கம்மை வைரஸ்களின் மரபணு அமைப்பை ஒத்தவையாக இது இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். இவ்வகை வைரஸ்கள் தீவிரமற்ற தொற்றையும், குறைந்த இறப்பு வீதத்தையும் கொண்டவை. ஆனால் மத்திய ஆபிரிக்காவில் பரவும் குரங்கம்மை வைரஸின் திரிபு தீவிரமான ஒன்று எனப்படுகிறது. தற்போது உலக நாடுகளில் பரவும் வகை எத்தகையது என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

கோவிட் நோயைப் பரப்பும் SARS-CoV-2 வைரஸ் RNA வகையைச் சார்ந்தது. அவற்றின் உடலமைப்பு மாற்றங்களை (திரிபுகளை) மனித உடலெதிர்ப்பு சக்திகள் இலகுவில் அடையாளம் கண்டுகொள்ளாது ஏமாறிவிடுகின்றன. ஆனால் ‘குரங்கம்மை’ வைரஸ் DNA வகையைச் சார்ந்தது. அவை தமக்குள் ஏற்படும் மரபணு மாற்றங்களை /சிதைவுகளை உடனுக்குடன் கண்டறிந்து செப்பனிட்டு விடுவதால் இவற்றின் உடலமைப்புகளில் அதிக மாற்றங்கள் காணப்படுவதில்லை. எனவே உடலெதிர்ப்பு சக்திகளால் இவை இலகுவாக இனம்காணப்பட்டு விரைவிலேயே அழிக்கப்பட்டு விடுகின்றன. இதனால் தற்போது காணப்படும் ‘குரங்கம்மை’ வைரஸ் ஒரு புதிய திரிபாக இருப்பதற்கான சாத்தியமில்லை என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

Print Friendly, PDF & Email