முதுமை மறதி (Dementia)

Dr. Kanaga Sena, MD

Neuroligist, Yale School of Medicine, Bridgeport, CT. USA

 

டாக்டர் கனக சேனா MD

மறதி நோய் (Dementia) என்பது ஒருவரின் ஞாபகசக்தியில் ஏற்படும் குறைபாடு அல்லது தடுமாற்றங்களை அறிகுறிகளாகக் கொண்ட ஒரு நோய். இது பெரும்பாலும் முதுமையில் வருவதால் முதுமை மறதி எனவும் அழைக்கப்படுகிறது.

இந் நோயின் பொதுவான அறிகுறிகள், பெயர்களை மறந்து போதல், காட்சிப் புலனுணர்வில் (visual perception) தடுமாற்றம், பிரச்சினை தீர்க்கும் (problem solving) ஆற்றல் குறைவு, தன்நம்பிக்கைக் குறைபாடு, கவனக் குவிப்பில் (focus) குறைபாடு எனப் பலவகைப்படும்.

இம் மறதி நோய் முதியவர்களில் அதிகமாகக் காணப்பட்டாலும், எந்த வயதினரையும் பாதிக்கக் கூடியதே. இந் நோய் பற்றிய புள்ளி விபரங்கள் சில:

  • உலகில் 50 மில்லியன் மனிதர்களை இந் நோய் பீடித்திருக்கிறது
  • ஒவ்வொரு வருடமும் 10 மில்லியன் மனிதர்கள் இப்பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள்
  • 60-70 வீதமானோருக்கு அல்சைமர் நோயே இதற்கு முதன்மைக் காரணியாக இருக்கிறது

மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் அவர்களைப் பராமரிப்போர், குடும்பத்தினர், சமூகத்தினர், அரசாங்கம் என்று பலரும் இதனால் உடல், உள, சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு உள்ளாகிறார்கள்.

காரணிகள்

முதுமை மறதி என்பது ஒரு குறிப்பிடத்தக்க நோய்க்குறியீடு (குறியீடுகள் மற்றும் அறிகுறிகளின் தொகுப்பு) இது மூளையின் தொழிற்பாட்டை பாதிக்கும் வேறு நோய்களின் வெளிப்பாடாகவே இருக்கின்றது. ஞாபகமறதி என்பது படிப்படியாக மூளையின் சிந்திக்கும் ஆற்றல், நினைவில் நிறுத்தல் போன்ற தொழிற்பாடுகள் குறைவடைந்து செல்வதைக் குறிக்கும். இந்த ஞாபக மறதிக்கு காரணமாக கூறப்படும் பொதுவான காரணிகள்.

  • அல்சைமர்ஸ் நோய்
  • மூளைக்கான குருதி வழங்கல் பாதிப்படைதல்
  • மூளைக் கட்டிகள்
  • தலையில் ஏற்படும் விபத்துக்கள்
  • தொற்றுக்கள்
  • நீண்ட கால, அதிகரித்த மதுபாவனை
  • அகஞ்சுரக்கும் தொகுதியின் நீர்குலைவு
  • விற்றமின் குறைபாடுகள்

நோய் அறிகுறிகள்

குறைந்தபட்சம் 6 மாத கால அளவுக்கு இந்த பாதிப்பு தொடர்ந்தால் மட்டுமே சோதனை மூலமாக இந்நோயைக் கண்டறிய முடியும். அறிகுறிகளில் சில:

பொதுவான அறிகுறிகள்:

  • தெரிந்த நபர்களின் பெயர், வாழ்விடம் மறந்து போதல்.
  • ஆரம்பத்தில் அண்மைக்கால சம்பவங்களே மறக்கும். பின் காலம் செல்லச் செல்ல பழைய சம்பவங்களும் மறந்து போகும்.
  • வயது மறந்து போகும்.
  • சொற்கள் மறந்து போகும்.
  • புதிய மனிதர்கள் அல்லது புதிய சூழலை சந்திக்கும்போது குழப்பம் ஏற்படும்.
  • நடத்தையில் மாற்றங்கள் ஏற்படும்.
    • அடிக்கடி கோபப்படல்
    • பொருத்தமற்ற பாலியல் வெளிப்பாடுகள்
    • தனிநல சுகாதார பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்க தவறுதல்
  • புதிய விடயங்களை அறிந்து கொள்வதில் சிரமம் ஏற்படல்.

இந்த அறிகுறிகள் மன அழுத்தம் போன்ற வேறு நோய்களின்போதும் ஏற்படலாம்.

நோயைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள்

ஒய்வு பெற்ற பின்னர்தான் எங்களில் பலர் மறதி நோயைப்பற்றி யோசிப்பதுண்டு. அப்போது அது காலங்கடந்த ஒன்றாகிவிடும்.

மறதி நோயைத் தவிர்க்க விரும்பினால் நீங்கள் 30-40 வயதுகளிலோ அல்லது அதற்கு முதலிலேயோ உங்கள் மூளையைக் கொஞ்சம் பராமரிக்கப் பழகியிருக்க வேண்டுமெனெ நிபுணர்கள் கருதுகிறார்கள்.

“உங்கள் மூளையின் ஆரோக்கியத்திற்கு வாழ்வியல் முக்கிய பங்காற்றுகின்றதென பற்பல ஆய்வுகளை மேற்கோள் காட்டி, பிற்ஸ்பேர்க் பல்கலைக்கழக மருத்துவக் கல்விநிலையத்தின் இணைப் பேராசிரியரும், நரம்பு-உளவள நிபுணருமான டாக்டர் போல் நுஸ்போம் கூறுகிறார்.

மறதி நோயைத் தடுக்க என்ன செய்யலாம்? சமீபத்தில் புளோறிடா வின்ரர்பார்க் ஹெல்த் ஃபவுண்டேசனுக்கு வழங்கிய பேச்சொன்றின் போது டாக்டர் நுஸ்போம் 20 ஆலோசனைகளைக் குறிப்பிடுகிறார்.

  1. தொண்டர்கள் தேவைப்படும் சங்கங்களிலோ அல்லது அமைப்புக்களிலோ சேர்ந்துகொள்ளுங்கள். இதனால், நீங்கள் ஓய்வு பெறும்போது மற்றவர்களால் ஒதுக்கப்பட்டவராக அல்லாமல், நிறைய நண்பர்களால் சூழப்பட்டிருப்பீர்கள்.
  2. பொழுது போக்கு செயற்பாடுகளைக் கற்றுக்கொள்ளுஙகள். சிக்கலான, மூளையைப் பாவிக்கும் விளையாட்டுக்கள் பல மூளையைப் பலப்படுத்துகின்றன.
  3. நீங்கள் வழமையாகப் பாவிக்காத கையைப் பாவித்து எழுதக் கற்றுக்கொள்ளுஙகள். தினமும், பல தடவைகள் செய்து பழக்கத்தில் கொண்டு வாருங்கள். இது உங்கள் மூளையின் எதிர்ப்பக்கத்திலுள்ள நரம்புக்கலங்களை இயக்கத்தில் வைத்திருக்கச் செய்கிறது.
  4. நடனம் கற்றுக் கொள்ளுங்கள். 500 பேர்களில் மேற்கொண்ட ஆய்வில், நடனமாடக் கற்றுக்கொண்டவர்களில், அல்சைமர் வியாதி உட்படப், பல மறதி நோய்களின் தாக்கம் மிகக்குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. வாரத்தில் 3 அல்லது 4 தடவைகள் நடனமாடுபவர்களில், வாரத்தில் ஒரு தடவை நடனமாடுபவர்களையோ அல்லது நடனமாடாதவர்களையோ விட 76 வீதம் மறதிநோயின் தாக்கம் குறைவாகவிருந்தது.
  5. தோட்டம் செய்யத் தொடங்குங்கள். நியூசீலந்தில் 1000 பேர்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம், ஒழுஙகாகத் தோட்டம் செய்பவர்களில் மறதிநோயின் பாதிப்புக் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. தோட்டம் செய்வது மன அழுத்தத்தைக் குறைப்பது மட்டுமல்லாது, தோட்டத்தை வடிவமைப்பதில் அவர்கள் தமது மூளையைத் தொடர்ந்தும் உபயோகப்படுத்துகிறார்கள்.
  6. நடவுங்கள். தினமும் நடப்பதன் மூலம் மூளைக்கு இரத்தச் சுற்றோட்டம் அதிகரிப்பதால் மறதி நோயின் பாதிப்பு குறைக்கப்படுகிறது. நடைமானி (pedometer) ஒன்றை வாங்கிக்கொள்வதன் மூலம் நாளொன்றுக்குப் 10,000 அடிகள் நடப்பதற்குப் பழகிக்கொள்ளலாம். பெரும்பாலான ‘ஸ்மார்ட் ஃபோன்களில்’ இதற்கான ‘அப்’ பை (app) இலவசமாகத் தரவிறக்கிக் கொள்ளலாம்.
  7. வாசிக்கப் பழகுங்கள். தினமும் வாசிக்கும்போது கிரகிக்கப்பட்ட தகவல்களைச் சேமிக்கவும், அவற்றைச் செயலார்றவுமென மூளையின் பல பகுதிகள் இயக்கம் பெறுகின்றன. அதே போல கற்பனையைப் பாவித்து எழுதுவதும் (பார்த்து எழுதுவதல்ல!) மூளையை இயக்க நிலையில் வைத்திருக்கிறது.
  8. பின்னப் பழகிக்கொள்ளுங்கள் (knitting). இரண்டு கைகளாலும் பின்னும்போது மூளையில் இரண்டு பக்கங்களும் இயக்க நிலையில் இருப்பது மட்டுமல்லாது அது மன அழுத்தத்தையும் குறைக்கிறது.
  9. புதிய மொழியொன்றைக் கற்றுக்கொள்ளுங்கள். அது வேற்று மொழியாகவோ அல்லது கைப் பாஷையாகவோ (sign language) இருக்கலாம், உங்கள் மூளை இரண்டு மொழிகளுக்கிடையே மறி மாறித் தாவிக்கொள்வதன் மூலம் மூளையின் பல பகுதிகள் இயக்க நிலையில் வைத்திருக்கப் படுகின்றது. இரண்டு மொழிகளைப் பயின்றவர்களில் அல்சைமர் நோயின் பாதிப்பு 4 வருடங்களால் குறைக்கப்படுவதாக இங்கிலாந்திலுள்ள ஆராய்ச்சியாளரொருவர் தெரிவிக்கின்றார். அத்தோடு, சிறுவயதிலேயே கைப்பாஷையைக் கற்றுக்கொள்ளும் ஒரு குழந்தையின் விவேகம் (IQ) பன்மடங்கு அதிகரிக்கிறது என இன்னுமொரு ஆய்வு கூறுகிறது. விவேகம் கூடியவர்களில் மறதிநோய் வருவது மிக மிகக் குறைவு.
  10. ‘ஸ்கிறபிள்’ (Scrabble), ‘ மொனோபொலி’ (Monopoly) போன்ற பலகை விளையாட்டுக்களை விளையாடுங்கள். இதன் போது உங்கள் மூளை இயக்கத்திலிருப்பது மட்டுமல்லாது நண்பர்களுடன் கூடி மகிழ்வீர்கள். கணனியில் விளையாடும் ‘சொலிற்றையர்’ (solitaire) போன்ற விளையாட்டுக்களும் மூளைக்கு நல்லது. இருப்பினும், சமூக ஊடாடலுடன் கூடிய விளையாட்டுக்களையே நுஸ்போம் ஊக்குவிக்கிறார்.
  11. வாழ்நாள் முழுவதும் எதையாவது கற்றுக்கொண்டே இருங்கள். கற்கை மூளையில் கட்டுமான மாற்றஙகளையும் (structural), இரசாயன மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது. அத்தோடு, கல்வி ஒருவரின் வாழ்நாளையும் அதிகரிக்கிறது. உயர் கல்விக்கான பட்டங்களைப் பெற்றவர்கள் நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கிறார்கள் என மூளை ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இவர்களில் அல்சைமர் வியாதி வந்தாலும் அது அவர்களின் மிக முதிய வயதுகளிலேயே வருகிறது என ஆய்வாளர் கருதுகிறார்கள்.
  12. சங்கீதத்தைக் (கர்நாடக) கேளுங்கள். இசை மூளையின் பல பகுதிகளிடையேயும் புதிய தொடுப்புகளை ஏற்படுத்துகிறது. எந்த விதமான இசையும் நல்லதாகவிருந்தாலும், கர்நாடக இசை பல நல்ல விளைவுகளைத் தருவதாக ஆய்வாளர் கண்டறிந்துள்ளனர்.
  13. இசைக் கருவியொன்றைப் பழகிக்கொள்ளுங்கள். முதுமையில் பழகுவது அவ்வளவு இலகுவாக இருக்காதெனினும், இயாகமில்லாத மூளையின் பகுதியொன்று திடீரென இயக்கம் கொள்ள இது உதவும்.
  14. பயணம் செய்யுங்கள். அது சுற்றுலாவாக இருந்தாலென்ன, அயலூருக்குச் சென்று வந்தாலென்ன பாதைகளைத் தீர்மானிப்பது முதல் அவற்றினூடு பயணம் செய்வதுவரை அது உங்களின் மூளைக்கு வேலை தருகிறது. லண்டன் நகரில் பணி புரியும் டாக்சி சாரதிகளுக்கு மூளையின் அளவு பெரிதெநக் கண்டறிந்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பல பயணங்களுக்கான தகவல்களைச் சேமித்து வைக்கப் பெரிய மூளைகள் தேவைப்படுகின்றது.
  15. தினமும் கடவுளைத் தொழுகை செய்துவாருங்கள். தினமும் கடவுளை வணங்கும்போது உடலின் நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. வழக்கமாகத் தொழுகையை மேற்கொள்பவர்கள் நீண்ட ஆயுளைக் கொண்டவர்களாகவும், மகிழ்ச்சியோடும் அரோக்கியத்தோடும் இருப்பவர்களாகவும் அறியப்பட்டுள்ளது.
  16. தியானம் செய்யப் பழகுங்கள். தியானம் செய்வதன் மூலம் தினமும் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.
  17. போதுமான அளவுக்குத் தூங்குங்கள். தடைப்படும் தூக்கத்துக்கும் மறதிநோய்க்கும் தொடர்புள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
  18. ஒமேகா-3 கொழுப்பமிலத்தைக் கொண்ட உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள். (Salmon, sardines, tuna, ocean trout, mackerel or herring). வால்நட் (இதில் மீனை விட அதிகம் ஒமேகா-3 இருக்கிறது), ஃபிளக்சீட் எண்ணை, மீன் ஈரல் எண்ணை, வால்நட் எண்ணை ஆகியனவும் ஒமெகா-3 அதிகமுள்ள உணவு வகைகள்.
  19. அதிகம் பழஙகள், மரக்கறி வகைகளைச் சாப்பிடுங்கள். மூளையின் கலங்களை அழிக்கும் ஃபிறீ றடிக்கல்ஸ் (free radicals) எனப்படும் பதார்த்தங்களைத் துப்புரவு செய்யும் ‘அன்ரி ஒக்ஸிடன்ற்ஸ்’ (antioxidants) பழங்கள், மரக்கறிவகைகளில் அதிகம் கிடைக்கிறது.
  20. ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது குடும்பத்தரோடோ அல்லது நண்பர்களோடோ இருந்து உணவருந்துங்கள். சமூக ஊடாடலுடன் அருந்தும் உணவு நல்லதாக அமைவது வழக்கம். தனியேயோ அல்லது பயணம்செய்யும்போதோ அருந்தும் உணவு பொதுவாக ஆரோக்கியமாக இருப்பது குறைவு.

If you don’t use it you will lose it (பாவிக்காது போனால் அது உங்களை விட்டகன்றுவிடும்) என்றொரு ஆங்கிலப் பழமொழியொன்றுண்டு. அது நமது மூளைக்குத்தான் மிக மிகப் பொருந்தும்.

Print Friendly, PDF & Email