மார்புப் புற்றுநோயைத் துல்லியமாகக் கண்டுபிடிக்கும் ‘செயற்கை விவேகம்’ (Google AI)

எக்ஸ்றே, சீ.ரீ.ஸ்கான், எம்.ஆர்.ஐ. போன்ற மருத்துவப் பரிசோதனைகளின் மூலம் பெறப்படும் பிம்பங்களை (images) ஆராய்ந்து கருத்துச் சொல்லும் மருத்துவ நிபுணரை (Radiologists) விடவும் மிகவும் ‘செயற்கை விவேகத்’ தொழில்நுட்பத்தைப் பாவித்து கணனிகள் இப் பிம்பங்களை மிகவும் துல்லியமாக ஆராய்ந்து நோயறிகுறிகளை இனம்கண்டுகொள்வதாக ஆராய்ச்சியொன்று கூறுகிறது.

Breast Cancer – Image Courtesy: NDTV

இந்த ஆராய்ச்சியின்போது, பெண்களின் மார்பகப் புற்றுநோயைப் பரிசோதிக்கும் ‘மமோகிராம்’ (mammograms) சோதனையின்போது பெறப்பட்ட பிம்பங்களை கூகிள் நிறுவனத்தின் செயற்கை விவேக நிபுணர்களிடமும் அதே வேளை மருத்துவ நிபுணர்களிடமும் கொடுத்து ஆராயந்து முடிபுகளை எட்டும்படி கோரியிருந்தார்கள். அப்போது கணனியின் பெறுபேறுகளும் மருத்துவர்களின் பெறுபேறுகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல என்பது தெரிய வந்தது. அதே வேளை புற்றுநோய் இல்லாதவர்களுக்குப் புற்றுநோயுண்டென்று (false positive) சொல்வதைத் தவிர்ப்பதில் கணனிகள் மனிதரைவிடத் திறமையாகச் செயற்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் பெறுபேறாக, மார்பகப் புற்றுநோயைக் கண்டுபிடிப்பதற்கு இத் தொழில்நுட்பத்தைப் பாவிப்பது பற்றி மருத்துவ நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றார்கள். எட்டுப் பெண்களில் ஒருவரை இந் நோய் பீடிக்கிறது எனப் புள்ளிவிபரங்கள் சொல்கின்றன.

இந்த ஆராய்ச்சியை அமெரிக்க, பிரித்தானிய விஞ்ஞானிகள் மேற்கொண்டிருந்தனர். ‘Nature‘ என்னும் சஞ்சிகையில் இவ்வாராய்ச்சி பற்றிய கட்டுரை வெளிவந்திருக்கிறது.

மமோகிராம் பரிசோதனையின்போது 20 வீதமான ‘புற்றுநோய்’ அறிகுறிகளை மருத்துவ நிபுணர்கள் தவற விடுகின்றனர் எனவும் இவர்களால், 10 வருட காலத்தில் பரிசோதிக்கப்பட்டு புற்றுநோயாளிகளென அடையாளம் காணப்பட்ட பெண்களில் 50 வீதமானோருக்கு நோயிருக்கவில்லை (false positive) எனவும் அமெரிக்க புற்றுநோய்க் கழகம் கூறுகிறது.

 

கூகிள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான Alpahbet Inc. உடன் கடந்த செப்டம்பர் மாதம் இணந்துகொண்ட DeepMind எனப்படும் செயற்கை விவேக நிறுவனம் இத் தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறது. லண்டன் இம்பீரியல் கொல்லிஜ் மற்றும் பிரித்தானிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய சுகாதார சேவைகள் திணைக்களம் ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இன் நிறுவனத்துடன் இணைந்து இத் தொழில்நுட்பத்தை உருவாக்கியிருந்தனர். இவர்கள் பிரித்தானியாவிலிருந்து 25,856 மமோகிராம் பரிசோதனைகளையும், அமெரிக்காவிலிருந்து 3,097 மமோகிராம் ப்ரிசோதனைகளையும் தமது ஆய்வுக்குட்படுத்தியிருந்தனர்.

இவ்வாய்வின் போது, செயற்கை விவேகத் தொழில்நுட்பம் நிஜமான மருத்துவ நிபுணர்களுக்குச் சமமாக நோய்களைக் கண்டறிந்தனவென்றும் ஆனால் செ.வி., மருத்துவர்களைவிடக் குறைவாகவே தவறிழைத்திருந்தனவென்றும் (false positives) தெரியவந்தது.

அதே வேளை, நோயிருப்பவர்களுக்கு நோயில்லை என்று அடையாளம் காணப்படும் (false negatives) விடயங்களிலும் மருத்துவ நிபுணர்களை விட செ.வி. குறைவாகவே தவறிழைத்திருந்தது.

மமோகிராம் பிம்பங்களை ஆராய்வதில் தற்போது மருத்துவநிபுணர்கள் செயற்படும் விதங்களும் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுகிறது. அமெரிக்கா, கனடாவில் ஒரு மருத்துவ நிபுணரே ஒரு பிம்பத்தைப் பார்த்து முடிவெடுப்பார். பிரித்தானியாவில் ஒரு பிம்பத்தை இரண்டு வெவ்வேறு மருத்துவ நிபுணர்கள் ஆராய்வார்கள். இவர்களில் உடன்பாடு காணப்படாவிடில் மூன்றாமவரிடம் அது கையளிக்கப்படும்.

பிறிதொரு ஆய்வில், ஆறு மருத்துவ நிபுணர்களையும் (radiologists) செயற்கை விவேகக் கணனியையும் ‘போட்டிக்கு’ மமோகிராம் பிம்பங்களைக் கொடுத்துப் பரிசோதித்தார்கள். அதன் போதும் மருத்துவர்களை செ.வி. இலகுவில் வென்றுவிட்டது.

மருத்துவர்கள் நோயறிவதற்குக் கணனிகளைப் பாவிப்பது இதுதான் முதல் தடவையல்ல. கூகிள் மட்டுமல்ல வேறு பல செ.வி. தொழில்நுட்பங்கள் இத் துறையில் செயற்பட்டு வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவற்றின் முடிவுகள் ஒத்துப்போகின்றன. இருப்பினும் அந்தப் பிம்பங்களை எடுத்துத் தரும் இயந்திரங்கள் எவ்வளவு துல்லியமான பிம்பங்களைத் தருகின்றன என்பதிலும் இப் பெறுபேறுகள் தங்கியுள்ளன என்கிறார் மசசூசட் பொது வைத்தியசாலையைச் சேர்ந்த கொணி லெஹ்மான்.

Print Friendly, PDF & Email