மார்பகப் புற்றுநோயைத் தீர்க்கிறது தேனீ விஷம்!

 
 

செப்டம்பர் 3, 2020: தேனீக்களில் காணப்படும் விஷம் சில வகை மார்பகப் புற்றுநோய்களை அழிக்கிறது என அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஆய்வுகூடப் பரிசோதனைகளில், தேனீ விஷத்தில் காணப்படும் கூட்டுப்பொருளான மெலெட்டின் என்னும் பதார்த்தத்தை இரண்டு வெவ்வேறு வகையான மார்பகப் புற்றுநோய்க் கலங்களுடன் சேர்த்தபோது அப்புற்றுநோய்க் கலங்கள் அழிக்கப்பட்டிருந்ததை விஞ்ஞானிகள் அவதானித்துள்ளனர். Triple-negative மற்றும் HER2 -enriched ஆகிய இவ்விரண்டு புற்றுநோய் வகைகளும் சிகிச்சைகளினால் மாற்றுவதற்கு மிகவும் கஷ்டமானவை எனக் கூறப்படுகிறது.

ஆய்வுகூட சூழலில் புற்றுநோய்க் கலங்களை அழிக்கவல்ல ஆயிரத்துக்கும் மேற்பட்ட இரசாயன பதார்த்தங்கள் இருந்த போதிலும் அவற்றை மனிதரில் சிகிச்சைக்காகப் பிரயோகிக்க முடியாத நிலையில் உள்ளது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனவே இக் கண்டுபிடிப்பு பற்றி அவர்கள் மிக மகிழ்ச்சியுற்ற போதிலும் இது தொடர்பாக மேலும் ஆராய்ச்சிகள் தேவை என அமைதியாகக் கூறுகின்றனர்.

மெலநோமா போன்ற வேறு வகைப் புற்றுநோய்களின் சிகிச்சைக்கு தேனீ விஷம் ஏற்கெனவே பரீட்சிக்கப்பட்டு வருகிறது. 300க்கும் மேற்பட்ட தேநீக்கள் இப் பரிசோதனைக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

“தேனீயின் விஷம் மிகவும் மோசமான ஒன்று. செறிவான அளவில், இதர மனிதக் கலங்களை அதிகம் பாதிக்காமல் ஒரு மணித்தியாலத்தில் புற்றுநோய்க் கலங்களைக் கொன்றுவிடுகிறது” என்கிறார் இவ்வாராய்ச்சிக்குத் தலைமை தாங்கும் சியாறா டஃபி.

அத்தோடு, தேனீ விஷத்தில் காணப்படும் மெலிட்டின் என்ற பதார்த்தம் புற்றுநோய்க் கலங்களின் வளர்ச்சியை நிறுத்திவிடும் வல்லமையைக் கொண்டதும்கூட என இவ்வாராய்ச்சியாளர் தெரிவிக்கின்றனர்.

மெலிட்டின் என்ற இப் பதார்த்தம் தேனீக்களில் இயற்கையாக உற்பத்தி செய்யப்படுகின்றதாயினும், அதைச் செயற்கையாகவும் தயாரிக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.


 

பொதுவாக, மார்பகப் புற்றுநோய்களில் 10-15% மானவை Triple-negative மார்பகப் புற்றுநோய் வகையினதாகும். அறுவைச் சிகிச்சை, கதிரியக்கம், கீமோதெறாப்பி ஆகிய முறைகளினால் இவ்வகைப் புற்றுநோய்களுக்குச் சிகிச்சையளிக்கப்படுகிறது.

“புற்றுநோய்க் கலங்களின் இனப்பெருக்கத்தை மெலிட்டின் தடைசெய்கிறது என்பது மிகப்பெரியதொரு கண்டுபிடிப்பு. இயற்கையில் இருக்கும் பல பதார்த்தங்களை மனித நோய்களுக்குச் சிகிச்சைக்காகப் பயன்படுத்தலாம் என்பதற்கு இது நல்லதொரு உதாரணம்” என்கிறார் பேராசிரியர் பீட்டர் கிளின்கென்.

“பல பதார்த்தங்கள் ஆய்வுகூடச் சூழலிலும், விலங்குப் பரிசோதனைகளிலும் புற்றுநோய்க் கலங்களைக் கொல்வது என்பது அறிப்பட்ட ஒரு விடயம். ஆனால் அவை மனிதர்களில் வெற்றி பெறுமா என்பது பொறுத்திருந்து பார்க்கப்படவேண்டிய ஒரு விடயம் என்கிறார்கள் சிட்னியைச் சேர்ந்த கர்வன் மெடிக்கல் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த பேராசிரியர் அலெக்ஸ் ஸ்வார்பிரிக்.

Print Friendly, PDF & Email