மலேரியாவுக்குத் தடுப்பு மருந்து
77% செயற்பாட்டுத் திறனுடைய மலேரியா நோய்க்கான தடுப்பு மருந்தொன்றை ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆபிரிக்காவில் வருடமொன்றுக்கு 400,000 பேர், இவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள், மலேரியாவுக்கு இரையாகிறார்கள். இந் நோய்த்தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க, கடந்த பல வருடங்களாகப் பல தடுப்பு மருந்துகள் பாவனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டாலும், இந்த மருந்து ஒன்றே எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகளைக் கொடுத்துள்ளது எனப்படுகிறது. இத் தடுப்பு மருந்து பொதுமக்கள் சுகாதாரத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துமெனத் தாம் நம்புவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பேர்க்கினோ ஃபாசோ நாட்டில், 450 குழந்தைகளில் இத் தடுப்பு மருந்து பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட்போது அது உயிராபத்தை விளைவிக்கவில்லை எனவும், 12 மாதங்களுக்குப் பிறகும் அவர்களது உடல்களில் நோயெதிர்ப்பு சக்தி போதுமான அளவு காணப்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நான்கு ஆபிரிக்க நாடுகளில், 5 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான, 5,000 குழந்தைகளில் இம் மருந்தைப் பரிசோதனை செய்யத் தற்போது திட்டமிடப்பட்டு வருகிறது.
உயிராபத்தை விளைவிக்கக்கூடிய மலேரியா நோய், நுளம்புகள் கடிக்கும்போது அவற்றின் உமிழ்நீரினூடு எமது உடலுக்குள் செலுத்தப்படும் ஒரு வகை ஒட்டுண்ணியினால் சம்பவிக்கிறது. தடுக்கக்கூடியதானதும், சிகிச்சையளிக்கக்கூடியதானதுமாக இருந்தும்கூட, 2019 இல் மட்டும், இந் நோய் உலகம் பூராவும் 229,000 மில்லியன் மக்களைத் தொற்றி அவர்களில் 409,000 பேரைக் கொன்றிருக்கிறது என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
காய்ச்சல் (சுரம்), தலைவலி, குளிர் நடுக்கம் ஆகிய அறிகுறிகளுடன் ஆரம்பிக்கும் இந்நோய், உரிய காலத்தில் முறையான சிகிச்சையளிக்கப்படாவிட்டால், மிகத் தீவிரமான நிலைக்கோ அல்லது மரணத்திற்கோ இட்டுச் சென்றுவிடும்.
உலக சுகாதார நிறுவனத்தின் இலக்கான 75% செயற்பாட்டுத் திறனை (அதாவது இம் மருந்து கொடுக்கப்பட்ட 100 பேரில் 75 பேருக்கு நோய் தொற்றிக்கொள்ளவில்லை) முதன் முதலாக நிரூபித்த மருந்து இதுவென, இவாராய்ச்சியைச் செய்த ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஜென்னெர் இன்ஸ்டிடியூட்டின் பணிப்பாளரும், தடுப்பு மருந்து துறையில் பேராசிரியருமான ஏட்றியன் ஹில் தெரிவித்துள்ளார்.
இதுவரை பாவனைக்கு வந்துள்ள மலேரிய தடுப்பு மருந்துகளால் அதியுச்சம் 55% செயற்பாட்டுத்திறனையே தர முடிந்திருக்கிறது.
கோவிட் தடுப்பு மருந்தை அஸ்ட்றா செனிக்கா நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பதற்கு வெகு காலத்திற்கு முன்னதாக, 2019 இல் இம் மலேரிய தடுப்பு மருந்து ஆராய்ச்சி ஆரம்பமாகியிருந்தது. எனினும் கொறோணாவைரஸில் இருக்கும் மரபணுக்களின் எண்ணிக்கையைவிட மலேரியா வைரஸில் காணப்படும் மரபணுக்கள் அதிகமென்பதால் அதைத் தாக்கியழிக்க பலமான எதிர்ப்பு சக்தியை உடல் தயாரிப்பதற்கு நாம் தூண்டவேண்டியுள்ளது என்கிறார் பேராசிரியர் ஹில்.
இப் பரிசோதனைகள், பேர்க்கினோ ஃபாசோ நாட்டில் மலேரியா பருவம் ஆரம்பிப்பதற்கு முன்னர், மே முதல் ஆகஸ்ட வரை, குழந்தைகளில் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் நோய் உச்சம் காண்பது வழக்கம். இக் குழந்தைகள் சிலரில் குறைந்த அளவு மருந்தும், சிலரில் கூடிய அளவு மருந்தும் (டோஸ்) கொடுக்கப்பட்டன. கூடிய அளவு மருந்தைப் பெற்றவர்களில் செயற்பாட்டுத்திறன் 77% மும் குறைந்த அளவைப் பெற்றவர்களில் அது 71% மும் இருப்பது அவதானிக்கப்பட்டது.
இவ்வாராய்ச்சியில் பங்குபற்றிய நனோறோ, பேர்க்கினோ ஃபாசோவைச் சேர்ந்த ஒட்டுண்ணியியல் பேராசிரியர் ஹலிடோ ரின்ரோ, “நாம் எதிர்பார்த்ததை விடவும் பிரமாண்டமான வெற்றியை இம்மருந்து தந்திருக்கிறது எனவும், விரைவில், பல்லாயிரக்கணக்கானவர்களில், இப் பரிசோதனையின் 3ம் கட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது” எனவும் கூறுகிறார் பேராசிரியர் ரின்ரோ.
ஆபிரிக்காவில், சென்ற வருடம் கொறோணாவைரசால் இறந்தவர்களை விட மலேரியாவால் இறந்தவர்கள் அதிகம்.
இந்தியாவின் பிரபலமான மருந்து தயாரிக்கும் நிறுவனமான சேரம் இன்ஸ்டிடியூட் மலேரிய தடுப்பு மருந்துகளையும் தயாரிக்கிறது. பாவனைக்கான அங்கீகாரம் கிடைத்ததும் தாம் 200 மில்லியன் டோஸ்கள் மருந்தைத் தயாரிக்கவுள்ளதாக அது தெரிவித்துள்ளது.
No related posts.