மரபணுச் சிகிச்சை மூலம் பார்வை பெற்ற சிறுவன்
மேலும் பல வியாதிகளுக்கு தீர்வாகலாம்?
பிறப்பிலிருந்து பார்வையை இழந்த 14 வயதுச் சிறுவன் ஒருவருக்கு மருத்துவர் ஒருவர் பார்வையை மீளப்பெற்றுக்கொடுத்த அற்புதமொன்று அமெரிக்காவில் நிகழ்ந்திருக்கிறது. அமெரிக்காவின் மயாமி பல்கலைக்கழக வைத்தியசாலையின் பாமர் கண் சிகிச்சை நிலையத்தில் பணியாற்றும் டாக்டர் அல்ஃபோன்சோ சபேற்றரும் அவரது குழுவும் மேற்கொண்ட இப்பரீட்சார்த்த சிகிச்சை வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. கியூபாவிலிருந்து விசேட விசாவில் அமெரிக்கா வந்த 14 வயதுடைய சிறுவன் அன்ரோனியோ வென்ரோ கார்வஹால் என்பவரே இந்த அதிர்ஷ்டம் பெற்ற நோயாளியாவார்.
அன்ரோனியோ பிறப்பிலிருந்தே இரு கண்களிலும் பார்வைகளை இழந்தவர். மரபணுப் பிறழ்வின் மூலம் கண்களுட்பட இவரது உடல் முழுவதும் தோலில் வெடிப்புகள் (blisters) ஏற்பட்டிருந்தது (dystrophic epidermolysis bullosa). பொதுவாக பிறழ்வுற்ற மரபணுவைத் தேடிக் கண்டுபிடித்து நேர்த்தியாக்குவதே இதற்கான சிகிச்சை. கிறிஸ்பெர் (CRISPR) என்னும் சிகிச்சை மூலம் பழுதுபட்ட மரபணுக்களை வெட்டி எடுத்துவிட்டு புதிய மரபணுவை இணைக்கும் மரபணுச் சிகிச்சை முறை ( gene therapy) ஏற்கெனவே நடைமுறையிலிருந்தும் அம்முறை இங்கு பயன்படுத்தப்படவில்லை. மாறாக பொதுவாக கண் வியாதிகளுக்குப் போடும் திரவமுறையினாலேயே (eye drops) அன்ரோனியோவுக்கு சிகிச்சையளித்திருக்கிறார்கள். இப்படியான சிகிச்சை உலகில் முதலாவதாக அன்ரோனியோவுக்கே அளிக்கப்பட்டது.
இந்நோய் வெகு அருமையாகவே காணப்படுகிறது. உலகில் ஏறத்தாழ 3,000 பேருக்கு இவ்வியாதி உண்டு. கட்கோளத்தின் சுவர்களில் தசை வெடிப்பு காரணமாக வளரும் தசைகள் விழித்திரைகளை மூடிவிடுவதனால் பார்வை இழக்கப்படுகிறது. ஏற்கெனவே அறுவைச்சிகிச்சை மூலம் அன்ரோனியோவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது எனினும் இத்தசைகள் மீண்டும் விரைவாக வளர்ந்து மூடிவிடுகின்றன. இதன் பிறகு டாக்டர் சபேற்றர் இம்மரபணுச் சிகிச்சை முறையை அன்ரோனியோவுக்கு அளித்தார். இம் மருந்து அமெரிக்காவின் உணவு, மருந்து நிர்வாகத்தால் (FDA) இன்னும் அங்கீகரிக்கப்படாத ஒன்று. ஆனால் பரீட்சார்த்த ரீதியாக அன்ரோனியோவில் பிரயோகிக்கவென டாக்டர் சபேற்றர் அனுமதியைப் பெற்று இச்சிகிச்சையை மேற்கொண்டிருந்தார்.
வழமையான மரபணுச் சிகிச்சையில் போல மரபணு (DNA) இங்கு நிரந்தரமான மாற்றத்துக்குள்ளாவதில்லை. கண்களுக்கு பிரயோகிக்கப்படும் திராவகம் உள்ளே வளரும் தசையின் வளர்ச்சியைத் தாமதப்படுத்துகிறது. எனவே இச்சிகிச்சை தொடர்ந்தும் பிரயோகிக்கப்பட வேண்டும்.தற்போது அன்ரோனியோவுக்கு இரண்டு கண்களிலும் பார்வை மீளப்பெறப்பட்டுவிட்டது.
கடந்த இரண்டு வருடங்களாக இம்மருந்து எலிகளில் பரிசோதிக்கப்பட்டது எனினும் பாதுகாப்பு கருதி மனிதர்களில் பிரயோகிக்க அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. அன்ரோனியோவிற்காகப் பிரத்தியேக அனுமதியை வழங்கியிருந்தது. ஒரு குறிக்கப்பட்ட மரபணுவில் ஏற்படும் விகாரம் (mutation) காரணமாக அது உற்பத்தியாக்கும் புரதம் ஒன்று இப்பிறழ்வுக்குக் காரணமாகிறது. செயலிழக்கப்பட்ட ஹேப்பிஸ் சிம்பிலேக்ஸ் வைரஸ் மூலம் பிறழ்வற்ற மரபணுக்களை வழங்குவதே இச்சிகிச்சை முறை.
அஒன்ரோனியோவின் சிகிச்சை வெற்றிபெற்ற படியால் இதே சிகிச்சை முறையை இதர நோய்களுக்கும் பிரயோகிக்கலாம் என்பது டாக்டர் சபேற்றர் குழுவின் நம்பிக்கை. (Image Credit: AP)