மனித உடலுறுப்புக்களை விலங்குகளில் வளர்த்து அறுவடை செய்தல்

மரபணு மாற்றத்தில் சீனாவின் பரிசோதனைகள்

குரங்கின் மரபணுக்களைப் பன்றியில் உட்புகுத்தி உறுப்புக்களை உருவாக்கச் சீன விஞ்ஞானிகள் முயற்சி

வியாதிகளைக் குணப்படுத்தும் முயற்சிகளில், சமீப காலங்களில், மரபணுக்களில் மாற்றம் செய்யும் பரிசோதனைகளைப் பல நாடுகளிலுமுள்ள விஞ்ஞானிகள் செய்துவருகிறார்கள்.

‘மரபணுப் பரிசோதனைகள்’ செய்யப்படுவது இது தான் முதல் தடவையல்ல. சிறந்த மனித இனத்தை உருவாக்கவேண்டுமென்பதற்காக (இதன் பின்னால் ஒளிந்திருக்கும் இனவாதம் பற்றி இன்னுமொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்) 1883 இல் சேர் பிரான்சிஸ் கால்ற்றன் ‘சிறந்த இனங்கள் தமக்குள் கலந்து கொள்வதால் மட்டுமே சிறந்த இனத்தைத் தக்கவைத்துக் கொள்ளலாம்’ (selective breeding) என்ற கோட்பாட்டை முன்வைத்துச் செயலாற்றியவர். இப் பிரித்தானியக் கல்விமான் கூர்ப்பு மேதை சார்ள்ஸ் டார்வின் அவர்களின் மைத்துனருமாவார்.

நவீன கருவிகளின் கண்டுபிடிப்பிற்குப் பிறகு, கலங்களின் மூலக்கூறாகிய மரபணுக்களை நேரடியாக அணுகி அவற்றில் மாற்றங்களைச் செய்யுமளவிற்கு விஞ்ஞான யுகம் வளர்ந்துவிட்டது.

நிறமூர்த்தங்கள் (Chromosomes)

ஒரு மனிதனின் கலமொன்றில் 23 சோடிகள் (46) நிறமூர்த்தங்கள் (chromosomes) உண்டு. அவரைக் காய்களுக்கு இவற்றை உவமானமாகக் கொள்ளலாம். அவரைக் காய்களில் அடுக்கப்பட்டிருக்கும் விதைகள் போல் (அடுக்கப்படும் முறைகளில் வித்தியாசமுண்டு) மரபணுக்களை நாம் உவமானம் கொள்ளலாம். ஒரு நிறமூர்த்தத்தில் பல்லாயிரக்கணக்கான மரபணுக்கள் உண்டு. இந்த மரபணுக்களிலேயே எமது குணாதிசயம், பருமன், உயரம், தோற்றம், அழகு எல்லாமே பதியப்பட்டுள்ளன. ஆணும் பெண்ணும் உறவாடுவதன்மூலம் உருவாகும் கரு இந்த இருவரின் மரபணுக்களையும் கலந்த ஒரு புதிய நிறமூர்த்தங்களைக் கொண்ட கலந்து குழந்தையாக ஒருவாகும்.

சமீப காலங்களில் விஞ்ஞானிகள் கருக்களை வெளியிலெடுத்து ஆய்வுகூடங்களில் அம்மரபணுக்களில் மாற்றங்களைச் செய்துவிட்டு மீண்டும் தாயின் கர்ப்பப்பைக்குள் அவற்றைப் புகுத்தி சாதாரண மகப்பேறு போல் குழந்தைகளை / குட்டிகளைப் பெறச் செய்கிறார்கள்.

சீனாவில் நடந்த பரிசோதனை

சமீபத்தில் சீனாவில் விஞ்ஞானிகள் குழுவொன்றினால் மேர்கொள்ளப்பட்ட இப்படியான பரிசோதனையொன்றின்போது குரங்கின் மரபணுவினைக்கொண்ட பன்றிகள் இரண்டு உருவாக்கப்பட்டன. அவை பன்றிகள் போலவே தோற்றத்தைக் கொண்டிருந்தனவெனினும், குறைந்தளவு பங்கு சைனோமோல்குஸ் இனக் குரங்கின் கலங்களையும் அவை கொண்டிருந்தன. சில நாட்கள் மட்டுமே அவை உயிருடன் இருந்தனவெனினும் அவை முழுமையான கர்ப்பத் தவணையை முடித்து உயிருடன் பிறந்தவை என்ற வகையில் அதையும் ஒரு சாதனையாகவே விஞ்ஞானிகள் பார்க்கிறார்கள்.

இப் பரிசோதனையின் நோக்கம் மனித உறுப்புக்களை இதர விலங்குகளின் உடலில் வளர்த்தெடுப்பதுவே என பேய்ஜிங்கிலுள்ள ‘ஸ்ரேற் கீ ஆய்வுகூடத்தில் ஸ்ரெம் செல் பற்றிய ஆய்வுகளை பேற்கொள்ளும் விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

சீனாவில் உறுப்ப மாற்று சிகிச்சைக்காக எதிர்பார்த்திருக்கும் நோயாளிகள் அதிகம் பேருள்ளார்கள். அவர்களின் தேவைகளை நிவர்த்திசெய்வதற்குத் தேவையான உடலுறுப்புக்களை ஆய்வுகூடத்தில் விருத்தி செய்துகொள்வதே இந்த ஆராய்ச்சியின் நோக்கம்.

இந்தக் குறிப்பிட்ட ஆராய்ச்சியின்போது சைனோமொல்குஸ் குரங்கின் கலங்களை ஆய்வுகூடத்தில் மாற்றி அவை GFP எனப்படும் ஒளிரும் புரதமொன்றை (flourescent protein) உருவாக்கினார்கள். பின்னர் இக் கலங்களைப் பின்பற்றுவதன் மூலம் அடுத்த பரம்பரைக்குத் தாவுகின்றதா என அவதானித்தார்கள். இதே போன்று குரங்கின் முளையத்திலுள்ள ஸ்ரெம் செல்களை (embryonic stem cells) மாற்றி பன்றி கருவுற்று 5 நாட்களின்பின் அவற்றின் கருவில் உட்புகுத்தினார்கள்.

இப்படியாக 4000 கருக்கள் மாற்றம்செய்யப்பட்ட ஸ்ரெம் செல்களை உட்கொண்டிருந்தன. அதன் பலனாகப் பத்து மன்றிக்குட்டிகள் பிறந்தனவெனவும் அவற்றில் இரண்டு குரங்கினத்தைச் சார்ந்தவையாக இருந்தனவெனவும், ஒரு வாரத்துள் எல்லாக் குட்டிகளும் இறந்துவிட்டன எனவும் இவ் விஞ்ஞானிகள் தெரிவித்தார்கள்.

குரங்கினக் குட்டிகளில், இருதயம் (heart), கல்லீரல் (liver), மண்ணீரல் (spleen), நுரையீரல் (lungs) தோல (skin) ஆகிய உறுப்புக்கள் மிகச் சிறிய பங்கு குரங்கின் கலங்களைக் கொண்டிருந்தது அவதானிக்கப்பட்டது.

இக் குட்டிகள் இறந்ததற்குக் காரணம் செயற்கை முறைக் கருத்தரிப்பாக இருக்கலாமென விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். மனிதர்களில் போலல்லாது, பன்றிகளில் செயற்கைமுறைக் கருத்தரிப்பு வெற்றிகரமாக அமைவதில்லையென்பது ஏற்கெனவே அறியப்பட்ட விடயம்.

குட்டிகள் அதிக அளவு குரங்கின் கலங்களைக் கொண்டிருக்கும் நோக்கத்தில் ஆராய்ச்சி தொடர்ந்தும் நடைபெறுமெனவும், முற்று முழுதாகக் குரங்கின் உறுப்புகளைப் பன்றியில் உருவாக்கிவிட்டால் அடுத்து மனித உறுப்புக்களை இதெ வழியில் பன்றிகளில் வளர்த்துக்கொள்ளலாமென இவ் விஞ்ஞானிகளில் ஒருவரான ஹாய் கூறுகிறார்.

இதர ஆராய்ச்சிகள்

2010 இல் ஸ்ரான்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஹிறோமிட்சு நாகோச்சி இதே போன்று ஒரு எலியினத்தின் சதயத்தை (pancreas) இன்னுமொரு எலியினத்தில் வளர்க்க முயற்சி செய்தராயினும் அதில் அவர் வெற்றி பெறவில்லை.

2017 இல் ஹுவான் கார்லோஸ் இஸ்பிசுவா பெல்மோண்டெ யின் குழு கலிபோர்ணியாவிலுள்ள சால்க் நிறுவனத்தில் பன்றி-மனிதக் கலப்பினத்தை உருவாக்கியிருந்தார்கள். அதிலும் கிட்டத்தட்ட 100,000 மனிதக் கலங்கள் மட்டுமே உருவாக்கப்பட்டன. இப் பரிசோதனையின்போது உருவாக்கப்பட்ட கரு ஒரு மாதத்துக்கு மட்டுமே உயிரோடு இருக்கும் வகையில் வளர்க்கப்பட்டது. காரணம் முற்றாக வளர்ந்த பன்றியின் மூளை மனித மூளையாக இருக்கக்கூடிய சாத்தியங்கள் அதிகமாக இருந்தது எனவும் அது தவறான நெறிமுறைக்கு (ethical) வழிவகுக்குமென அவ்வாராய்ச்சி நிறுத்தப்பட்டதெனவும் கூறப்படுகிறது.

இதனாலேயே ஹாய் யின் குழுவினர் மனிதக் கலங்களுக்குப் பதிலாக குரங்கின் கலங்களைப் பாவித்தார்கள். இதன்போது உருவாக்கப்பட்ட குரங்கின் கலங்கள் முந்தைய ஆராய்ச்சியின்போது உருவாக்கப்பட்ட மனிதக்கலங்களின் எண்ணிக்கையையைவிட அதிகமெனினும், இன்னும் அவை போதாது எனவே கருதப்படுகிறது.

வினைத்திறன் குறைந்ததும், உயிரிழப்புக்களைக் கொண்டதுமான இவ்வகையான ஆய்வுகள் மூலம் வெற்றிகரமாக மனித உறுப்புக்களை இதர விலங்குகளில் உருவாக்கிவிட முடியுமெனத் தாம் நம்பவில்லையென கலிபோர்ணியாப் பல்கலைக்கழகக் கல உயிரியல் விஞ்ஞானியான போல் நோப்பிளெர் கூறுகிறார்.

கதைகளில் வரும் மனிதக் குதிரைகள் விரைவில் எங்கள் தெருக்களில் பவனி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Print Friendly, PDF & Email