மந்தை நிர்ப்பீடன (Herd Immunity) விஷப் பரீட்சையில் வென்றது யார்?

சிவதாசன்

தொற்றுக்களை ஏற்படுத்துவதன் மூலம் மக்கள் தாமாகவே தமது நோயெதிர்ப்பாற்றலை விருத்தி செய்து கொள்ள வேண்டுமெனவும், மக்களை வீடுகளில் அடைத்து வைக்கத் தேவையில்லை எனவும் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அறிவித்திருந்தார். சுய தொற்றுக்களின் மூலம் மக்கள் தமது நிர்ப்பீடன ஆற்றலை விருத்தி சேயும் நடைமுறையை ‘மந்தை நிர்ப்பீடனம்’ (herd immunity) என அழைப்பார்கள்.

இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மக்கள் கொத்துக் கொத்தாக மரணித்துக்கொண்டிருக்கும் வேளையில், ஐரோப்பாவில் இந் நடைமுறையைப் பின்பற்றிய ஒரே நாடு பிரித்தானியா தான். இவ் விடயத்தில் லண்டன் இம்பீரியல் கல்லூரியின் பிரபல ஆராய்ச்சியாளர், பேராசிரியர் நீல் ஃபெர்குசன் அரசாங்கத்துக்கு வழங்கிய ஆலோசனையின் பேரில் பிரதமர் ஜோன்சன், சுகாதார அமைச்சர் ஹனொக் ஆகியோர், பல நிபுணர்களின் எதிர்ப்புகள் மத்தியிலும் இந் நடைமுறையைப் பின்பற்றினர்.

நீல் பேர்குசன் ஒரு தொற்றுநோயியல் (epidemiologist) நிபுணர். இம்பீரியல் கல்லூரியில் அமைந்திருக்கும் இவரது ஆய்வுகூடத்துக்கு பில் & மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேசன் பல மில்லியன் டாலர்களை வழங்குகிறது. அமெரிக்காவிலுள்ள நோய்க்கட்டுப்பாட்டு மையம், பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவைகள், உலக நாடுகளில் பல அரசாங்கங்கள் போன்றன தமது கொள்கை வகுப்பு விடயங்களில் இவரது கணிப்புகளையும், மாதிரிகளையும் (models) பாவிப்பது வழக்கம். இவரது மாதிரிகளை வைத்துக்கொண்டுதான் பிரித்தானிய அரசு ‘மந்தை நிர்ப்பீடனத்தை’ மார்ச் 12 இல் நடைமுறைக்குக் கொண்டுவந்தது. இதற்கு எதிராக 500 விஞ்ஞானிகள், தொற்றுநோய் நிபுணர்கள், கையெழுத்திட்ட கடிதமொன்று மார்ச் 14 ம் திகதி, பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ‘மந்தை நிர்ப்பீடனத்தை’ க் கைவிட்டு சமூக இடைவெளிப்படுத்தலை நடைமுறைப்படுத்தும்படி அதில் அவர்கள் கேட்டிருந்தனர்.

பிரதமர் அலுவலகம் அதற்குப் பதிலளிக்கவில்லை. கோவிட் மரணங்கள் படு வேகத்தில் அதிகரித்தன.

கொறோனாவைரஸின் குணாம்சங்கள் முற்றாக அறியப்பட முன்னர் இந் நடைமுறையைப் பின்பற்றுவது பற்றி, உலக சுகாதார நிறுவனம் உட்பட, உலகெங்குமிருந்து பலத்த எதிர்ப்புகள் கிளம்பியிருந்தாலும், பொறிஸ் ஜோன்சன் அவற்றை உதாசீனம் செய்திருந்தார். வயோதிபர்களையும், நோயாளிகளையும் தவிர சுகதேகிகள் எல்லோரும் தமது இயல்பான வாழ்வைத் தொடரும்படி அவர் கேட்டுக்கொண்டார். அப்போது பிரித்தானியாவுக்குள் வரும் பயணிகள் மீது எந்தக் கட்டுப்பாடுகளும் இருக்கவில்லை. சுரங்க ரயில்களும், இதர பொதுப் போக்குவரத்து சாதனங்களும் மக்களால் நிரம்பி வழிந்தன. கோவிட்-19 மரணசாலைகளும் அதே போன்று நிரம்ப ஆரம்பித்தது.

விடயம் தலைக்குமேல் போய்விட்டதை அறிந்த ஃபேர்குசன், மார்ச் 16 அன்று அமைச்சரவையைச் சந்தித்து தனது 20 பக்க ஆய்வறிக்கையைக் கையளித்தார். அதில் முந்திய மாதிரியைக் கைவிட்டு மக்களின் நடமாட்டம் உடனடியாக முடக்கப்பட வேண்டுமெனவும், தனது புதிய ‘மாதிரியின்’ பிரகாரம் இந்நடைமுறையப் பின்பற்றாவிட்டால் மே மாதம் 15 வரும்போது 510,000 மரணங்கள் ஏற்பட்டிருக்கும் எனவும் அவர் எச்சரித்திருந்தார்.

Related:  பிரித்தானியா | 980 பேர் ஒரு நாளில் மரணம், இத்தாலியை மீறியது

மறுநாள், மார்ச் 17 அன்று, பிரதமரது அலுவலகத்தில் (10 Downing St.) காலை 5 மணிக்கு நடைபெற்ற ஊடக மாநாட்டில் பேராசிரியர் ஃபேர்குசன் தனது புதிய ‘மாதிரியை’யும், அரசாங்கம் எடுக்கவேண்டிய நடமாட்டக் கட்டுப்பாடுகள் பற்றியும் விபரித்தார்.

அடுத்த நாள் அதிகாலை 4:00 மணி போல் அவர் தூக்கத்தால் எழும்போது காய்ச்சலும் தொண்டைக் கரகரப்பும் இருந்ததை அவதானித்தார். மார்ச் 19 இல் அவருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. “வைரஸ் தொற்றை ஆராயும் எனக்கே அது தொற்றியது ஒரு விசித்திரமான அனுபவம்” என அவர் அன்றய தனது ருவீட் செய்தியில் தெரிவித்திருந்தார்.

மார்ச் 26 அன்று, ஜோன்சன், ஹனொக், முதன்மை மருத்துவ அதிகாரி கிறிஸ் விற்றி ஆகியோருக்கும் நோய் தொற்றிவிட்டதாக உறுதி செய்யப்பட்டு விட்டது. ஜோன்சன் தீவிர சிகிச்சைப் பிரிவில் மூன்று நாட்கள் தங்கவேண்டி ஏற்பட்டது.

2009 இல் பன்றிக் காய்ச்சல் மூலம் பிரித்தானியாவில் 65,000 பேர் மரணமடைவார்கள் என ஃபேர்குசனது ‘மாதிரி’ எதிர்வு கூறியிருந்தது. அப்போது இறந்தவர்களின் எண்ணிக்கை 500.

2001 இல் பிரித்தானியாவில் பரவிய ‘Foot and Mouth’ நோயினால் 150,000 பேர் மரணமடையாலாம் என்ற ஃபேர்குசனின் ‘மாதிரி’ யை வைத்துக்கொண்டு 6 மில்லியன் மிருகங்கள் கொல்லப்பட்டன. அப்போது இறந்தவர்கள் எண்ணிக்கை 200 மட்டுமே.

2005 இல் பறவைக் காய்ச்சலினால் 200 மில்லியன் பேர் மரணமடையலாம் என ஃபேர்குசன் ‘மாதிரி’ தெரிவித்திருந்தது. இறந்தவர்களின் எண்ணிக்கை சில நூறுகளே.

இன்றய நிலவரப்படி, பிரித்தானியாவின் கோவிட்-19 கணக்கு விபரம்: 148,000 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்களும், 20,000 மரணங்களும்.

பேராசிரியரின் மன மாற்றத்தால் பல உயிர்கள் காக்கப்பட்டிருக்கின்றன என்று ஒரு செய்தியும் உலாவுகிறது. உண்மையாகவும் இருக்கலாம்.

‘மந்தை நிர்ப்பீடனம்’ என்னிடம் வேலை செய்யாது என வைரஸ் நகைப்பது போலத் தெரிகிறது. எந்த விஞ்ஞான அளவுகோல்களாலும் அளக்க முடியாத இந்த வைரஸை யார் அனுப்பினார்கள்?

Print Friendly, PDF & Email