‘மஞ்சள்’ மகிமை – முழுமையான உடல் நலத்திற்கு அவசியாமன உணவு

அகத்தியன்

மஞ்சளைப் பற்றித் தெரியாத தமிழர் இருக்க முடியாது. தென்னாசியாவின் மிக முக்கிய மருத்துவ மூலிகையாகக் கருதப்படும் மஞ்சளின் பாவனை இப்போது அருகிப்போவதான ஒரு கருத்துமுண்டு. நவீன நாகரிக வணிக விளம்பரங்களுக்கு ஆட்பட்டவர்கள் இதைக் கொஞ்சம் தவிர்த்து வருவதும் தெரிகிறது. ஆனால் இதன் மகத்துவத்தை உணர்ந்தவர்கள் இதைத் தவிர்க்கவே மாட்டார்கள் என்பதும் உண்மை. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மட்டுமே மணமுண்டு எனப் பழக்கப்பட்டவர்கள் நாங்கள். எனவே எமது பாரம்பரிய பழக்க வழக்கங்களையும், உணவு வகைகளையும் தவிர்ப்பது அறியாமையினால் தான். அதாவது எமது கலாச்சார உணவு வகைகளிலுள்ள நன்மைகள் பற்றிய தெளிவான, அறிவுபூர்வமான விளக்கங்களைக் கற்றவர்கள் கற்றுக்கொடுப்பது குறைவு. வெறுமனே “அவை உடம்புக்கு நல்லது” என்று கூறுவதோடு நின்றுவிடாமல் அதற்கான விஞ்ஞான காரணங்களைத் தெரியத்தந்தால் மக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்பது என் கணிப்பு.

வரலாறு

4,000 வருடங்களுக்கு முன்பான வேதகாலத்திலிருந்தே மஞ்சளின் பாவனை இருந்து வருகிறது. சமையலில் மட்டுமல்லாது சமய நிகழ்வுகளிலும் மஞ்சளின் பாவனை தொடர்ந்து வருகிறது. கி.பி. 7ம் நூற்றாணடில் இது இந்தியாவுக்கும், அதன் பின்னர் கிழக்கு ஆபிரிக்கா, மேற்கு ஆபிரிக்கா என 18 ஆம் நூற்றாண்டில் ஜமைக்கா மூலம் அமெரிக்க கண்டத்தை அடைந்தது என்கிறார்கள்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மஞ்சள் தென்னாசியர்களுடன் உறவு கொண்டது மஞ்சள். வெப்ப மண்டலத்திற்கே உரித்தான இப்பயிர் இன்னுமொரு மருத்துவ நலம் கொண்ட இஞ்சி குடும்பத்தைச் சேர்ந்தது. ஆனால் இப்போது அது உலகின் பல பாகங்களுக்கும் பரவி அவ்வத் தேசிய உணவு வகைகளில் ஒன்றாகி விட்டது. இதன் மகத்துவத்தை உணர்ந்த மேற்கத்தைய விஞ்ஞானிகள் இப்போது அதன் குணாதிசயங்களை அக்கு வேறு ஆணி வேறாகப் பிடுங்கிப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

உலகின் மஞ்சள் தேவையின் அரைவாசியை இந்தியாவே பூர்த்தி செய்கிறது. அதிலும் 80% த்தை இந்தியாவே தின்றும் தீர்த்து விடுகிறது. மஞ்சளுக்கும் தமிழருக்கும் நெருக்கம் அதிகமாகையால் தமிழ்நாடே மஞ்சள் உற்பத்தியில் முன்னணியில் இருக்கிறது. தமிழ் நாட்டின் ஈரோடு நகரம் இதற்குப் பிரபலமானது. எனவே தான் அது ‘மஞ்சள் நகரம்’ என அழைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் சித்த, ஆயுர்வேத சிகிச்சை மரபில் மஞ்சளுக்குப் பிரதான இடமுண்டு. உடலின் சக்தி தேவையைப் பூத்தி செய்வது முதல் வாயுச் சிக்கலிலிருந்து விடுபடுதல், வயிற்றுப் புழுக்களை அகற்றுதல், சமிபாட்டை முன்னேற்றுதல், மாதவிடாயைச் சீராக்குதல், பித்தக்கற்களைக் கரைத்தல், முடக்குவாதத்திலிருந்து மீட்டல் என்பன வரை மஞ்சளின் மகிமை சொல்லி மாளாது. மஞ்சளுக்கு கிருமிகளைக் கொல்லும் குணாம்சம் இருக்கிறது. மருத்துவ வசதிகள் குறைவான கிராமங்களில் உடலில் ஏற்படும் வெட்டுக் காயங்களில் கிருமித் தொற்று ஏற்படாமலிருக்க காயங்கள் மீது மஞ்சள் தடவப்பவது இதற்காகத்தான். கோவிட் தொற்றுக் காலத்தில் இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் அத் தொற்று அதிக பாதிப்பைக் கொண்டுவாராததற்குக் காரணம் அங்கு மஞ்சளின் பாவனை இருந்தபடியால்தான். பெரும்பாலானோர் மஞ்சளைக் கொதிநீர் ஆவி மூலம் சுவாசித்து இத்தொற்றிலிருந்தும் தப்பிக் கொண்டனர்.

பெளத்த துறவிகள் அணியும் மஞ்சள் / காவி உடைகளின் பின்னாலுள்ள மர்மமும் மஞ்சள் தான். இத் துறவிகள் நீண்ட தூரம் காடுகளிடையே மிக நீண்ட காலம் பயணம் செய்வர். இக்காலத்தில் அவர்கள் மாற்றுடை எதுவும் கொண்டு செல்வதில்லை. தமது அணிகளை அவர்கள் மஞ்சள் கலந்த கொதி நீரில் அவித்து உலர்த்தியபின் மீண்டும் உடுத்திக்கொண்டு தமது பயணத்தைத் தொடர்வார்கள். மஞ்சளின் கிருமிநாசினிக் குணாம்சத்தினால் அவர்களுக்கு சருமத் தொற்றுகள், முட் கீறல்கள் ஆகியவற்றினால் பாதிப்புகள் ஏற்படுவதில்லை.

ஆப்கானிஸ்தானில் வெட்டுக்காயங்கள் மீது மஞ்சளில் ஊறிய துணியை ச் சூடாக்கி வைப்பதன் மூலம் கிருமித் தொற்றைக் குணப்படுத்துகிறார்கள். திருமணம் மற்றும் விசேட வைபவ காலங்களில் பெண்கள் முகத்தின் மீது மஞ்சள் பூசுவது சரும வியாதிகளிலிருந்து பாதுகாக்கவும் தேவையற்ற முடிகள் முகத்தில் வளர்வதை அகற்றவுமென்பது நாமறிந்த விடயம். பாகிஸ்தான், பங்களாதேசம் போன்ற நாடுகளிலும் இந்நடைமுறை பழக்கத்திலிருக்கிறது.

நவீன சிகிச்சைகள்

மஞ்சளின் இம் மகிமை எல்லை கடந்து மேற்குநாடுகளுக்குச் சென்றதும் அங்கு அதன் மகத்துவத்திற்கான விஞ்ஞான காரணங்களை ஆராயத் தொடங்கினர். மிஸிஸிப்பி பல்கலைக்கழகத்திலுள்ள இயற்கைப் பொருட்களின் தேசிய ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த டாக்டர் பில் கேர்ளி அவர்கள் இயற்கை மூலிகைகளின் பாவனை பற்றிப் பல தசாப்தங்களாக ஆராய்ந்து வருபவர். சமீப காலங்களில் மருந்துக் கடைகளில் விற்பனையாகிவரும் வெவ்வேறு உப மருந்துகள் (supplements) பற்றி ஆராய்ந்து வருபவர் மட்டுமல்லாது அவற்றைத் தொடர்ந்து தமது உண்டு வருபவரும் கூட. தினமும் அவர் எடுக்கும் மருந்துகளில் மஞ்சள் முக்கியமான ஒன்று. அவருக்கு 63 வயது.

இன்றைய மனிதப் பிணிகளின் முக்கிய காரணம் இழையங்களில் ஏற்படும் அழற்சி (inflammation). இருதய வியாதி, குடற் புண், நீரிழிவு, உயரழுத்தம் போன்ற பல வியாதிகளின் மூல காரணம் அழற்சி. மஞ்சளில் உள்ள குர்க்குமின் என்ற பதார்த்தத்துக்கு அழற்சியைக் குணப்படுத்தும் தன்மையுண்டு. மூட்டுவாத நோயாளிகளின் மூட்டுக்களில் ஏற்படும் வீக்கம், காலையில் காணப்படும் தசைப்பிடிப்பு ஆகியவற்றை குர்க்குமின் குணப்படுத்துகிறது என்கிறார் டாக்டர் கேர்ளி. இருப்பினும் கடைகளில் வாங்கும் ‘மஞ்சள் குளிசைகள்’ பற்றி அவதானமாக இருக்கும்படி அவர் எச்சரிக்கின்றார். முறையாகத் தயாரிக்கப்படாவிட்டால் இக்குளிசைககளால் ஈரல் பாதிக்கப்படவும் நேரும்.

இரத்த நாடிகள், நாளங்கள், நரம்புறைகள், சமிபாட்டுத் தொகுதியின் உடசுவர்கள், சுவாசத் தொகுதியின் குழாய்கள் போன்றவற்றில் ஏற்படும் இந்த அழற்சி காரணமாகவே பல நோய்களும் ஏற்படுகின்றன என்பது நவீன மருத்துவ நிபுணர்களின் முடிவு. சமிபாட்டுத் தொகுதி, சுவாசத் தொகுதி போன்றவற்றின் உட்சுவர்களில் நட்புள்ள பக்டீரியாக்கள் தங்கிவாழ ஏதுவாக இருக்கும் சளிப் படை அழற்சி காரணமாகப் பாதிக்கப்படுகிறது. இதனால் நட்பான பக்டீரியாக்கள் இல்லாமற்போக கெட்ட கிருமிகளிடமிருந்து பாதுகாப்பில்லாது நோய்கள் தொற்றிக்கொள்கின்றன. குணப்படுத்தப்படாத அழற்சி படிப்படியாக மூளை உட்பட இதர பகுதிகளுக்கும் பரவும்போது நரம்புமண்டலம் சம்பந்தப்பட்ட இதர வியாதிகளும் தொற்றிக் கொள்கின்றன. எனவே அழற்சியை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துவது அல்லது வருமுன்தவிர்ப்பது அவசியமாகிறது. இதற்காக எங்கள் மூதாதையர் எங்களுக்கு விட்டுச் சென்ற அற்புத மூலிகை மஞ்சள்.

நம் பண்டைய பெண்கள் மஞ்சளை அழகுசாதனமாகப் பாவித்தாலும் மஞ்சளிலுள்ள கிருமியகற்றும் பண்பினால் தான் தங்களுக்கு ஒளிரும் சருமம் கிடைத்தது என்பதை அவர்கள் அறிந்திருக்க நியாயமில்லை. தற்போது கடைகளில் கிடைக்கும் பல அழகுசாதனங்களின் தயாரிப்பில் மஞ்சள் முக்கிய பங்கு வகித்தாலும் அதைத் தயாரிப்பாளர் பகிரங்கப்படுத்தப் போவதில்லை. ஆனால் உட்கொள்ளும் ‘மஞ்சள்’ உபமருந்துகள் பற்றிக் கொஞ்சம் அவதானமாக இருக்கவேண்டும். அதற்குப் பதில் உணவில் போதுமான மஞ்சளைப் பாவிப்பது சாலச் சிறந்தது. மஞ்சள் குளிசைகளைப் பாவிக்க விரும்புபவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்வது அவசியம்.


Print Friendly, PDF & Email