பெண்களில் மாதவிடாய்க்குப் பின்னான சிறுநீர் சுய வெளியேற்றம்
Postmenopausal Urinary Incontinence
By S. Raguraj MD

பெண்களில் மாதவிடாய் நின்றதன் பின்னரான நோய்கள் – ஒரு பார்வையில்:
- பெண்களில் மாதவிடாய் நின்றதும் அவர்களது ஹோர்மோன்களில் ஒன்றான எஸ்ட்றொஜின் (estrogen) சுரப்பு குறைந்துவிடுகிறது. இதன் காரணமாக சிலரில், சிறுநீரகற்றுதலில் முன்னர் இருந்த கட்டுப்பாடு தளர்ந்துவிடுகிறது (சிறுநீர் சுயமாக வெளியேறுதல்)
- இதற்குக் காரணம், சிறுநீர்க் கழிவகற்றலைக் கட்டுப்படுத்தும் உறுப்புகளில் (urogenital system), குறிப்பாக, சிறுநீர்க்கால்வாய் (urinary tract) மற்றும் பெண்ணுறுப்பு (vagina) ஆகியவற்றின் சுவர்களிலுள்ள தசைகள் பலமிழந்து (atrophy) போவது.
- இதைவிடவும், மாதவிடாய் நின்றுபோனதன் பின்னர் இடுப்புப் பகுதியிலுள்ள பல உறுப்புகளும் (organs), இழையங்களும் (tissues) பாதிப்புக்குள்ளாகின்றன.
- இந் நோயின் அறிகுறிகளாக, அடிக்கடி சிறுநீர் கழிக்க உந்தப்படுதல், சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாமை (incontinence), பெண்ணுறுப்பில் எரிச்சல், உலரும் தன்மை (itching and dryness), சிறுநீர்க் கால்வாயில் நோய் தொற்றுதல் (urinary tract infections) ஆகியன தென்படும்.
- இதற்கான சிகிச்சைகளாக, உணவுப் பழக்கத்தில் மாற்றங்கள், தசைகளை இறுக்குவதற்கான அப்பியாசங்கள், பெண்ணுறுப்புக்கு எஸ்ட்றொஜின் பூச்சு (topical estrogen for the vagina), அறுவைச் சிகிச்சை ஆகியன பரிந்துரைக்கப்படலாம்.

தெரிந்துகொள்ள வேண்டியவை:
- மாதவிடாய் நின்றுபோன பெண்களில் 20 வீதமானோர் சிறுநீர்க் கட்டுப்பாடில்லாமையால் துன்புறுகிறார்கள்.
- பல பெண்கள் இப் பிரச்சினைகளைத் தமது குடும்ப வைத்தியரிடம் கூற வெட்கப்படுகிறார்கள். இதனால் அவர்கள் சமூக ஒன்றுகூடல்களைத் தவிர்ப்பதும், தனிமையில் வருந்துவதும், சில வேளைகளில் மன அழுத்தத்திற்கு உள்ளாவதுமுண்டு.
- உகந்த சூழலை வழங்குவதன் மூலம் இந் நோயாளிகள் மனம் திறந்து தங்கள் பிரச்சினைகளைத் தெரிவிக்க வழி செய்யலாம்.
மாதவிடாய் நின்றதன் பின்னரான சிறுநீர்க் கட்டுப்பாடில்லாமை உருவாகுவதற்கான காரணங்கள்
பெண்களில் மாதவிடாய் நிற்கும்போது அவர்களின் உடலில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. அதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று எஸ்ட்றொஜின் எனப்படும் ஹோர்மோனின் சுரப்பு குறைக்கப்படுவது.
இதன் விளைவுகளில் ஒன்றாக, பெண்ணுறுப்பு மற்றும் சிறுநீர்க் கால்வாய் ஆகிய உறுப்புகளிலுள்ள சுவர்களின் தசைகள் பலமிழந்து போகின்றன (atrophy – தசையிழப்பு). இத் தசைகளே சிறுநீரைப் பைகளுக்குள் விரும்பியவாறு கட்டுப்படுத்தி வைத்திருப்பதற்கும், விரும்பிய நேரத்தில் கழிப்பதற்கும் உதவுகின்றன. கட்டுப்பாட்டை இழந்தவுடன் சிறுநீர்க் குழாய்களின் மூலமாக (urethra) சுயமாக வெளியேற முற்படுகிறது. இதனால் அக்குழாய்களில், பக்டீரியா அல்லது நொதியம் (yeast) போன்றவற்றால் நோய்த் தொற்று ஏற்படவும் காரணமாகிறது.

சிறுநீர்க் காட்டுப்பாடில்லாமை இடுப்பிலுள்ள ஒன்று அல்லது பல உறுப்புகள் தமது இறுக்கத்தை இழந்து தொங்குவதாலும் ஏற்படலாம். இவ்வுறுப்புகளின் தசைகள் பலமிழந்து அவற்றின் பாரத்தால் தொங்க நேரிடும்போது பெண்ணுறுப்பை அத் தொங்கு தசை அடைத்துவிட நேரிடுகிறது. இது இடுப்புறுப்புத் தசையிழப்பு (pelvic organ prolapse) எனப்படும்.
சில பெண்களில் மகப்பேற்றின்போதும் இப்படியான இடுப்புறுப்புத் தசையிழப்பு ஏற்படுகிறது. மகப்பேற்றின்போது இவ்வுறுப்புகளின் தசைகள் பாதிப்புறுவதால் இது ஏற்பட வாய்ப்புண்டு. அத்தோடு சிறுநீர்த் தொகுதியில் ஏற்படும் நோய்களாலும் இத் தசைகள் பாதிக்கப்படலாம். இத் தசைப் பாதிப்புகள் பற்றித் தொடர்ந்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சிறுநீர்க்கால்வாய்த் தசையிழப்பு தொடர்பான அறிகுறிகள், சிறிய வசதியீனங்கள் முதல் தீவிர உணர்வுநிலைப் பாதிப்பு வரை வேறுபடுகிறது. மாதவிடாய்க்குப் பின்னரான வெப்ப உபாதை (hot flashes) போன்ற அறிகுறிகள் போலல்லாது, சிறுநீர்க்கட்டுப்பாடின்மை, வயது போகப் போக மோசமாக இருப்பதற்கான சாத்தியங்களுண்டு.
சிறுநீர்த் தொகுதியில் ஏற்படும் தசையிழப்பின்போது எதிர்பார்க்கக்கூடிய அறிகுறிகள்:
- சிரிக்கும் போதோ, இருமும்போதோ, சடுதியான உடலசைவுகளின் போதோ சிறுநீர் வடிதல்
- சிறுநீர் கழிப்பதற்கான சடுதியான உந்துதல், சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாமை, கழிப்பறைக்குப் போகமுதலே சிறுநீர் வெளியேறுதல்
- அடிக்கடி சிறுநீர் கழிக்க உந்துதல்
- நித்திரைக்குப் போனபின்னர் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழும்புதல் (nocturia) ஆகியன.
பெண்ணுறுப்பில் ஏற்படும் தசையிழப்பின்போது எதிர்பார்க்கக்கூடிய அறிகுறிகள்:
- பெண்ணுறுப்பிலோ (vagina), உறுப்பின் கருவாயிலோ (vulva) நிறைவற்ற தன்மையை உணர்தல்
- பெண்ணுறுப்பிலோ, கருவாயிலோ உலர் தன்மையை (dryness), அரிப்பை (itching) அல்லது எரிவை (burning) உணர்தல்
- உடலுறவின்போது வலியை உணர்தல்
- பெண்ணுறுப்பில் இரத்தம் வடிதல்
- பெண்ணுறுப்பில் அமிலத்தன்மை அதிகரிப்பதால் ஏற்படும் அதிகரித்த நோய்த் தொற்றுக்கள் (urinary tract infections) ஏற்படுதல்
இடுப்புறுப்புகளின் தசையிழப்பு (pelvic organ prolapse) காரணமாக சடுதியான, கட்டுப்படுத்த முடியாத சிறுநீர் கழிப்பதற்கான உந்துதல் ஏற்படுவதுண்டு. சில வேளைகளில் சிறுநீர்க் கழிப்பின்போது வலியைத் தருவதாகவும் இருக்கும்.
சிறுநீர் வடிதலுக்கான சிகிச்சைகள்
மாதவிடாய் நின்ற பின்னர் எஸ்ட்றொஜின் என்ற ஹோர்மோன் சுரப்பில் ஏற்படும் குறைபாடு சிறுநீர் வடிதல் பிரச்சினைக்கான முக்கிய காரணங்களில் ஒன்று. இதற்கான சிகிச்சைகளில் ஒன்றாக ஹோர்மோன் நிவர்த்தி செய்தல் (Hormone Replacement Therapy (HRT)) பரிந்துரைக்கப்படுகிறது.
இச் சிகிச்சை, பெண்ணுறுப்பை, மாதவிடாய் நிற்பதற்கு முன்னிருந்த நிலைக்குக் கொண்டு வருவதுடன் சிறுநீர் வடிதல் சம்பந்தமான பல அறிகுறிகளையும் நீக்குகிறது. வாயினால் உட்கொள்ளும் இந்த ஹோர்மோன் குளிசைகள், சிறுநீர் கழிப்பதற்கான அவசரம், பெண்ணுறுப்பில் வலி, நித்திரையைக் குழப்பி சிறுநீர் வடிக்கும் உந்துதல் ஆகிய உபாதைகளினின்றும் விடுதலைபெற்றுத் தருகிறது. இருப்பினும் இச் சிகிச்சை முறை பற்றி இன்னும் பல விவாதங்கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன.
பெண்ணுறுப்பில் பூச்சு மூலம் பிரயோகிக்கப்படும் எஸ்ட்றொஜின் ஹோர்மோன் சிகிச்சையும் இதே பலன்களைத் தருகிறது. குறைந்த பலமுள்ள எஸ்ட்றொஜின் பசைகள், குளிசைகள், பெண்ணுறுப்பு வளையங்கள் போன்றனவும் இச் சிகிச்சைகளுள் அடங்கும். இவையெல்லாமே சிறுநீர்த் தொகுதியில் ஏற்படும் தசையிழப்புகளை நிவர்த்தி செய்கின்றன.
இருப்பினும், மார்பகப் புற்றுநோய் பீடித்த பெண்களுக்கு இச் சிகிச்சை பிரயோகிக்கப்படுவதில்லை. அவர்கள் உடலுறவின்போது பெண்ணுறுப்பின் உலர்வு, வலி போன்றவற்றைச் சமாளிக்க அதற்கெனத் தயாரிக்கப்பட்ட பசை, திரவம் போன்ற பதார்த்தங்களைப் பாவிக்கலாம்.
ஹோர்மோன் நிவர்த்தி இல்லாமல் சிறுநீர்ப் பையைக் (urinary bladder)கட்டுப்படுத்துவதற்கும், இடுப்புறுப்புகளில் ஏற்படும் தசையிழப்புக்களைக் கட்டுபடுத்துவதற்கும் சில வாழ்முறை மாற்றங்களும், மருத்துவ சிகிச்சைகளும் உதவுகின்றன. அவற்றில் சில:
- காப்பி, தேனீர் (caffeine) ஆகியவற்றைக் குறைத்தல்
- பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை ஒழுங்காக உட்கொள்ளல்
- ‘பயோ ஃபீட்பாக் (Biofeedback) என்னும் கருவி மூலம், சிறுநீரைத் தாக்குபிடித்தல், கழிக்கும் நேரத்தைத் திட்டமிடுதல், உடலின் சில தொழிற்பாடுகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல் போன்ற முறைகளினால் சிறுநீர்ப் பையைப் பயிற்றுவித்தல்
- உடலுக்கேற்ற எடையைப் பராமரித்தல்
- இடுப்பிற்குப் பாதகமான வேலைகளைச் செய்வதைத் தவிர்ப்பதோடு, ‘கேஜெல்’ அப்பியாசங்களை (Kegel Exercises) ச் செய்தல்
- சிறுநீர் வடிதலுக்காக வடிவமைக்கப்பட்ட உள்ளாடைகளை அணிதல்
- சிறுநீர்ப் பையின் தசைகளை மின்னியக்கத்தின் மூலம் தூண்டுதல் (Electrical stimulation of bladder muscles)
- பெண்ணுறுப்புக்குள் வைக்கப்படும் விசேட கருவி மூலம் (pessary device) உள்ளே புடைத்திருக்கும் சிறுநீர்ப்பையைத் தூக்கி வைத்திருத்தல்
- சிறுநீர்க் கால்வாயில் உள்ளிட்ட கருவி மூலம் சிறுநீர் சுயமாக வடியாது தடுத்தல்
- பலவித அறுவைச் சிகிச்ச்சைகள் மூலம் தசையிழப்புக்குள்ளான இடுப்புறுப்புக்களை நிவர்த்தி செய்தல் ஆகியன.
மேலே குறிப்பிட்ட, மாதவிடாய் நின்ற பின்னர் வரக்கூடிய, சிறுநீர் கழித்தல் தொடர்பான வியாதிகளின் காரணங்களும், அறிகுறிகளும், சிகிச்சைகளும் மொதுவாக உலகெங்கும், குறிப்பாக மேற்குலக மருத்துவ சமூகங்களினால் அங்கீகரிக்கப்பட்டவை. இருப்பினும் எல்லா நோயாளிகளுக்கும் அறிகுறிகள் ஒரேவிதமாக இருக்க வேண்டியதென்றில்லை. சில கலாச்சாரங்களில் பெண்களுக்கே உரித்தான வெட்கம், நாணம் போன்றன இவ்வறிகுறிகளைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்கின்றன. நமது கலாச்சாரத்திலும் இதுவே நிலைமை. அதை மீறி, பெண்கள் எத்தனை வயதிலும் சுதந்திரமாக நடமாட இப்படியான பிரச்சினைகள் தடையாக இருக்கக்கூடாது என்பதற்கான விழிப்புணர்வைக் கொண்டுவருவதே இக் கட்டுரையின் நோக்கம்.
இப்படியான அறிகுறிகள் இருப்பதாக உணரும் எமது பெண்கள் உங்கள் குடும்ப வைத்தியருடன் இவற்றை எடுத்துரைத்து இந்நோய்களுக்கான சிறப்பு வைத்திய நிபுணர்களிடம் (urologists, uro-gynecologists) காட்டிச் சிகிச்சை பெறுங்கள்.
No related posts.