புற்றுநோய்க் கலங்களைத் ‘தற்கொலை’ செய்ய வைக்கும் விறைப்பு மருந்து

புற்றுநோய்க் கழலைகள் இருக்குமிடத்திற்கருகே லிடோகெய்ன் ( lidocaine ) என்னும் மயக்க மருந்தைப் பிரயோகிக்கும்போது அது அருகே இருக்கும் புற்றுநோய்க் கலங்களை அழித்துவிடுகிறது என பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியொன்று கூறுகிறது.

லிடோகெய்ன் என்பது சிற்றிட விறைப்பு மருந்து (local anesthetics) வகைகளில் ஒன்றாகும். உடலில் மேற்கொள்ளப்படும் சிறு வகையான அறுவைச்சிகிச்சைகளின்போது சிகிச்சை மேற்கொள்ளப்படும் சிற்றிடத்திலுள்ள உணர்வுநரம்புகளை விறைக்கச் செய்வதன் மூலம் குறிப்பிட்ட நேரத்துக்கு வலியை உணரமுடியாமல் செய்துவிடுகிறது இம்மருந்து.

எமது உடல் அங்கங்கள் (organs), இழையங்கள் (tissues), கலங்கள் (cells) எனக் கூறுகளால் ஆனது என உயிரியலில் படித்திருக்கிறோம். வெளியிலிருந்து வரும் எதிரிகள், நச்சுப் பதார்த்தங்களிலிருந்து கலங்களைப் பாதுகாக்க இயற்கை அவற்றை இரட்டைச் சுவர்களினாலான சவ்வினால் (membrane) பாதுகாக்கிறது. கலங்களுக்குத் தேவையான பொருட்களை வழங்குவதற்கான பாதைகளை அமைத்துக்கொடுக்கவும், இதர உடற்பாகங்களுடனான தொடர்பாடல்களை மேற்கொள்ளவுமென கலங்களின் சுவர்களில் ஏற்பிகள் (receptors) எனப்படும் புரதங்களினாலான சிறு அரும்புகளை கலங்கள் அவ்வப்போது வெளிக்காட்டுகின்றன (express). இருதயம், சுவாசப்பை, மூளை போன்ற அங்கங்களின் இழையங்களில் போலவே புற்றுநோய்க் கலங்களிலும் தேவைக்கேற்ப அவ்வப்போது ஏற்பிகள் முளைவிடுகின்றன.

நாம் கசப்பான உணவைச் சாப்பிடும்போது எமது நாவிலுள்ள சுவை முனைகளின் (taste buds) கலங்களிலும் இப்படியான கசப்பு சுவை ஏற்பிகள் முளைவிடுகின்றன. T2R என அழைக்கப்படும் இவ்வேற்பிகள் புரதங்களினால் ஆனவை. நாம் கசப்பான உணவை உண்டதும் அது இவ்வேற்பியைத் தூண்டிவிடுவதன் மூலம் மூளைக்கு செய்தியை அனுப்பி அச்சுவையை அனுபவிக்கச் செய்கிறது.

2022 இல் பென்சில்வேனியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் செய்த ஆராய்ச்சியின்போது தலை, கழுத்து போன்றவற்றில் உருவாகிய புற்றுநோய்க்கலங்களிலும் T2R ஏற்பிகள் காணப்பட்டதை அறிந்திருந்தார்கள். அது மட்டுமல்லாது ‘கசப்பு மருந்துகள்’ மூலம் இந்த T2R ஏற்பிகளைத் (புரதங்களை) தூண்டிவிடும்போது அவை அக்கலங்களை இறக்கச் செய்துவிடுகின்றன என்பதையும் கண்டறிந்திருந்தார்கள். T2R ஏற்பிகள் அதிகம் காணப்படும் நோயாளிகள் குணமடைவது அதிகம் என்பதையும் இவ்வாராய்ச்சியில் அவர்கள் கண்டறிந்திருந்தார்கள்.

பல்வகையான புற்றுநோய்க் கலங்களிலும் T2R14 ஏற்பிகள் காணப்படுவதை அறிந்த இவ் விஞ்ஞானிகள் லிடோகெய்ன் என்ற விறைப்பு மருந்தை இப் புற்றுநோய்க் கலங்களுக்கு அருகாமையில் செலுத்தும்போது அக்கலங்கள் இறந்துபோவதைக் கண்டறிந்துள்ளார்கள். இது குறித்து இவ்வாராய்ச்சியை மேற்கொண்ட விஞ்ஞானிகள் குழுவின் தலைவர் றயான் கரே கூறும்போது “லிடோகெய்ன் மிகவும் பாதுகாப்பானதும் இலகுவில் கிடைக்கக்கூடிய ஒன்றாகவும் இருப்பதனால் நாங்கள் தலை மற்றும் கழுத்து புற்றுநோய்களைக் குணப்படுத்த தாராளமாகப் பயன்படுத்த முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

லிடோகெய்ன் புற்றுநோய்களிலிருந்து நிவாரணமளிக்கிறது என்பது ஏற்கெனவே அறியப்பட்டிருந்தாலும் அதன் காரணத்தையும், செயற்பாட்டையும் பற்றி இப்போதுதான் அறியமுடிந்திருக்கிறது. இருப்பினும் புற்றுநோய்ச் சிகிச்சைக்காக லிடோகெய்ன் போன்ற மருந்துகளைப் பாவிப்பதற்கு முன்னர் பரவலான பிரயோக ஆராய்ச்சிகள் (clinical trials) மேற்கொல்ளப்படவேண்டும் என்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள். (Photo by National Cancer Institute on Unsplash)

Print Friendly, PDF & Email