புதிய திரிபுகளிலிருந்து பாதுகாக்க, ஃபைசர்-பயோஎன்ரெக் தடுப்பு மருந்து மூன்றாவது தடவையும் போட வேண்டும்?

வைரஸின் புதிய திரிபுகளைச் சமாளிக்க ஃபைசர்-பயோஎன்ரெக் தடுப்பு மருந்துகளை எடுத்தவர்கள் மூன்றாவது டோஸ் (booster shot) ஒன்றையும் போட்டுக்கொள்வதன் மூலம், இரண்டு டோஸ்கள் போட்டபோது இருந்தததைவிட உடலின் எதிர்ப்புச்சக்தியை (antibody) 5 முதல் 10 மடங்கு அதிகரித்துக் கொள்ள முடியுமெனவும் இதனால் வைரஸின் புதிய திரிபுகளைக் கட்டுப்படுத்த முடியுமெனவும் இம் மருந்தைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

‘ஃபைசர்’ தடுப்பு மருந்த எடுத்தவர்களில் செய்த ஆராய்ச்சியில், மருந்தை எடுத்த ஆறு மாதங்களுக்குப் பின்னர் அவர்களது உடலில் காணப்படும் பிறபொருளெதிரிகள் (antibodies) எனப்படும் நோய்த் தடுப்பு ஆற்றல் குறைகிறது எநக் கடந்த வாரம் இஸ்ரேல் அரசாங்கம் அறிவித்திருந்தது. இஸ்ரேலிய சுகாதார அமைச்சின் தரவுகளை மேற்கோள் காட்டி ‘புளூம்பேர்க்’ வெளியிட்டிருந்த செய்தியின்படி, ஜூன் 6 முதல் ஜூலை 6 வரையில் இம் மருந்தின் இரண்டு டோஸ்களையும் எடுத்தவர்களில் 64% மானோரே நோயிலிருந்தும் பாதுகாக்கப்பட்டிருந்தனர். இதற்கு முன்னர் இச் செயற்திறன் 94% மாக இருந்தது. இஸ்ரேலிற்குக் கொண்டுவரப்பட்ட புதிய டெல்ற்றா திரிபின் காரணமாகவே இச்செயற்திறன் குறைபாடு ஏற்பட்டிருக்கலாமென இத்தரவுகளை ஆதாரம் காட்டி விஞ்ஞானிகள் கருத்துவெளியிட்டுள்ளனர்.

இத் தரவுகள் மீது கருத்துத் தெரிவித்த ஃபைசர்-பயோஎன்ரெக் நிறுவனங்கள், ஒருவர் முழுமையான பாதுகாப்பைப் பெறறுவதற்கு 6 முதல் 12 மாதங்களுக்குள் மூன்றாவது டோசான booster shot ஒன்றையும் எடுத்துக்கொள்வது நல்லது எனக் கூறியுள்ளன.

‘ஃபைசர்’ மற்றும் அஸ்ட்றா செநிக்கா தடுப்பு மருந்துகள் புதிய டெல்ற்றா திரிபுக்கு எதிராக வெகு அரிதாகவே தடுப்பாற்றலை உருவாக்குகின்றன என சமீபத்தில் ‘நேச்சர்’ (Nature) சஞ்சிகை செய்தி வெளியிட்டிருந்தது.

இப் பின்புலத்தில், புதிய திரிபுகளைக் குறிவைத்து தமது நிறுவனங்கள் ஏற்கெனவே ஆராய்ச்சிகளைச் செய்துவருகின்றன எனவும் மூன்றாவது டோஸுக்காகத் தாம் தயாரித்து வைத்திருக்கும் மருந்து முந்திய மருந்துகளின் செயற்திறனைவிட 5-10 மடங்கு அதிகரிக்கின்றன எனவும் மக்கள் பாவனைக்கான அங்கீகாரத்துக்காகத் தாம் எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளன. மனிதரில் ஏற்கெனவே பரிசோதிக்கப்பட்ட இம் மருந்து புதிய திரிபுகளான பேற்றா, டெல்ற்றா ஆகியவற்றுக்கு எதிராகச் செயற்பட வல்லன எனவும் இரண்டு டோஸ்களையும் எடுத்து 6 முதல் 12 மாதங்களுக்குள் இம் மூன்றாவது டோசையும் எடுத்துக்கொள்ள வேண்டுமெனவும் இன் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மெயிந்ஸ், ஜேர்மனியிலுள்ள ஃபைசர்-பயோஎன்ரெக் தயாரிப்பு நிலையத்தில் மூன்றாவது டோஸுக்கான மருந்துகள் தயார் நிலையில் இருக்கின்றன எனவும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் மற்றும் ஐரோப்பிய மருந்து ஆணையம் ஆகியவற்றின் அனுமதி கிடைத்ததும் மனிதப் பரிசோதனைக்கு அவை தயாராகிவிடுமெனத் தெரிவிக்கப்படுகிறது.

mRNA தொழில்நுட்பம் மூலம் தயாரிக்கப்படும் தடுப்பு மருந்துகள் (ஃபைசர், மொடேர்ணா), புதிய திரிபுகளின் மரபணுவரிசையை ஆராய்ந்து ஆய்வுகூடத்தில் அதற்கேற்ப தமது மருந்துகளை விரும்பிய வகையில் வடிவமைத்துக்கொள்வதன் மூலம் தயாரிக்கப்படுகின்றன. சில மணித்தியாலங்களில் இப்படியான மாற்றங்களைச் (twigging) செய்துவிடலாமெனினும் மனிதப் பரிசோதனைகளுக்காக மேலும் சில மாதங்கள் எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. (அகத்தியன்)

Print Friendly, PDF & Email