பக்க வாதம் (Stroke) – பாகம் – 1

பக்க வாதம் அமெரிக்காவின் மக்களைக் கொல்லும் வியாதிகளில் 5 வது இடத்தைப் பிடிக்கிறது

Dr. Kanaga Sena MD
Yale School of Medicine, Bridgeport CT

 

Dr. Kanaga Sena MD
Yale School of Medicine

மறதி நோய்க்கான முக்கிய காரணம் மூளையின் நரம்புக் கலங்கள் இறந்து போவதனால் என்றும் அதற்கு முக்கிய காரணங்களாக (1). ‘அல்சைமர்ஸ்’ என்ற மெதுவாகப் பரவும் நோய் அல்லது (2).மூளையின் பிரதான பகுதிகளுக்குப் போதியளவு உயிர் வாயு (oxygen) மற்றும் உணவுப் பதார்த்தங்கள் கிடைக்காமையால்தான் என்று முந்தைய கட்டுரையில் படித்தீர்கள் (முதுமை மறதி).

இந்தக் கட்டுரை இரண்டாவது காரணத்தைப் பற்றிய விளக்கத்தைத் தர முயற்சிக்கிறது.

உடலின் மற்றெல்லா உறுப்புக்களின் தொழிற்பாட்டைப் போலவே மூளையின் தொழிற்பாடும் அதன் சிறு அலகுகளான கலங்களினாலேயே மேற்கொள்ளப்படுகிறது. இக் கலங்களின் உயிர் வாழ்தலுக்கு உயிர் வாயுவும் (0xygen), உணவுப் பதார்த்தமும் அத்தியாவசியமானவை. இரத்தோட்டத் தொகுதி இவற்றைக் கலங்களுக்கு எடுத்துச் செல்கிறது.

மூளைக்குள் கொண்டு செல்லப்பட்ட குருதி அதன் பல பகுதிகளுக்கும் சிறு குழாய்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. இக் குழாய்களில் தடைகள் ஏற்படும்போது, அல்லது குழாய்களில் கசிவு அல்லது வெடிப்பு ஏற்படும்போது, கலங்களுக்குச் செல்லும் இரத்தம் குறைவடைந்தோ அல்லது முற்றாக நிறுத்தப்பட்டோ போகும்போது, கலங்கள் 4 நிமிடங்களுக்குள் இறந்துவிடுகின்றன. இதன் காரணமாக, இக் கலங்களினால் முன்னர் இயக்கப்பட்டுக்கொண்டிருந்த உறுப்புக்கள் (உ+ம் கை, கால், முகம், வாய், கண்) ஆகியன முற்றாகவோ அல்லது பகுதியாகவோ செயலிழக்கின்றன. எனவே அறிகுறிகள் தெரிந்தவுடன் உடனடியாக சிகிசையளிப்பது அவசியம். இதைத் தமிழில் பக்க வாதம் அல்லது பாரிச வாதம் என அழைக்கிறோம். ஆங்கிலத்தில் இதை Stroke அல்லது Cerebrovascular Accident (CVA) எனச் சொல்வார்கள்.

மூளைக் குருதிக் குழாய்களில் ஏற்படும் வியாதி (Cerebrovascular Disease)

மூளையின் உட்பகுதிகளுக்குக் குருதியை வழங்கும் குழாய்களில் இரத்த ஓட்டம் தடைபடுவதற்குக் காரணமான வியாதியை ‘மூளை இரத்தோட்ட வியாதி’ (cerebrovascular disease) என அழைக்கிறார்கள்.

இரத்தக் குழாய்களில் சிறிதாக ஆரம்பிக்கும் வியாதிகள் எதுவித அறிகுறிகளையும் காட்டுவதில்லை. அதனால் அவர்களது வாழ்வு இயல்பாகப் போவது வழக்கம். சிலருக்கு இவ் வியாதி அறிகுறிகளைக் காட்டுவதோடு அவற்றின் உபாதையும் அதிகமாகவிருக்கும். இப்படியான வியாதிக்கு உடனடியான கவனிப்பு அவசியமாகிறது. இதை விளங்கிக் கொள்வதற்கு இவ் வியாதிபற்றிக் கொஞ்சம் ஆழமாகப் பார்க்க வேண்டும்.

அறிகுறிகள்

பக்கவாதம் வரும்போது உடலில் தோன்றும் அறிகுறிகளை FAST என்ற ஆங்கிலச் சொல்லால் இலகுவாக நினைவில் வைத்துக்கொள்ளலாம். Face (முகம்) – Arms (கைகள்) – Speech (பேச்சு) – Time (நேரம்) என நான்கு விடயங்களுடன் இந்நோயைத் தொடர்பு படுத்துவார்கள். கீழே அவை விபரமாகத் தரப்பட்டுள்ளன:

  • முகம் (Face) – முகம் ஒரு பக்கத்துக்குச் சரிந்து, தொங்குவதுபோல் இருக்கும்; சிரிப்பதற்கு முடியாமலிருக்கலாம்; வாயோ அல்லது கண்ணோ பக்கவாட்டாக இழுக்கப்பட்டோ அல்லது அரைவாசி மூடப்பட்டோ இருத்தல்
  • கைகள் (Arms) – இரண்டு கைகளையும் ஒரே நேரத்தில் உயர்த்திப் பிடித்துக்கொண்டிருக்க முடியாமல் ஒரு கையோ அல்லது இரண்டு கைகளுபோ சோர்ந்து போதல்
  • பேச்சு (Speech) – சொற்களை ஒழுங்காக உச்சரிக்க முடியாமல் தெளிவற்றுப் பேசுதல்
  • நேரம் (Time) – மேற்கூறிய அறிகுறிகளை அவதானித்தால் காலம் தாமதிக்காமல் உடனே அவசர சேவைகளை அழைப்பதற்கான நேரம் வந்துவிட்டது என்பது பொருள்

Related:  மனித உடலுறுப்புக்களை விலங்குகளில் வளர்த்து அறுவடை செய்தல் | மரபணு மாற்றத்தில் சீனாவின் பரிசோதனைகள்

தொடரும்….
Print Friendly, PDF & Email