பக்க வாதம் (stroke) – பாகம்-3

Dr.Kanaga Sena MD
Yale School of Medicine, Bridgeport, CT

Dr. Kanaga Sena MD

பக்கவாதம் என்றால் என்ன, அது ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன என்பன பற்றி முந்திய பாகங்களில் பார்த்தோம். உடலைப் பாதிக்கும் இதர நோய்களைப் போலவே இதுவும் சில நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் தவிர்க்கக்கூடிய ஒன்று. அந்நடைமுறைகள் என்ன என்பதை இக்கட்டுரையில் பார்க்கலாம்.

மூளை இரத்தக்குழாய்களில் ஏற்படும் வியாதிகளைத் தடுத்தல் (Preventing Cerebrovascular Disease)

பக்கவாதம் பீடிப்பதற்கான பல காரணிகள் வாழ்வுமுறை சம்பந்தப்பட்டவை. இவை ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. மது அருந்துபவர் சாப்பாட்டு விடயங்களில் ஒழுங்கற்றவராக இருக்க வாய்ப்புண்டு. அவருக்கு உடல் எடை அதிகமாகவிருக்கவும் வாய்ப்புண்டு. மது அருந்துபவர்கள் பலர் புகை பிடிக்கும் பழக்கத்தையும் கொண்டிருப்பதுண்டு. இவை எல்லாமே ஒருவரது வாழ்க்கைமுறை தொடர்பானவை.

எனவே, புகைத்தலை நிறுத்துவது, அளவோடு மது அருந்துவது, உப்பு, கொழுப்பு குறைந்த, நார்ச்சத்துள்ள உணவை உண்பது, ஒழுங்காக தேகாப்பியாசம் செய்வது, மகிழ்ச்சியோடு வாழ்வது எல்லாமே இவ் வியாதியைத் தடுப்பதற்கான வழிமுறைகள்.

உப்பு உயரழுத்தத்துக்குக் காரணமாகிறது

1. ஆரோக்கியமான உணவு

 • உப்பு – ஒரு நாளைக்கு உணவுடன் சேர்க்கக்கூடிய உப்பின் பரிந்துரைக்கப்பட்ட அளவு 1500 மி.கி. அதிகபட்சம் 1 தேக்கரண்டி (2300 மி.கி).
 • செறிந்த கொழுப்புள்ள உணவுகள் (saturated fat) – சொசேஜ், கொழுப்புள்ள இறைச்சி, பட்டர், நெய், பன்றிக் கொழுப்பு, பாலாடை. கடினமான பாலாடைக் கட்டி (hard cheese), கேக், பிஸ்கட், தேங்காய் எண்ணை போன்றன தவிர்க்கப்படவேண்டும்.

செறிவற்ற கொழுப்புணவுகள் உங்கள் இரத்தக் கொலெஸ்றெறோல் அளவைக் குறைக்கும். அப்படியான உணவுகள்:

எண்ணை அதிகமுள்ள மீன், அவொகாடோ, விதைகள், பருப்புகள், சூரியகாந்தி எண்ணை, ஒலிவ் எண்ணை ஆகியன.

2. உயரழுத்தம் ( Hypertension)

 உயரழுத்தமுள்ளவர்களுக்கு எந்தவிதமான அறிகுறிகளுமிருக்கவேண்டுமென்பதில்லை. ஒழுங்கான கால இடைவெளிகளில் மருத்துவச் சோதனைகளைச் செய்துவருவதன் மூலமே இதைக் கண்டுபிடிக்கலாம். சரியான நேரத்தில் கண்டுபிடித்துச் சிகிச்சையளிக்காவிட்டால் இரத்தக் குழாய்கள் நிரந்தரமாகப் பாதிக்கப்படுவதற்குச் சாத்தியங்களுண்டு. பக்கவாதம் (stroke), மாரடைப்பு (heart attack), சிறுநீரக வியாதி (kidney disease), இரத்தச் சுற்றோட்ட வியாதி (peripheral vascular disease) ஆகியன உயரழுத்தத்தினால் ஏற்படக்கூடிய சில வியாதிகள். சராசரியாக ஒரு மனிதனுக்கு இரத்த அழுத்தம் 140 / 60 மிமீ மேர்க்குரி இருக்கவேண்டுமென்று அமெரிக்க இருதய சங்கம் உட்படப் பல மருத்துவ அமைப்புகள் பரிந்துரைக்கின்றன. மருத்துவர்களின் ஆலோசனைக்கேற்ப உடற் சோதனைகளைச் செய்து வருவதே நோய்த் தவிர்ப்பிற்கு அவசியமாகிறது.

3. ஒழுங்கான தேகாப்பியாசம் (regular exercise)

வாரம் ஒன்றுக்கு 5 நாட்கள், தினமும் 30 நிமிடங்களுக்கு கடுமையான அப்பியாசம் பரிந்துரைக்கப்படுகிறது. நாளொன்றுக்கு 400 கலோரிகளை அப்பியாசத்தின் மூலம் எரித்துக்கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது. அப்பியாசத்தின்போது உங்கள் இருதயத் துடிப்பின் வேகம் அதிகரிக்க வேண்டும். ஓரளவு மூச்சுவாங்குமளவு வரையிலாவது அப்பியாசத்தைச் செய்ய வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட அப்பியாச முறைகள் சில:

 • சிறிய இடைவெளியுடன் வேகமாக நடத்தல் (brisk walking), மலை / குன்று ஏறுதல் (hill climbing), ஓட்டம் (running), சைக்கிள் ஓடுதல் (cycling), நீந்துதல் (swimming) ஆகியன, ட்றெட் மில் (treadmill).

ஒரு நாளைக்கு 30 நிமிட அப்பியாசம் ஆரம்பத்தில் சிரமமாகவிருந்தால், 5-10 நிமிடங்களில் ஆரம்பித்துச் சிறிது சிறிதாக முன்னேறலாம். நீண்ட காலத்துக்கு நீங்கள் அப்பியாசம் செய்யாதவரானால், உங்கள் மருத்துவரிடம் சென்று முழுமையான மருத்துவ பரிசோதனையைச் செய்த பிறகு அப்பியாசத்தைச் செய்வது நல்லது

.Related:  பக்க வாதம் (stroke) – பாகம்2

3. புகைத்தல் (Smoking)

 • நீங்கள் புகைப்பவரானால் விரைவில் அதை நிறுத்துவது அவசியம்.

4. மது அருந்துதல் (Alcohol)

 • நீங்கள் மது அருந்துபவரானால் ஆண்கள் ஒரு நாளைக்கு 3 /வாரத்துக்கு அதிகபட்சம் 15 சாதாரண அளவுகளை (standard drinks) மீறாமலும் பெண்கள் வாரத்துக்கு 14 சாதாரண அளவுகளை மீறாமலும் இருப்பது அவசியம்.
 • சாதாரண அளவென்பது: அரை பைண்ட் பியர் அல்லது ஒரு சிறிய கிளாஸ் வைன் அல்லது மதுபான நிலையத்தில் ஒரு தடவை வார்க்கும் அல்கொஹோல்.

கொலெஸ்ரெறோல் என்றால் என்ன? இது ஒரு வகையான கொழுப்பு. உடலின் கலங்களின் வெளிச் சுவரை உருவாக்கிக் கலங்களைப் பாதுகாப்பதற்கும், ஹோர்மோன்கள், வைட்டமின் D உருவாக்கத்திற்கும் அத்தியாவசியமானது கொலெஸ்ரெறோல். 80 வீதமான கொலெஸ்ரெறோலைத் தயாரிப்பது நமது ஈரல். நாம் உண்ணும் உணவிலிருந்து மீதி 20 வீதமும் கிடைக்கிறது. கொலெஸ்ரெறோலில் இரண்டு வகையுண்டு. ‘நல்ல’ கொலெஸ்ரெறோல் (HDL), ‘கெட்ட’ கொலெஸ்ரெறோல் (LDL) என்று இவற்றைப் பொது வழக்கில் சொல்வார்கள். நல்ல கொலெஸ்ரெறோலின் அளவு 0.9 மி.மோ./லீ இற்கு மேலாகவும், கெட்ட கொலெஸ்ரெறோல் 3.9 மி.மோ./லீ இற்குக் குறைவாகவும் இருக்கவேண்டுமென்பது பொதுவாகப் பரிந்துரைக்கப்படுகிறதெனினும் இரண்டும் சேந்த மொத்த கொலெஸ்ரெறோலின் அளவுதான் முக்கியம் என்பது தற்போது அங்கீகரிக்கப்பட்ட ஒரு விடயம். இது 5.2 மி.மோ / லீ இற்குக் கீழே (200 mg% USA) இருப்பது முக்கியம். மேற்குறிப்பிட்ட அளவுகள் இலங்கையர், தென்னாசியர்களுக்கானவை. இருப்பினும், ஒருவரது வயது, குடும்ப சரித்திரம், முன்னர் மாரடைப்பு அல்லது பக்கவாதம் வந்திருக்கிறதா என்பதைப் பொறுத்து உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் அளவுகளுக்கேற்பக் கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்வது நல்லது.

5. மருந்துகள் Medications

மூளை இரத்தக்குழாய் சம்பந்தப்பட்ட வியாதி உங்களுக்கு இருக்கிறதென்று உறுதிப்படுத்தப்பட்டாலோ, அல்லது அதற்கான ஆபத்துள்ளவர் நீங்களென்று உங்கள் மருத்துவர் உங்களை இனம் கண்டாலோ உங்களுக்குச் சில மருந்துகளை அவர் பரிந்துரைப்பார். அதை நீங்கள், அவர் குறிப்பிட்டபடி தொடர்ந்து எடுத்துவர வேண்டும். அப்படியான மருந்துகள் சில:

 • கொலெஸ்ட்றோலைக் குறைப்பதற்குப் பாவிக்கப்படும் ‘ஸ்ரற்றின்'(statins) வகை.
 • இரத்தத்தைக் கழியாக்காமல் திரவமாக வைத்திருக்க உதவும் (anticoagulants) ‘வார்ஃபறின் ‘(warfarin) அல்லது ‘ஆஸ்பிரின்’ போன்ற வகை. இவை இரத்தம் கட்டியாகாமல் பார்த்துக்கொள்வன.
 • உயர் அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் ‘அஞ்ஞியோரென்சின் – கொன்வேட்டிங் என்சைம்’ (Angiotensin-converting enzyme (ACE) inhibitors ) ஆகியன.

6. நீரிழிவு (Diabetes)

காயப்பட்ட இரத்தக்குழாய்களின் உட்சுவர்களைப் பழுதுபார்க்க கொலெஸ்ரெறோல் பாவிக்கப்படுகிறது

நீரிழிவு என்பது இரத்தத்தில் அதிகம் சீனி (சர்க்கரை) இருப்பது. இது இரத்தத்தினால் காவிச்செல்லப்படும்போது இரத்தக்குழாய்களின் உட்சுவர்களில் சில வேளைகளில் காயத்தைக் / கீறலை ஏற்படுத்திவிடுகின்றது (கண்ணாடி ஓடுகளைப்போலவே). சிதைவடைந்த / கீறப்பட்ட இரத்தக்குழாயின் உட்சுவரைப் பழுதுபார்க்க உடல் பாவிப்பது கொலெஸ்ரெறோலைத்தான். கீறப்பட்ட / காயப்பட்ட குழாயின் உட்சுவர் மீது கொலெஸ்ரெறோலைப் பூசி மெழுகுவதன் மூலம் அது பழுதுபார்க்கப்படுகிறது. இப்படிப் ‘பூசப்படும்’ போது அதிக அளவில் கொலெஸ்ரெறோல் பாவிக்கப்பட்டால் அவ்விடத்தில் இரத்தக்குழாயில் தடை ஏற்பட்டு இரத்த ஓட்டம் குறைக்கப்படுகிறது. இத் தடைகள் (blockage) எவ்வளவு தூரம் இரத்த ஓட்டத்தைத் தடைசெய்கின்றன என்பதை 75% / 80% 100% என மருத்துவர்கள் குறிப்பிடுவார்கள். இத் தடையில் இரத்தத்தில் மிதந்துவரும் குருதித் தட்டுகள் (platelets) குவிக்கப்பட்டும்போது அடைப்பு ஏற்பட்டு இரத்த ஓட்டம் அக்குழாயில் முற்றாகத் தடைப்படவும் (100%) நேரிடுகிறது. எனவே உங்கள் மருத்துவர் சீனியைக் / சர்க்கரையைக் குறையுங்கள் என்று சொல்வதற்கான காரணம் இதுதான்.

Related:  பக்க வாதம் (stroke) – பாகம்2

7. உடற் பருமன் (Obesity)

உங்கள் உயரத்துக்கு ஏற்ற எடை என்னவாகவிருக்கவேண்டுமென ஒரு அட்டவணை உங்கள் மருத்துவரின் சுவரில் தொன்குவதைக் கண்டிருப்பீர்கள். உடற் பருமன் சுட்டி (Body Mass Index (BMI)) என்றதைச் சொல்வார்கள். அதன் பிரகாரம்:

BMI வகைகள்:

 • 18.5 க்குக் குறைவாக இருந்தால் எடை போதாது (under weight)
 • 18.5 -24.9 இடையில் இருந்தால் – ஏற்றுக்கொள்ளக்கூடியது
 • 25-29.9 எடை கூடிவிட்டது
 • 30 க்கு மேல் – ஏற்றுக்கொள்ள முடியாது (obeise)

அதிகரித்த உடற்பருமன் இரத்தக்குழாய் சம்பந்தப்பட்ட நோய்கள் மட்டுமல்லாது வேறு பல நோய்களுக்கும் காரணமாகிறது. எனவே தேகாப்பியாசம் மூலமும் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்வதன் மூலமும் உடற்பருமனைக் குறைப்பது ஆரோக்கிய வாழ்வுக்கு அத்தியாவசியமாகிறது.

8. ஒழுங்கற்ற இதயத் துடிப்பு (Atrial fibrillation (AF)

ஒழுங்கற்ற இதயத்துடிப்புள்ளவர்களுக்கு எதிர்பாராத விதத்தில் இரத்தம் கட்டியாகிவிடுவது நடைபெறுகிறது. இக் கட்டிகள் இரத்தக்குழாய்களினூடு மிதந்து சென்று மூளைக்குள் இருக்கும் சிறிய குழாய்களில் சிக்கி முற்றான அடைப்பை ஏற்படுத்துவதால் பக்கவாதம் ஏற்படுகிறது. இதற்குக் காரணம் இதயத்தின் அறைகள் சந்தம் தப்பித் துடிப்பதனால்தான். களைப்பு (fatigue), மூச்சு வாங்கல் (shortness of breath), இதயம் படபடத்தல் (palpitations) போன்றவை இதன் சில அறிகுறிகள். இதனால் உடலுக்குப் போகும் இரத்தம் குறைவாக இருப்பதால் (களைப்பு, மூச்சு வாங்குதல்) உடல் அதிக உயிர்வாயுவைக் கேட்டு இதயத்துடிப்பை அதிகரிக்க முயற்சிக்கிறது. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன.

ஒழுங்கற்ற இதயத்துடிப்புக்கு சிகிச்சைகள் உள்ளன. மருந்துகள் (blood thinners), அறுவைச் சிகிச்சை அல்லது இதயத்துடிப்பின் மின்னதிர்வுகளை அவதானிக்கும் / சீராக்கும் முறைகள் (catheter ablation procedure) போன்ற பல வழிகளில் இவ் வியாதிக்குச் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

9. கழுத்து நாடியில் அடைப்பு (Carotid Stenosis)

இதுவரை நாம் பார்த்தது மூளைக்குள் இரத்தத்தை வழங்கும் சிறிய குழாய்களில் அடைப்பு / தடை ஏற்படுவதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி. இதைவிட, இதயத்திலிருந்து கழுத்தின் வழியாக மூளைக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் பிரதான நாடிகளில் (carotid arteries) ஏற்படும் அடைப்பு / தடை பற்றிப் பார்ப்போம்.

கழுத்து நாடி

உடலில் காயங்கள் ஏற்படும்போது இரத்த சோகை ஏற்படாமல் தடுப்பதற்கு உடல் செய்யும் ஒரு தந்திரம் காய்ப்பட்ட இடங்களில் இரத்தத்தை உறையச் செய்து சோகையை நிற்பாட்டுவது. இதற்கெனப் பாவிக்கும் ஒரு பொருள் இரத்தத் தகடுகள் (platelets). சில வேளைகளில் இத் தகடுகள் சில ஒன்றாக ஒட்டிக்கொண்டு திரளையாக உருவாகி இரத்தக் குழாய்களை அடைத்துவிடுவதுமுண்டு. கழுத்து நாடிகளில் இவ்வடைப்பு 70 வீதத்துக்கு மேல் இருக்குமானால் பக்கவாதம் அல்லது முற்றான செயலிழப்பு / மரணம் ஏற்படலாம். இதற்கு சிகிச்சையாக அறுவைச் சிகிச்சை மூலம் இவ்வடைப்பைச் சுத்தம் செய்துகொள்ளலாம். அஸ்பிரின் போன்ற இரத்தத்தை இலகுவாக்கும் மருந்துகளும் இப்படியான இரத்த தகடுகளின் திரட்சியை உடைக்கவல்லன.

Related:  பக்க வாதம் (Stroke) -1

எனவே முடிவாக, பக்கவாதம் (stroke) ஏற்படுவதற்கு முக்கிய காரணம் மூளையின் பல பகுதிகளுக்கும் செல்லும் இரத்த ஓட்டத்தில் கட்டுப்பாடு, தடை ஏற்படுவது எனவும் அதை தவிர்க்க எப்படியான வாழ்வியல் நடைமுறைகளைப் பின்பற்றவேண்டுமென்பதையும் பார்த்தோம். இவற்றில் முக்கியமானவை ஒழுங்கான தேகாப்பியாசம், ஒழுங்கான உணவு, ஒழுங்கான உடற் பரிசோதனை என்பதனை மீண்டும் வலியுறுத்தி மீண்டுமின்னுமொரு கட்டுரையின் மூலம் சந்திப்போம்.

Print Friendly, PDF & Email