நோய் தீர்க்கும் குடல் கிருமிகள்
புளித்த உணவு உடலுக்கு நல்லதா?
மருத்துவர் ராஜேஸ்வரி முத்துலிங்கம்
எமது உடலில் பல ட்றில்லியனுக்கு மேலான நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை பெருங்குடல், சிறுகுடல் போன்ற சமிபாட்டுத் தொகுதி உறுப்புகளிலேயே வாழ்கின்றன. இவற்றால் எங்களுக்கு ஏற்படும் தீமைகளை விட நன்மைகளே அதிகம் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.

இந்நுண்ணுயிரிகளில் பெரும்பாலானவை பக்டீரிய வகையைச் சேர்ந்தவை. எல்லா உயிர்களைப் போலவே இவற்றுக்கும் தமது வாழ்வும் இனப்பெருக்கமுமே முக்கியமானவை. பக்டீரியாவைப் போலவே வைரஸ்கள், பங்கஸ்கள் ஆகியனவும் நுண்ணுயிர் வகையினதான். ஆனாலும் வைரஸ்கள் மனிதக் கலங்களுக்குள் சென்றால் மட்டுமே தமது இனப்பெருக்கத்தைச் செய்ய முடியும். எனவே குடலில் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்துவது பக்டீரியா தான்.
பக்டீரியா உயிர் வாழ்வதற்கு எம்மைப் போலவே சர்க்கரை அல்லது சீனி தேவை. நாம் உண்ணும் உணவும் சமிபாட்டின் இறுதியில் குளுகோசாக மாற்றப்படுகிறது. எனவே பக்டீரியாக்கள் எமது குடலில் தங்கியிருந்து ஏற்கெனவே சமிபாடடைந்த உணவைப் பெற்றுக்கொள்கின்றன. அதுமட்டுமல்லாது எமது உடலில் சுரக்கும் நொதியங்களால் சமிபாடடைய முடியாத பதார்த்தங்களை (செலுலோசு / மரக்கறிகள்) சமிபாடடையச் செய்ய பக்டீரியாக்கள் உதவி செய்கின்றன. இதனால் இவ்வகையான பக்டீரியாக்களை ‘தோழமையான’ பக்டீரியாக்கள் என அழைக்கிறோம். உண்மையில் எமது உடலிலுள்ள கலங்களை விட (30 ட்றில்லியன்) அதிகபக்டீரியாக்கள் (40 ட்றில்லியன்) எமது சமிபாட்டுத் தொகுதியில் வாழ்கின்றன. இப்படி ஏறத்தாழ 1,000 விதம் விதமான பக்டீரியாக்கள் இங்கு வாழ்கின்றன. ஒவ்வொன்றும் வெவ்வேறு பணிகளை ஆற்றுகின்றன. எமக்குத் தீங்கேதும் செய்யாது இசைபட வாழும் இவற்றை குடல் நுண்ணுயிரிகள் (Gut Microbiome) என அழைக்கிறார்கள். எமது நோயெதிர்ப்புத் தன்மை, இருதயம், உடல் எடை உடபடப் பலவிதமான விடயங்களில் எமது ஆரோக்கியத்தைப் பேண இந்நுண்ணுயிரிகள் உதவுகின்றன.
குடல் நுண்ணுயிரிகள் என்றால் என்ன?
பெரும்பாலான நுண்ணுயிரிகள் தமது பாதுகாப்புக்காக சிறுகுடல் மற்றும் பெருங்குடலிலுள்ள சிறு மறைவிடங்கள் போன்றவற்றில் வாழ்கின்றன. ஒட்டுமொத்தமாக இவற்றின் எடை 2-5 இறாத்தல்கள் எனவும் மொத்த கனவளவில் மூளையின் அளவில் இரும்மெனவும் கூஎமது ஆரோக்கியத்தில் இந்நுண்ணுயிரிகளில், குறிப்பாக பக்டீரியாவின் பங்கே அதிகம் ஆராயப்பட்ட ஒன்று.
பக்டீரியாக்கள் எமது உடலை எப்படிப் பாதிக்கிறது?

பல மில்லியன் வருடங்களாக இந்நுண்ணுயிரிகளுடன் இசைபட வாழ்வதற்கு மனிதகுலம் பழகிவிட்டது. இக்காலகட்டத்தில் மனித உடலில் அவை ஆற்றிய பணிகள் எமது ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பவையாக மாறிவிட்டன. தற்போது அவை இல்லாது எம்மால் உயிர்வாழவே முடியாது. நாம் பிறந்த நாள் தொடக்கம் அவை எம்முடன் வாழ்ந்துவருகின்றன. நாம் தாயின் கருவறையிலிருந்து புறப்படும்போது தாயின் உறுப்புக்களிலிருந்து அவை எமதுடலில் தாவி விடுகின்றன அல்லது தாயினால் எம்மோடு எமக்கு உதவியாக அனுப்பிவைக்கப்படுகின்றன. தொடர்ந்து நாம் வளரும்போது மேலும் புதிய நுண்ணுயிரிகள் எம்மோடு சேர்ந்துகொள்கின்றன. இவற்றில் எமது உடலுக்கு எதிரிகளென அறியப்படுபவற்றை உடல் அழித்துவிடுகிறது. உடலால் அழிக்கப்படமுடியாதன மருந்துகள் மூலம் அழிக்கப்படுகின்றன.
அதிசயமாக நாம் உண்ணும் உணவு எமது நுண்ணுயிர்களின் பன்முகத்தன்மையை மாற்றுகிறது. உதாரணத்திற்கு எமது தாய்ப்பாலில் இருந்து வளர ஆரம்பிக்கும் பக்டீரியாவுக்குப் பெயர் பைஃபிடோபக்டீரியா (Bifidobacteria). தாய்ப்பாலில் இருக்கும் சர்க்கரையை சமிக்கத்தக்க வகையில் மாற்றிக்கொடுக்கின்றது. சில பக்டீரியாக்கள் உணவிலுள்ள நார்ச்சத்துக்களை அமிணோ அமிலங்களாக மாற்றுகின்றன. நார்ச்சத்துக்கள் உடல் எடை, நீரிழிவு, இருதய வியாதி, புற்றுநோய் ஆகியவற்றைக் குறைக்க உதவுகின்றன. அது மட்டுமல்லாது எமது உடலின் நோயெதிர்ப்பு தன்மையை அதிகரிப்பதில் குடல் நுண்ணுயிரிகள் பெருமுதவி செய்கின்றன. பொதுவாக எமதுடலில் பிற எதிரிகள் நுழைந்தவுடன் நோயெதிர்ப்புக் கலங்களுக்கு பக்டீரியாக்கள் எதிரிகள் பற்றிய தகவல்களை அனுப்பிவிடுகின்றன. இதனால் எமது நோயெதிர்ப்புக் கலங்கள் தாமதிக்காது தமது பணிகளை ஆரம்பித்துவிடுகின்றன. மூளை ஆரோக்கியமாகத் தொழிற்படுவதற்கும் இந்நுண்ணுயிரிகள் பெரும்பாங்காற்றுகின்றன. மூளையோடு இணைந்து பணியாற்றும் மத்திய நரம்புத் தொகுதி ஆரோக்கியமாகச் செயற்படுவதற்கு பக்டீரியாக்க்கள் உதவி செய்கின்றன.
உடலின் எடையைக் குறைக்கும்
உடலில் ஆயிரத்துக்கும் மேலான தோழமையான பக்டீரியாக்கள் வாழ்வது ஆரோக்கியமாக இருப்பினும் தோழமையற்ற பக்டீரியாக்கள் நோய்களுக்கே வழிவகுக்கும். இவை இரண்டுக்கும் சமநிலை இல்லாதிருந்தால் அது உடலின் எடையை அதிகரிக்க ஏதுவாகலாம். இரட்டைக் குழந்தைகளிடையே செய்யப்பட்ட பல ஆராய்ச்சிகளில் ஒருவர் எடை அதிகமுள்ளவராகவும் மற்றவர் எடை குறைந்தவராகவும் காணப்பட்ட சந்தர்ப்பங்களுண்டு. இதன் மூலம் நுண்ணுயிரி வேறுபாடுகளுக்கு மரபணுக்கள் காரணமில்லை என்பது புலனாகிறது. ஒரு ஆராய்ச்சியின்போது உடல் எடை அதிகமான ஒருவரின் குடல் நுண்ணுயிரியை எலிக்கு மாற்றியபோது அவ்வெலியின் உடல் எடையும் அதிகரித்தது எனவும் பின்னர் உடல் எடை குறைந்த இரட்டையரின் நுண்ணுயிரை அவ்வெலிக்குக் கொடுத்தபோது மீண்டும் அதன் எடை மீண்டும் குறைந்துவிட்டது எனவும் அறியப்பட்டது. இந்த இரட்டையர் இருவரும் ஒரே உணவை உண்பவர்கள் தான்.
குடல் வியாதிகள்
சீரற்ற நுண்ணுயிர் சமநிலையால் குடலில் வியாதிகள் வருவதற்கான சந்தர்ப்பங்களும் உண்டு. குடல் எரிச்சல் நோய்க்குறி (Irritable Bowel Syndrome (IBS)), குடல் அழற்சி (Inflammatory Bowel Disease (IBD)) போன்றவை நுண்ணுயிரிகளின் செயற்பாட்டால் ஏற்படுபவை. வயிறு ஊதுதல் (bloating), வயிற்றுப் பிடிப்பு (cramps), வயிற்று வலி (abdominal pain) போன்ற அறிகுறிகள் குடல் எரிச்சலை உண்டுபண்ணுகின்றன. தோழமையற்ற பக்டீரியாக்களினால் வெளிப்படுத்தப்படும் இரசாயனப் பதார்த்தங்கள் மற்றும் வாயுக்கள் குடலில் எரிச்சலை ஏற்படுத்துகின்றன.

இருப்பினும் தோழமையுள்ள நல்ல பக்டீரியாக்களைக் கொண்ட உணவுகளை உண்ணும்போது குடல் நுண்ணுயிரிகளின் சமநிலை மீட்கப்படுகிறது. இதனால் பல குடல் வியாதிகள் தீர்க்கப்படுகின்றன. தயிர் (yogurt) மற்றும் புறோபயோட்டிக்ஸ் (probiotics) எனப்படும் ஆரோக்கிய மருந்துகளில் பைஃபிடோபக்டீரியா, லக்டோபசில்லி ஆகிய பக்டீரியாக்கள் காணப்படுகின்றன. இவை காயமடைந்த குடற்சுவர்மீது பாதுகாப்பு படலமொன்றை உருவாக்குவதன் மூலம் பாதிக்கப்பட்ட குடலைச் சீர் செய்கின்றன. அத்தோடு நோய்களை உருவாக்கும் கெட்ட பக்டீரியாக்கள் குடற்சுவரில் தங்கி வாழாமல் இந்த பக்டீரியாக்கள் அவற்றை அப்புறப்படுத்திவிடுகின்றன.
ஆரோக்கியமான இருதயத்திற்கு குடல் நுண்ணுயிரிகள்
ஆரோக்கியமான இருதயத்தைப் பேணுவதற்கு குடல் நுண்ணுயிரிகள் பெருமுதவி செய்கின்றன. இருதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு HDL எனப்படும் ‘நல்ல’ கொலெஸ்ரெறோலும், ட்றைகிளிசெறைட்ஸ் என்னும் பதார்த்தமும் மிக முக்கியமானவை. 1,500 பேரில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்றில் சீரான குடல் நுண்ணுயிரிகளை வளர்ப்பதன் மூலம் குருதியில் HDL மற்றும் றைகிளிசெறைட்ஸ் அதிகரிக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறார்கள். அதே போல குடலில் வாழும் கெட்ட பக்டீரியாக்களினால் குருதியில் ‘கெட்ட’ கொலெஸ்ரெறோல் மற்றும் ட்றிமீதைலமீன் என்-ஒக்சைட் ( Trimethylamine N-Oxide (TMAO)) ஆகியன அதிகரிக்கின்றன எனவும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. குருதிக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதற்கு இந்த TMAO தான் காரணம். இவ்வடைப்புகளினால் மாரடைப்பு, பாரிசவாதம் (stroke) போன்றவை ஏற்படச் சாத்தியமுண்டு.
சிவப்பு இறைச்சி மற்றும் சில விலங்குணவுகளில் காணப்படும் கோலைன் (choline) மற்றும் எல்-கார்ணிற்றின் ( L-carnitine) போன்ற பதார்த்தங்களை சில கெட்ட பக்டீரியாக்கள் TMAO வாக மாற்றிவிடுகின்றன. அதே வேளை புறோபயோட்டிக் உணவுகளில் காணப்படும் லக்டோபசில்லி (Lactobacilli) போன்ற நல்ல பக்டீரியாக்கள் கெட்ட கொலெஸ்ரெறோலைக் குறைக்க உதவுகின்றன.
நீரிழிவைக் குணப்படுத்தும் நுண்ணுயிரிகள்
சமீபத்தில் பரம்பரை காரணமாக type-1 நீரிழிவை ஏற்படுத்தலாமெனச் சந்தேகித்த 33 குழந்தைகள் மீது பரிசோதனை ஒன்று செய்யப்பட்டது. இவர்களில் type-1 நீரிழிவு வெளிப்படுவதற்கு முன்னால் குடல் நுண்ணுயிரிகளின் சமநிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தது அவதானிக்கப்பட்டது. அதே வேளை குடலில் கெட்ட பக்டீரியாக்களின் எண்ணிக்கையும் திடீரென அதிகரித்திருந்தமை அவதானிக்கப்பட்டது. இன்னுமொரு ஆய்வில் ஒரே உணவை உட்கொண்ட வெவ்வேறு மனிதர்களில் குருதிச் சர்க்கரையின் அளவு வேறுபட்டிருந்தது. இதற்குக் காரணம் அவரவர் குடல்களில் இருந்த பக்டீரியாக்களின் வகையும் தொகையும் வெவ்வேறாக இருந்தமையே.
மூளையின் ஆரோக்கியத்தில் நுண்ணுயிரிகளின் பங்கு
மூளையின் ஆரோக்கியதிலும் குடல் நுண்ணுயிரிகள் பெரும் பங்கு வகிக்கின்றன. நரம்புக்கலங்களிடையே இணைப்புகளை ஏற்படுத்தும் நரம்பியக்கடத்திகளை (neurotransmitter) உருவாக்குவதற்கு குடல் நுண்ணுயிர்கள் உதவி புரிகின்றன. மகிழ்ச்சியைத் தரும் ஹோர்மோன் என வர்ணிக்கப்படும் (happy hormone) செறோடோனீன் (serotonin) மன அழுத்தத்தைத் தளர்க்கும் ஒரு நரம்பியக்கடத்தி. இது பெரும்பாலும் குடல்களிலே உருவாக்கப்படுகிறது. அது மட்டுமல்லாது குடல், மூளையுடன் மில்லியன் கணக்கான நரம்புகளால் இணைக்கப்பட்டிருக்கிறது. இதனால் குடலை உடலின் இரண்டாவது மூளை எனவும் கூறுவார்கள். எனவே தான் குடலுக்குள் வரும் எதிரிகள் பற்றி விரைவாக மூளையால் அறியப்பட்டு பாதுகாப்பு பொறிமுறைகளை முடுக்கிவிடக்கூடியதாக இருக்கிறது.
இதே வேளை சமிக்கப்பட்டு குளுகோசாக மாற்றப்படும் உணவு இரத்தத்தில் கலந்து உடலின் எரிபொருள் / சக்தி தேவைக்காக உடல் முழுவதும் எடுத்துச் செல்லப்படுகிறது. இதில் 20-25% மூளையின் தேவைக்கென அனுப்பப்படுகிறது. குடலின் சவ்விலான உட்சுவர் மூலம் உறிஞ்சப்படும் இக்குளுகோஸ் இரத்தஓட்டத்தினால் எடுத்துச் செல்லப்பட்டு மூளைக்கு கொண்டுசெல்லப்படுகிறது. ஆனாலும் இரத்த நாடியயையும் மூளையின் நரம்புக்கலங்களையும் பிரிக்க இடையே இரத்த-மூளை தடுப்புச் சுவர் (blood-brain barrier) ஒன்று உள்ளது. குடலின் சுவரில் பக்டீரியாக்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ ஓட்டைகள் விழும்போது பக்டீரியாக்களும்மிரத்த ஓட்டத்தில் சென்று இரத்த – மூளை தடுப்புச்சுவரையும் ஊடுருவி மூளைக்குள் சென்றுவிடுகின்றன எனவும் இதனாலேயே பல ALS போன்ற பல மூளை வியாதிகள் ஏற்படுகின்றன எனவும் சில விஞ்ஞானிகள் சந்தேகிக்கிறார்கள். எனவே தான் இந்த இரண்டாவது மூளை எனப்படும் குடலை ஆரோக்கியத்துடன் பேணுவது மிக மிக அவசியம்.
ஆரோக்கியமான மனிதர்களின் குடல்களில் காணப்படும் நுண்ணுயிரிகளை விட பல்வேறு வகையான நோய்வாய்ப்பட்டவர்களின் குடல்களில் வெவ்வேறு விதமான நுண்ணுயிரிகள் வாழ்வதைப் பலவித ஆய்வுகளும் நிரூபித்திருக்கின்றன. ஆனால் இவை வெவ்வேறு உணவு வகைகளை உண்பதாலா அல்லது வெவ்வேறு வாழ்வியல் முறைகளைப் பின்பற்றுவதாலா என்பதைத் திண்ணமாகக் கூறமுடியாதுள்ளது. இருப்பினும் புறோபயோட்டிக்ஸ் மூலம் குடல் நுண்ணுயிரிகளை வளர்த்துக்கொள்வதால் மன அழுத்தம் உட்படப் பலவிதமான மூளை வியாதிகளிலிருந்து நிவாரணம் பெறமுடியுமென்பதைச் சில ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.
குடல் நுண்ணுயிர்களை எப்படி முன்னேற்றலாம்?
குடல் நுண்ணுயிரிகளை ஆரோக்கியமான நிலைக்கு முன்னேற்றிக்கொள்ளப் பலவழிகளுண்டு.
- பல வகையான உணவுகளையும் உண்ணுங்கள். குறிப்பாக மரக்கறி, பருப்பு வகை, பழங்கள் போன்றவற்றின் மூலம் பைஃபிடோபக்டீரியா வகையைப் பெருக்கிக் கொள்ளலாம்.
- தயிர், சார்கிராட் (sauerkraut), கீஃபிர் (kefir) போன்ற புளித்த உணவுகளை உண்ணுங்கள். இதில் லக்டோபசிலி என்ற பக்டீரியா இருக்கிறது. நமது பாரம்பரிய உணவுகளான ஊறுகாய், பழம்சோறு, மோர், தயிர் சாதம், இட்லி என்பனவற்றிலும் நல்ல நுண்ணுயிரிகள் உண்டு. ஆனால் இவ்வுணவுகளைச் சூடாக்கினால் பக்டீரியாக்கள் இறந்துவிடும் என்பதையும் மனதில் வைத்துக்கொள்ளவேண்டும். கடைகளில் வாங்கும் தயிர்கள் பாஸ்டரைஸ் பண்ணுப்பட்ட (கொதிக்க வைத்து ஆறிய) பாலில் இருந்து செய்யப்படுபவை. இவற்றில் இருக்கக்கூடிய பக்டீரியாக்கள் இறந்துபோவதற்கான சாத்தியங்கள் உண்டு.
- செயற்கைச் சுவையூட்டும் பதார்த்தங்களைத் (artificial sweeteners) தவிருங்கள். இவற்றில் இருக்கும் பதார்த்தங்கள் குடலில் வளரும் கெட்ட பக்டீரியாக்களைப் பெருக்கிவிடும். பக்டீரியாக்களுக்கும் எம்மைப் போலவே இனிப்பான பண்டங்களில் அதிக நாட்டமுண்டு.
- வாழைப்பழம், சாத்தாவாரி, கடலை, அப்பிள் போன்ற நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை உண்ணுங்கள்.
- மகப்பேற்றுக்குப் பின் குறைந்தது 6 மாதங்களுக்காவது தாய்மார் பில்ளைகளுக்கு தாய்ப்பாலை ஊட்டவேண்டும். தாய்ப்பாலின் மூலம் பைஃபிடோபக்டீரியா வளர்ச்சியடைகிறது.
- அவசியமானால் மட்டுமே அன்டிபயோட்டிக் மருந்துகளை எடுங்கள். அன்டிபயோட்டிக் மருந்துகள் குடலிலுள்ள நுண்ணுயிரிகளை அழித்துவிடுகிறது. இதனால் உடற் பருமன் அதிகரித்து அதைத் தொடர்ந்து நீரிழிவு, இருதய வியாதிகள் வருவதற்குக் காரணமாகலாம்.
நமது முன்னோரது உணவு ஆரோக்கியமாக இருந்தமையினால் அவர்கள் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். அவர்களின் உணவு புளித்த உணவுகளையும் கொண்டிருந்தது. ஊறுகாய் போன்ற புளிப்பான பதார்த்தங்களையும் அவர்கள் சேர்த்துக்கொண்டார்கள். இவையெல்லாம் அவர்களது குடல்களில் நல்ல நுண்ணுயிரிகளை வளர்த்துக் கொண்டன. அவர்களுக்கு மூளை வியாதிகளோ, நீரிழிவோ, இருதய வியாதிகளோ குறைவாக இருந்தமைக்கு ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரிகளே காரணம். இப்போதுகூடக் குறைவில்லை. உடற்பருமன் அதிகமுள்ளோர் குடல் நுண்ணுயிரிகளைச் சமநிலையில் வைத்துப் பாருங்கள். வெற்றி விரைவில் கிடைக்கலாம். (Image Credit: Mayo_Clinic)