நோயெதிர்ப்பு ஆற்றல் (Immune System) | தொழிற்பாடும் விளக்கமும்
நமது உடல் – 1
அகத்தியன்
மனிதரில் செயற்படும் நோயெதிர்ப்பு தொழிற்பாடு அற்புதமானது, புதிர் நிறைந்தது, சுவாரசியமானது. எமது உடலினுள் நிரந்தரமாகக் குடிகொண்டுள்ள காவல்துறை அது. உடலுக்குள் அனுமதியில்லாமல் வரும் எந்தவொரு கிருமியையும், பொருளையும் அக்காவற்துறை கண்டுபிடித்து அழித்து விடுவது வழக்கம். சரியாகத் தொழிற்படும்போது உடலினுள் பொதுவாக நோய்களைக் கொண்டுவரும் நுண்ணுயிரிகளான பக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணிகள், ஃபங்கஸ்கள் என்பவற்றை இக்காவற்துறை அழைத்துவிடுகிறத
ஆனால் உள்ளே வருகின்ற நுண்ணுயிரிகளும் பக்காத் ‘திருடர்கள்’ தான். அவையும் மகா கெட்டித்தனமானவை. சில வேளைகளில் அவை ‘மாறு வேடங்களில்’ உடலின் இதர கலங்கள் / இழையங்களைப் போல் ‘நல்ல பிள்ளைகளைப் போல் வந்து உடலின் உறுப்புக்களில் புகுந்து இனப்பெருக்கம் செய்து தமக்கென்று ஆட்சியைத் தொடங்கிவிடுகின்றன.
நமது காவல்துறையும் மட்டும் இலேசானதல்ல. யார் நம்மூரான் யார் வெளிநாட்டான் என்பதை அறிந்து, எதிரிகளை இனம்கண்டு அவற்றை அழித்துவிடுகின்றன. இப்படி இனம் காணுவதற்கு அது பாவிக்கும் நடைமுறைகள் ஆச்சரியமானவை. அவை பற்றிக் கீழே விளக்கமாகப் பார்ப்போம்.
அதற்கு முதல் இன்னுமொரு விடயத்தையும் தொட்டுச் செல்வது நல்லது. நமது காவல்துறை சில வேளைகளில் புரட்சி நடவடிக்கைகளிலும் இறங்கி விடுவதுண்டு. அதாவது அது குழப்ப நிலைக்குள் தள்ளப்பட்டால், தான் பாதுகாக்கவேண்டிய கலங்களையும், இழையங்களையும் உறுப்புகளையுமே சில வேளைகளில் தாக்கத் தொடங்கிவிடும். இதனால் உயிராபத்து ஏற்படும் நிலைலமைகளுமுண்டு. இக் கோளாறை auto immune disease என்பார்கள். இதுபற்றியும் பின்னர் விளக்கமாகப் பார்ப்போம்.
உள்ளார்ந்த நோயெதிர்ப்பு
நோயெதிர்ப்புத் தொழிற்பாட்டை உள்ளார்ந்த ( innate) மற்றும் இசைவார்ந்த (adaptive / acquired) என்று இரண்டு வகைகளுக்குள் அடக்கலாம்.
உள்ளார்ந்த நோயெதிர்ப்பு என்பது நீங்கள் பிறந்தபோது உங்களுடன் வந்தது. உங்கள் பரம்பரையில் இருக்கக்கூடிய திறமைகளுடனும், குறைபாடுகளுடனும் அது உங்களைத் தொடரும். நோயெதிர்ப்பு என்பது வெறுமனே எமது உடற் திரவங்களில் நீந்தித் திரியும் துணிக்கைகளை மட்டும் கொண்டதல்ல. பல முக்கியமான உறுப்புக்களையும், அவற்றின் தொழிற்பாடுகளையும் அது உள்ளடக்கியுள்ளது. சருமம், வயிற்று அமிலம் (stomach acid) மற்றும் கண்ணீர், சரும எண்ணை, சளி, இருமலின் போது வெளிப்படும் ஈழை என்பவற்றில் காணப்படும் நொதியங்கள் (enzymes) ஆகியன முற்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட, உள்ளார்ந்த வகையாகும். அத்தோடு உடலில் சுரக்கும் interferon, interleukin-1 போன்ற பதார்த்தங்களும் இவ் வகையைச் சேர்ந்தன.
இதிலுள்ள குறைபாடு என்னவென்றால், இவ்வகைப் பாதுகாப்பு உங்களுடன் பிறந்த ஒன்று ஆகையால் அதற்கு பழகிப்போன ‘ஆபத்துக்களிலிருந்து’ மட்டுமே உங்களைக் காப்பாற்றுதற்கு முடியும். புதிதாக அறிமுகமாகும் ஒரு ஆபத்திலிருந்து உங்களைக் காப்பாற்ற அதற்குத் தெரியாது.
உதாரணத்திற்கு, உங்களுக்கு சுரம் ஏற்பட்டால், சருமத்தினூடு வியர்வையை உருவாக்கி உடலைக் குளிராக வைத்திருக்க முயற்சி செய்ய அதற்குத் தெரியும். சாப்பாடு புரைக்கேறினால் இருமலைத் தோற்றுவித்து அத நிவர்த்தி செய்ய அதற்குத் தெரியும். தூசி சுவாசப்பைகளுள் புகுந்துவிட்டால் தும்மலோடு சேர்ந்த சளியின் மூலம் அவற்றை வெளியே அனுப்ப அதற்குத் தெரியும். இவற்றுக்காக அது பரம்பரை பரம்பரையாகப் பழக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் புதிதாக வந்த கொறோனா வைரஸை அதற்குத் தெரியாது. அதைக் கொல்வதெப்படி என்பதும் அதற்குத் தெரியாது.
இசைவார்ந்த நோயெதிர்ப்பு
இசைவார்ந்த நோயெதிர்ப்பு என்பது உடல் பிற்காலங்களில் தானாக உருவாக்கிக்கொண்டது. உதாரணத்திற்கு நாம் சிறுவயதில் பல நோய்த்தொற்றுள்ள சிறுவர் சிறுமியருடனும் விளையாடுவதன் மூலம் சிறிது சிறிதாக எமது உடல் அவ்வகையான நோய்களை எதிர்க்கும் சக்தியைத் தானவே உருவாக்கிக் கொள்வது.
உள்ளார்ந்த நோயெதிர்ப்பைவிட இது கொஞ்சம் சிக்கலானது. அதாவது பொறியியலாளர் தேவைகளை அறிந்து அதற்கேற்ப கருவிகளை உற்பத்தி செய்துகொள்வது போல, உடலும் தனக்கு வருகின்ற ஆபத்துக்களை இனம் கண்டு அதை எதிர்கொள்ளத்தக்க நோயெதிர்ப்பு சக்தியைத் தானாகவே உருவாக்கிக் கொள்வது.
தடுப்பு மருந்து
இதற்கு நல்ல உதாரணம் தடுப்பு மருந்து ஏற்றுதல். இளம்பிள்ளைவாதம் (போலியோ) வராது தடுப்பதற்கென நாம் எமது குழந்தைகளுக்குச் சிறு வயதிலேயே தடுப்பு மருந்து (ஊசி / குளிசை) ஏற்றுகிறோம். அது ஒரு வகையான இசைவார்ந்த நோயெதிர்ப்பு முறை.
இத் தடுப்பு மருந்து என்பது, ஊசியால் போடப்படும், செயலிழக்கப்பட்ட போலீயோ வைரஸ் ( inactivated poliovirus -IPV) அல்லது வாயினால் எடுக்கப்படும், பலவீனமாக்கப்பட்ட போலியோ வைரஸ் (weakened poliovirus – OPV).
இப்படியான செயலிழக்கப்பட்ட அல்லது பலவீனமாக்கப்பட்ட வைரஸ்கள் உடலுக்குள் சென்றவுடன் அவற்றைப் ‘பலமான’ எதிரியென அடையாளம் கண்டு உடல் அவற்றை அழிப்பதற்கான கருவிகளைச் செய்யத் தொடங்கிவிடும். உண்மையில் அந்த வைரஸ்கள் பலமிழந்த நிலையில் எமக்கு நோயை உண்டாக்காது. அதே வேளை உடலோ ஒரு ‘பலமான’ எதிரியை அழிக்கவல்ல ஆயுதத்துடன் தயாராக நிற்கும். எப்போதாவது உண்மையான போலியோ வைரஸ் உடலுக்குள் புக நேர்ந்தால் நமது காவற்படை எதிரி இனப்பெருக்கம் செய்ய முன்னரே கபளீகரம் செய்துவிடும். அத்தோடு, நாம் பெருமை கொள்ளத்தக்க வகையில் முதலில் நாம் உள்ளே அனுப்பிய செயலிழக்கப்பட்ட வைரஸை, நமது காவற்படை இனம் கண்டு (face recognition?) ஞாபகத்தில் (memory) வைத்துக்கொள்ளுகிறது. அந்த எதிரி எத்தனை வருடங்களுக்குப் பின்னர் வந்தாலும் அதை உடனடியாக இனம்காணுமளவுக்கு சகல தரவுகளையும் அது பாதுகாத்து வைக்கிறது (database).
பொக்கிளிப்பான் போன்ற நோய்கள் ஒரு தடவை வந்தால் திரும்ப வராது என நம் முன்னோர் கூறுவதன் பின்னணி இதுதான். பொக்கிளிப்பான் நோய்க்குக் காரணமான வைரஸ் பற்றிய தகவல்கள் (database) உடலிடம் இருக்கிறது. அது எப்போ திரும்பி நுழைவதற்கு முயற்சித்தாலும் நமது காவற்படை அதை அனுமதிக்காது.
தொடரும்….
No related posts.