‘நீளும் கோவிட்’ | மருத்துவரை அலைக்கழிக்கும் நோய்க்குறிகள்

அகத்தியன்

உங்களில் சிலர் கோவிட் தொற்று வந்து சிகிச்சை பெற்றவர்களாக இருக்கலாம்; சிலர் நோய் தொற்றியிருந்தும் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறாதவர்களாக இருக்கலாம். சிலர் சிறிய அறிகுறிகளோடு நோய் வந்ததா போனதா என்பதையே அறியமுடியாதவர்களாகவும் இருக்கலாம். ஆனால் என்னவோ உங்கள் உடல், மன நிலையில் நீங்கள் முன்புபோல் இல்லை என்பதை மட்டும் உணர்கிறீர்கள்.

இவ் விடயத்தில் நீங்கள் மட்டும் தனியாக இல்லை. பல்லாயிரக்க்கணக்கானோர் வரிசையில் நிற்கிறார்கள்.

நோயிலிருந்து தப்பிவிட்டாலும் அதன் தாக்கத்திலிருந்து நீங்கள் இன்னும் பூரணமாக வெளிவந்துவிடவில்லை. இதை ‘நீளும் கோவிட்’ (long covid) என மருத்துவ உலகம் அழைக்கிறது. ‘கோவிட்டுக்குப் பின்னான நோய்க்குறி (post covid syndrome (PCS)) என முன்பு இதை அழைத்தார்கள். ஆனாலும் இதைப்பற்றிய உறுதியான பின்னணியை எவராலும் இதுவரை கண்டறிந்துவிட முடியாமலுள்ளது.

பிரித்தானிய தேசிய சுகாதார நிறுவனம் இதை இப்படி வரைமுறைப்படுத்துகிறது: ” கோவிட் தொற்றி 12 மாதங்களுக்குப் பிறகும் தொடர்கின்ற, அதே வேளை வேறு நோய்களின் அறிகுறிகளெனக் கண்டு பிடிக்கப்படாத, நோய்க்குறிகளை ‘நீளும் கோவிட்’ என அழைக்கலாம்.

உலகம் முழுவதும் கோவிட் நோயாளிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களிலிருந்து, 3,800 பேர்களில் 205 வித்தியாசமான அறிகுறிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் ஒருவருக்கு ஒரே நேரத்தில் பல நோய்க்குறிகள் தென்படலாம். இவற்றில் மிக முக்கியமானவை மூன்று: மோசமான சுவாசக் குறைபாடு (severe breathlessness), சோர்வு (fatigue), மூளை மந்தம் (brain fog).

தொடர்சியான சோர்வு நோய்க்குறி (chronic-fatigue syndrome(CFS))

‘தொடர்ச்சியான சோர்வு’ ( chronic fatigue) என்பது கோவிட் தொற்றுக்கு நீண்டகாலத்துக்கு முன்னரே அறியப்பட்ட நோய்க்குறி . இந்நோய்க்குறிக்கான காரணங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. நல்ல சுகதேகிகள் பலரில், பக்டீரியா அல்லது வைரஸ் தொற்றுவந்ததற்குப் பின்னால் நீண்ட காலத்துக்கு உபாதையைத் தருகின்ற ஒன்றாக இது அவதானிக்கப்பட்டது. சிலருக்கு முன்னெப்போதும் இல்லாத தலைவலியும் (chronic migraine) ஏற்பட்டிருக்கிறது. கோவிட் தொற்றுக்குள்ளான பல நோயாளிகளிலும் இப்படியான தொடரும் சோர்வு, தலைவலி போன்ற நோய்க்குறிகள் அவதானிக்கப்படுகின்றன. சிலரில் Sars-Cov-2 கிருமிகள் இருந்தமைக்கான அறிகுறியோ அல்லது அவற்றை அழிப்பதற்கென உருவாக்கப்பட்ட எதிர்ப்பொருள்கள் (antibodies) தோற்றியிருந்தமைக்கான அறிகுறிகளோ இருக்காதது தான் விஞ்ஞானிகளைக் குழப்பத்திலாக்குகிறது.

மத்திய வயது பெண்களே அதிகம் பாதிக்கப்படுபவர்கள்

அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் காணப்பட்ட இந்த ‘நீளும் கோவிட்’ நோய்க்குறிகள் பெரும்பாலும் மத்திய வயதுடைய பெண்களாகவே இருக்கின்றனர். சிறுபான்மை இனத்தினரை கோவிட் மோசமாகத் தாக்கினாலும் அவர்களில் இந்த ‘நீளும் கோவிட்’ நோய்க்குறிகள் அவதானிக்கப்பட்டது குறைவாகவே உள்ளது. வெள்ளை இனப் பெண்கள் மருத்துவர்களைப் பார்க்கும் வீதமும், தமது சுகாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண்பதற்கு அவர்கள் அதிக முயற்சிகள் எடுக்கிறார்கள் என்பதனாலும் புள்ளிவிபரங்களில் அவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் எனவும் சில மருத்துவர்கள் கருதுகிறார்கள். லண்டன் கிங்க்ஸ் கொலிஜ் ஆய்வின்படி இந் ‘நீளும் கோவிட்’ தாக்குதலுக்கு உள்ளாகுவோரின் சராசரி வயது 45.

மூன்று வகையான நோய்க்குறிகள்

அமெரிக்க தேசிய சுகாதார நிலையத்தில் பணிபுரியும் அவிந்திர நாத் அவர்களின் கருத்துப்படி, மூன்று வகையான அறிகுறிகளுடன் ‘நீளும் கோவிட்’ நோயாளிகள் இருக்கிறார்கள். ஒன்று: சிறிய அப்பியாசங்கள் செய்யும்போதோ அல்லது சாதாரண சிறு வீட்டு வேலைகளைச் செய்யும்போதே விரைவாக மூச்சுவாங்குவது; இரண்டு: மறதி அதிகரிப்பு, மூளைக் குழப்பம்; மூன்றாவது: நரம்புக் குழப்பம் – அதாவது இருதயத் துடிப்பு, சுவாசம், சமிபாடு போன்ற விடயங்களில் ஒழுங்கீனம். இப்படியானவர்கள் சிலரில் இதயம் படபடத்தல், தலைச்சுற்று ஆகியனவும் காணப்படுகிறது.

கருதுகோள்கள்

மேற்கண்ட பல வகையான நோய்க்குறிகளை வைத்து மூன்று உயிரியல் ரீதியான கருதுகோள்களை மருத்துவர்கள் முன்வைக்கின்றார்கள். ஒன்று: ‘நீளும் கோவிட்’ தொடர்ந்துவரும் ஒரு வைரஸ் தொற்று(persistent viral infection); இரண்டு: ஒரு சுய தடுப்பாற்றல் வியாதி (autoimmune disorder); மூன்று: கோவிட் தொற்றின் ஆரம்பத்தில் ஏற்பட்ட அழற்சியின் (inflammation) தொடர் விளைவு.

தொடரும் வைரஸ் தொற்று

சில நோயாளிகளில் தொற்றிய வைரஸ் முற்றாக ஒழிக்கப்படுவதில்லை. அவர்களால் மற்றவர்களுக்கு தொற்று ஏற்படாதபோதும் வைரஸ் அவர்களது உடலில் வாழ்ந்துகொண்டே இருக்கிறது. நோயாளியின் உடலில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தாதவாறு தம்மில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு வாழ சில வைரஸ்கள் பழகிக்கொண்டுவிடுகின்றன. இவை தம்மை விருத்திசெய்யாவிடினும், இவற்றின் சில விளைபொருட்களை அறியும் உடல், அதற்கேற்ற எதிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்கும்போது அது நோயாளியால், ஒரு தொடரும் நோயாக உணரப்படுகிறது. அதே வேளை சாதாரண கோவிட் பரிசோதனைகளாலும் இவற்றைக் கண்டுபிடிக்க முடிவதில்லை. இதனால் ஒளிந்துவாழும் வைரஸ்களின் தொடர்ச்சியான பிரசன்னம் நோயாளிகளின் உடலில் இருக்கும். அவற்றின் விளைவுகளே இச் சுவாசக் கோளாறு. டெங்கு, இபோலா, தட்டம்மை போன்ற இதர வைரஸ் நோய்களினாலும் இப்படியான நீளும் நோயறிகுறிகள் உண்டாகின்றன. SARS-CoV-2 போன்ற RNA வைரஸ்கள் பொதுவாகவே இப்படியான குணாம்சங்களைக் கொண்டவை.

‘இயற்கை’ என்னும் சஞ்சிகையில் வெளிவந்த இன்னுமொரு ஆய்வு பற்றிய தகவலில், குணமடைந்து 4 மாதங்களுக்குப் பிறகும் கொறோணாவைரஸின் உடற்பகுதிகளான புரதக்கூறுகள் சில நோயாளிகளின் சிறுகுடலிலும், சிலரில் சிறுநீரிலும், சிலரில் மலத்திலும் பல மாதங்களின் பின்னரும் காணப்பட்டன எனவும் கூறப்பட்டிருந்தது.

சுய தடுப்பாற்றல் கோளாறு (Auto Immune Disorder)

இதுவும் கோவிட் தொற்று அறியப்பட்டதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே அறியப்பட்டதொரு வியாதி. அதாவது உடலில் புகும் எந்தவொரு எதிரியையும் தாக்கியழிப்பதற்காக உடலினால் உருவாக்கப்படும் நோய்த் தடுப்பு மண்டலத்தின் கட்டுப்பாடற்ற நடவடிக்கையினால் உடலின் சில இழையங்கள் தாக்கியழிக்கப்படுகின்றன. மூட்டுவாதம் (rheumatoid arthritis) போன்றது இதனால் ஏற்படும் ஒரு வியாதி. கொறோணாவைரஸைத் தாக்கியழிப்பதற்காக உடலினால் உருவாக்கப்பட்ட தடுப்புமண்டலக் கலங்களின் அதீத நடவடிக்கைகளினால் உடலின் சொந்த கலங்களே தாக்கியழிக்கப்படுகிறது.

அழற்சி (Inflammation)

உடலில் நுழைந்துகொண்ட எதிரிகளைத் தாக்கியழிக்கும் போரினால் ஏற்படும் பக்க விளைவுகளில் ஒன்று தன்னழிவு. இதன்போது சில உடலுறுப்புகள் காயப்படுகின்றன. இவற்றில் முக்கியமான ஒன்று இரத்தக் குழாய்களின் உட்சுவரைக் கட்டியெழுப்பும் கலங்கள். மூளைக்கு இரத்தத்தைக் காவிச் செல்லும் இரத்தக்குழாய்களில் இக் காயங்கள் ஏற்படும்போது இரத்தக் கசிவுகள் ஏற்பட்டால் பல மூளைக்கலங்கள் பாதிப்புறுகின்றன. இதனால் மூளையின் ஞாபகசக்தி போன்றவை தடைப்படுகின்றன (மூளை மந்தம்)

காபனீரொக்சைட் குறைபாடு

‘நீளும் கோவிட்’ நோயாளிகளில் அவதானிக்கப்பட்ட இன்னுமொரு குறைபாடு அவர்களது இரத்தத்தில் காணப்படும் காபனீரொக்சைட்டின் (CO2) அளவு. காபனீரொக்சைட் உடலில் ஏற்படும் ஒரு கழிவுப்பொருள். இது அதிகமாக இருந்தால் அது நஞ்சு எனவே கருதப்படுவது. ஆனால் அது உடலின் திரவங்களின் அமிலத்தன்மையையும் அது பேணுகிறது. கலங்களின் முறையான சமிபாட்டுத் தொழிற்பாட்டுக்கு சமப்படுத்தப்பட்ட உடலின் அமிலத் தன்மை முக்கியம். எனவே இப்படியான நோயாளிகள் சுவாசப்பயிற்சி மூலம் காபனீரொக்சைட் குறைபாட்டை நிவர்த்தி செய்து கொள்வது நல்லது.

தலைசுற்று, மயக்கம்

சில கோவிட் நோயாளிகளில் திடீரென இரத்த அமுக்கம் குறைவது அவதானிக்கப்பட்டுள்ளது. இப்படியானவர்கள் திடீர் அசைவுகளைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். கால்களில் இரத்தம் தேங்குவதைத் தவிர்க்க இறுக்கமான காலுறைகளை அணிந்து கொள்ளலாம். அதிக வெப்பமுள்ள அல்லது ஈரப்பதனுள்ள நாட்களில் வெளியே போவதைத் தவிர்ப்பது நல்லது.

மிகையான சோர்வு

சிறிய நடவடிக்கைகள் அதிக சோர்வைத் தரும்போது இந்நடவடிக்கைகளிடையே கால இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். மூளை மந்தம் தொடர்பான பிரச்சினைஉடையவர்கள் ‘மூளை அப்பியாசம்’ (cognitive therapy) போன்ற சில பயிற்சிகளிச் செய்கிறார்கள்.

சமீபத்தில் பிரித்தானியாவில் கோவிட் நோயாளிகளிடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பொன்றில் 80% மான முன்னாள் நோயாளிகள் இன்னும் பூரணமான சுகத்தைப் பெறவில்லை எனக் கூறியிருக்கிறார்கள்.

‘நீளும் கோவிட்’ எனப்படும் இந்த வியாதிக்கான முற்றான காரணங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லையாயினும் மேலே கூறப்பட்ட கருதுகோள்களை வைத்து சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் இந்நோய்க்குறிகளைக் கொண்டவர்கள் தத்தம் மருத்துவர்களை ஆலோசித்து உரிய பரிகாரங்களைப் பெற்றுக்கொள்ளவேண்டுமென அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

Print Friendly, PDF & Email