நீரிழிவு நோய்க்கு நீரே மருந்தாகும் – கொலொராடோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள்

நீரை அருந்துவதால் நீரிழிவு, உடற் பருமன் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்களைத் (metabolic syndrome) தவிர்க்க, தடுக்க முடியுமென கொலொறாடோ பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் குழுவொன்று நிரூபித்துள்ளது.

மிகுவேல் லனாஸ்பா என்ற உதவிப்பேராசிரியரின் தலைமையில் பணியாற்றும் இக்குழு, எலிகளில் செய்த பரிசோதனைகள் அவர்களின் இந்தக் கருதுகோளை நிறுவியிருக்கின்றன.

ஃபிறக்டோஸ் (fructose) என்பது பழங்களில் பொதுவாகக் காணப்படும் ஒருவகைச் சர்க்கரை. சமிபாட்டுத் தொகுதியின் பங்கே இல்லாமல் குருதியால் நேரடியாக உறிஞ்சப்படுவது இப் பதார்த்தம். குளுகோசுடன் இதன் மூலக்கூறுகள் இணையும்போது உருவாகுவதுதான் சீனி / சர்க்கரை (sucrose).

நீரிழிவு, உடற் பருமன் ஆகிய வியாதிகளுடன் தொடர்புடையதெனக் கருதப்படும் வேசோபிறெசின் (vasopressin) என்ற ஹோர்மோன் சுரப்பை ஃபிரக்டோஸ் தூண்டுகிறது என்பதை இந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். அத்தோடு எலிகளில் மேற்கொள்ளப்பட்ட இப் பரிசோதனைகளின்போது, நீர் (தண்ணீர்) இந்த ஹோர்மோனின் சுரப்பைத் தடுத்துவிடுகிறது என்பதையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

தேவையான அளவு நீரை அருந்துவதன் மூலம் மனிதரிலும் இந்த நடைமுறை சாத்தியமாகுமா என்பது பற்றி மேலதிக ஆய்வுகளுக்கு இது வித்திட்டுள்ளது என இதன் மூல ஆய்வாளரும், சிறுநீரக-உயர் இரத்த அழுத்த வியாதிகளில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவருபவருமான பேராசிரியர் மிகுவேல் தெரிவித்துள்ளார்.

வேசோபிறெசின் என்ற ஹோர்மோன் உடலின் நீர்த் தேக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. ஆனால் நீரிழிவு வியாதி, அதிக உடற் பருமன் (obesity) உள்ளவர்களில் இந்த் ஹோர்மோனின் அளவு எப்போதும் அதிகமாக இருக்கிறது என்பதைக் கண்டறிந்துள்ளதாக, இப் பல்கலைக்கழகத்தின் இன்னுமொரு ஆராய்ச்சியாளர் றிச்சார்ட் ஜோன்சன் கூறுகிறார்.

ஃபிறக்டோஸ் கரைக்கப்பட்ட தண்ணீரை இவ்விஞ்ஞானிகள் எலிக்கு ஊட்டியபோது அதன் மூளை வேசோபிறெசின் ஹோர்மோன் சுரப்புக்குக் கட்டளையிட்டது எனவும் அந்த ஹோர்மோன் நீரைக் ‘கொழுப்பு’ மாதிரிச் சேமித்து விடுவதனால் உடலிலிருந்து நீர் அகற்றப்படுகிறதென்றும் (dehydration) இப்படிச் சேமிக்கப்பட்ட நீரினால் உடற்பருமன் அதிகரிக்கிறதென்றும் இவ்விஞ்ஞானிகள் கண்டறிந்தார்கள். இதே எலிக்கு சாதாரண, ஃபிறக்டோஸ் கலக்காத, நீரை ஊட்டியபோது அவற்றின் உடற்பருமன் குறைக்கப்பட்டது என அவர்கள் கூறுகிறார்கள்.

உடற் கலங்களில் காணப்படும் V1b எனப்படும் வாங்கி (receptor) வேசோபிறெசின் என்ற இந்த ஹோர்மோனை உள்ளெடுக்கிறது என்றும் இந்த வாங்கிகள் இல்லாத எலிகளில் சர்க்கரை எந்த வியாதியையும் கொடுக்கவில்லை எனவும் இவ் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள். எனவே வேசோபிறெசின் ஹோர்மோனைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உடற் பருமனைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் முடியும் என அவர்கள் நிரூபித்துள்ளார்கள்.

அது மட்டுமல்ல, உடலில் ஏற்படும் நீரிழப்பு கொழுப்புச் சேமிப்பை ஊக்குவிக்கிறது என்பதையும் இவ்விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள். வரண்ட வலயங்களில் வாழும் மிருகங்களில் மிகையான வேசோபிறெசின் காணப்படுவதற்குக் காரணம் அங்கு மிகச் சொற்பமான அளவே நீர் கிடைப்பதால், கிடைத்த நீரைக் கொழுப்பாக மாற்றி அவை சேமித்து வைக்கின்றன என்கிறார் டாக்டர் ஜோன்சன்.

உணவில் அதிகம் உப்பைப் பாவிக்க வேண்டாம் அது உடற் பருமன், நீரிழிவு, கொழுப்பு ஆகியவற்றைத் தருமென்று மருத்துவர்கள் சொல்லும்போது உப்புக்கும் கொழுப்புக்கும் என்ன சம்பந்தம் என யோசித்திருப்பீர்கள். உப்பு நீரை அகற்றும் / உறிஞ்சும் ஒரு காரணி. இப்படி அகற்றப்பட்ட நீரைக் கொழுப்பாக மாற்ற வேசோபிறெசின் உதவி செய்கிறது.

எலிகளில் செய்த இப் பரிசோதனைகள், வளர்சிதை மாற்ற வியாதிகள் (metabolic syndrome) எனக் கூறப்படும் உயர் இரத்த அழுத்தம், இரத்தத்தில் மிகையான சர்க்கரை, மிகையான ட்றைகிளிசறைட் அளவு, இருதய வியாதி, பாரிசவாதம் (stroke), இரண்டாம் வகை நீரிழிவு ஆகியவற்றுக்கான தீர்வாக ‘நீர்ச் சிகிச்சை’ பலன் தருமென்பதை நிரூபித்துள்ளன.

எனவே, மேற்கூறிய அத்தனை வியாதிகளுக்குமான மிகவும் மலிவானதும், இலகுவானதுமான சிகிச்சை, போதுமான அளவு நீரை அருந்துவதன் மூலம் வேசோபிறெசினைக் கட்டுப்படுத்துவது தான் என்கிறார் இவ்வாராய்ச்சியின் முதன்மை விஞ்ஞானியான மிகுவேல் லனாஸ்பா.

“வேசோபிறெசின் சுரப்பினை முடுக்கி விடுவதால் சர்க்கரை / சீனி, இவ்வியாதிகளுக்கு ஒரு வகையில் காரணமாகிறது. ஆனால் நீரைக் கொழுப்பாக்கிச் சேமிக்கும் தொழிற்பாட்டுக்கு நேரடியான காரணம் வேசோபிறெசின். எனவே போதுமான அளவு நீரை அருந்துவதும், உணவில் உப்பைக் குறைப்பதும் தான் மேற்கண்ட வியாதிகளுக்கான சிகிச்சை” என்கிறார் இக் குழுவில் ஒருவரான டாக்டர் ஜோன்சன்.

இவ்வாராய்ச்சி பற்றிய தகவல்கள் JCI Insight என்னும் சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

Print Friendly, PDF & Email