நீரின்றி அமையாது உடம்பு…

அகத்தியன்

தண்ணீர் உடம்புக்கு நல்லது என்று வந்த பல்லாயிரக் கணக்கான கட்டுரைகளைப்போல் இதுவும் ஒன்று என்று அப்பாலே போக வேண்டாம். இது கொஞ்சம் வித்தியாசமானது.

உயிரினம் தோன்றியது நீரிலிருந்து. எல்லா சீவராசிகளின் உடல்களிலும் பெரும்பான்மையானது நீர். உணவைச் சமிபாடடையச் செய்வதிலிருந்து அவற்றைப் பல உறுப்புகளுக்கும் காவிச் செல்வது முதல் கழிவுகளையும் காவிச்சென்று அப்புறப்படுத்துவதுவரை எமது உடலியக்கத்தின் பெரும்பாலான தேவைகளை நீர் பூர்த்தி செய்கிறது. தாவரங்களிலும் விலங்குகளிலும் அப்படித்தான். நீரில்லாத தாவரம் வாடித் தளர்கிறதே அப்படித்தான் மனித உடலும்.

“ஓம், ஓம். அது எங்களுக்கும் தெரியும்” என்று நீங்கள் சொல்லலாம். அதுவல்ல இக்கட்டுரையின் நோக்கம். நீங்கள் அறிந்த விடயங்களுக்கான விஞ்ஞானபூர்வமான விளக்கத்தைத் தருவதே இதன் நோக்கம்.

மன அழுத்தம் (stress) என்றொரு வியாதிபற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். Stress என்பதற்கு சரியான தமிழாக்கம் ‘மன அழுத்தம்’ என்பதில் எனக்கு திருப்தியில்லை. இருப்பினும்… உடல் தனக்கு ஆபத்து வருகிறது என உணர்ந்தால் அந்த ஆபத்தை எப்படி எதிர்கொள்வது என்பதை அறியும் பொறுப்பை மூளையிடம் விட்டுவிடும். வருகின்ற ஆபத்திலிருந்து தப்புவதானால் இரண்டு வழிகள் உண்டு. ஒன்று அதை நிறுத்தும் வல்லமை இருக்க வேண்டும் அல்லது அதிலிருந்து தப்பியோட வேண்டும். இதை ஆங்கிலத்தில் fight or flight என்று சொல்வார்கள்.

எந்த வழியை மூளை தேர்ந்தெடுத்தாலும் அதை நடைமுறைப்படுத்துவது உடலிலுள்ள தசைகளும் எலும்புகளும்தான். ஆனால் வருகின்ற ஆபத்து பற்றி, மூளையைத் தவிர, உடலின் மற்றெந்த உறுப்புகளுக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. ஓடுவதற்கோ அல்லது நின்று சண்டைபிடிப்பதற்கோ தசைகளுக்கு அதிகரித்த பலம் வேண்டும். ஆனால் அவை ஏறத்தாழ ஓய்வு நிலையில் இருப்பவை. இவற்றை உசுப்பி அசுர பலத்தைக் கொடுக்கவேண்டும். அதுவும் சில விநாடிகளில் அது நடைபெற வேண்டும். இதற்கென உடல் ஒரு உத்தியை வைத்திருக்கிறது. அக்கணத்தில் மூளையின் ஏவலின்படி ஒரு ஹோர்மோன் சுரக்கப்படுகிறது. இதற்குப் பெயர் அட்றீனலீன் (adrenaline). அட்றீனல் சுரப்பி மற்றும் மத்திய நரம்புத் தொகுதியினால் சுரக்கப்படும் இந்த ஹோர்மோன் இரத்த ஓட்டத்தில் கலக்கப்படுகிறது. இவ்வேளையில் இருதயத் துடிப்பின் வேகம் அதிகரிக்க இரத்த ஓட்டம் வேகமாக்கப்படுகிறது. இது தசைகளுக்கு புதிய பலத்தைக் கொடுக்கிறது. அந்த ‘ஆபத்தை’ எதிர்கொள்ளும்போது உடலில் ஏற்படும் மாற்றத்தையே நாம் stress என அழைக்கிறோம்.

சரி அதற்கும் நீருக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்கள். மேலே சொன்ன உதாரணம் மன அழுத்தத்திற்கான ஒரு காரணம். வீட்டில் பெற்றோருடனோ அல்லது சகோதரர்களுடனோ அல்லது நண்பர்களுடனோ சண்டை சச்சரவுகள் ஏற்படும்போதும் நீங்கள் சிலவேளைகளில் மன அழுத்தத்திற்கு உள்ளாகலாம். கோபம் உச்சிக்கு ஏற கதவை அடித்து நொருக்கலாம் (fight). பாடசாலையில் இதர மாணவர்களால் அவமானப்படுத்தப்படும்போதோ அல்லது பரீட்சையில் சரியாக விடையெழுத முடியாதபோதோ இப்படியான மன அழுத்தங்கள் ஏற்படலாம். இப்படியான தருணங்களில் நிறைய நீர் அருந்தினால் மன அழுத்தம் குறையும் என ஆய்வுகள் கூறுகின்றன.

மன அழுத்தம் என்பது ஒரு வியாதி என்பதை விடவும் அது பலவித மோசமான வியாதிகளுக்கு மூலமாக இருக்கிறது என்பதே உண்மை. நீரிழிவு, உடற் பருமன் அதிகரிப்பு, இருதய வியாதி போன்றவற்றின் மூல காரணம் மன அழுத்தம் என்பது நீண்டகாலமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. அட்றீனலின் என்ற ஹோர்மோன் சுரப்பது என்பது நல்ல விடயம். ஆபத்துகளிலிருந்து காப்பாற்றுவதற்கு அவை எமக்கு அவசியம். ஆனால் அந்த ஆபத்தான தருணங்களைத் தாண்டியதும் அச்சுரப்பு நிறுத்தப்பட்டு இரத்தத்தில் இருக்கும் அட்றீனலீன் ஹோர்மோன் சிதைக்கப்பட்டுவிட வேண்டும். ஆனால் தொட்டதுக்கெல்லாம் எரிந்து விழும் ஒருவருக்கு அல்லது காரணமற்று மன அழுத்தத்திற்குள்ளாகும் ஒருவருக்கு (chronic stress) இந்த ஹோர்மோன் அடிக்கடி சுரக்கப்படுகிறது. இதுவே வேறுபல வியாதிகளுக்குக் காரணாமகிறது. இப்படியான வேளைகளில் சிறிது சிறிதாக நீரை அருந்தினால் மன அழுத்தம் குறையுமென ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

சின்சினாட்டி பல்கலைக்கழகத்தினால் ஆராய்ச்சி செயப்பட்டு நரம்பியல் சஞ்சிகையில் வெளியான கட்டுரையின்படி எவ்வளவுக்கெவ்வளவு நீரை அருந்துவதன் மூலம் நாவரட்சியைத் தீர்த்துக் கொள்கிறோமோ அந்தளவுக்கு மன அழுத்தம் குறைக்கப்படுகிறது எனவும் சக மனிதர்களுடன் மிகவும் சுமுகமான உறவுகளைப் பேணிக்கொள்ள முடியுமெனவும் தெரியவருகிறது. இதனால் மன அழுத்தம் மட்டுமல்லாது மனச் சோர்வு (depression), மனப்பதட்டம் (anxiety) ஆகியவற்றையும் குறைக்கிறது எனக் கண்டறிந்துள்ளார்கள்,

“மனிதரின் ஒவ்வொரு கலங்களும் சரியாகச் செயற்பட நீர் தேவை. மூளையின் 75-85% நீரினாலானது. இதில் 2% வரட்சி ஏற்பட்டாலும் களைப்பு, ஞாபக மறதியு, கவனக்குறைவு மற்றும் மனநிலை மாற்றம் ஆகியன ஏற்படலாம்” என அமெரிக்க மனாழுத்த நிலையத்தின் அதிகாரி சிந்தியா அக்கில் MD அவர்கள் கூறியிருக்கிறார்கள். உடலிலிருந்து 1/2 லீட்டர் நீர் வெளியேறினால் அது உடலின் கோர்ட்டிசோல் அளவு அதிகரிக்குமெனவும் அதே வேளை ட்றிப்ரோபான் என்ற பதார்த்தத்தை செறோட்டோனினாக (feel-good hormone) மாற்றுவதற்கு நீர் உதவி செய்கிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எனவே உடலும் மனமும் ஒழுங்காக இயங்க வேண்டுமா? தண்ணீரை ஒழுங்காகக் குடியுங்கள்! (Photo by Mae Mu on Unsplash)

Print Friendly, PDF & Email