நிலக்கடலை மகத்துவம்

சகல வியாதிகளுக்குமான அருமுணவு

அகத்தியன்

கச்சான், நிலக்கடலை, வேர்க்கடலை எனப் பல பெயர்களால் அழைக்கப்படும் இவ்வுணவு வகை பெருமளவில் ஓரங்கட்டப்பட்ட ஒரு உணவு வகையாகவே நமது சமூகத்தில் இருந்து வருகிறது. அதற்குக் காரணம் அது “ஏழைகளின் உணவாகப்” பார்க்கப்படுவதினால் என நினைக்கிறேன். நமது பழங்கஞ்சியைப் போல, எவ்வளவுதான் ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் அது பணக்காரர் வீட்டில் அருந்தப்படாதவரை அது ஒதுக்கப்பட்டது தான்.

இந்த நில்லகடலையின் மகத்துவம் பற்றி சமீபத்தில் நல்லதொரு கட்டுரை வெளியாகியிருந்தது. அதை வாசித்ததால் ஏற்பட்ட பிரமையுடன், கூடவே தகவல்களைச் சேர்த்து தரப்படுகிறது இக்கட்டுரை. பயனளிக்குமென நம்புகிறேன்.

நிலக்கடலையின் பூர்வீகம் தென்னமெரிக்கா என்கிறார்கள். சுமார் 3000 வருடத்துக்கு முன்னர் தென்னமெரிக்காவில் பாவித்ததாகக் கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டமொன்று நிலக்கடலைக் கோதின் வடிவில் செய்யப்பட்டு அதில் நிலக்கடலையின் வண்ணங்கள் பொறிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. பெரும்பாலான ஆதிகுடிகளின் உணவு வகைகள் காலத்தினால் பரீட்சிக்கப்பட்டவை. அறிவுடையோர் (knowledge keepers) எனப்படும் மூத்தோர்களால் பரம்பரை பரம்பரையாகப் பாதுகாக்கப்பட்ட கலாச்சாரத்தினால் காவப்பட்டு வருபவை. நவீன உலகில், பெரும் பணக்கார மருந்தக நிறுவனங்கள் தமது பிரதிநிதிகளை அனுப்பி உலகின் மூலை முடுக்குகளிலிருந்து திருடிய உணவு, மருந்து வகைகளின் செயற்கை இனங்களையே நமது மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இந் நிலையில் மீண்டும் இயற்கையின் மூலங்களைத் தேடி ஓடும் புது நாகரிகம் ஒன்று தற்போது புறப்பட்டிருக்கிறது. எனவே இப்படியான கட்டுரைகள் மேலும் வரலாம்.

நிலக்கடலையின் மகத்துவம் பற்றி பின்வரும் தகவல்கள் கிடைத்தன:

(1) இருதயத்துக்கு நல்லது

இருதய வியாதிகளைக் குறைப்பதில் நிலக்கடலை அற்புதங்களைப் புரிவதாகப் பல ஆய்வுகள் கூறுகின்றன. சமீபத்தில் ‘நியூ இங்க்லண்ட் ஜேர்ணல்’ என்ற சஞ்சிகையில் வெளிவந்த கட்டுரையின்படி நிலக்கடலையைத் தினமும் சாப்பிடுபவர்களுக்கு இருதய வியாதி வருவது 29% குறைக்கப்படுகிறது எனத் தெரியவருகிறது. இருதயத்தின் இயங்கு தசைகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு அதற்கு உயிர்வாயு, சக்தி, உணவு ஆகியவற்றை வழங்கும் இரத்தக் குழாய்கள் தங்குதடையின்றி ஆரோக்கியமாக இருக்கவேண்டும். இக்குழாய்களில் குருதி தடைப்பட்டால் இத்தசைகள் இறந்துபோய் இதயம் பலவீனப்பட்டுவிடுகிறது. இயங்க முயற்சித்து முடியாத பட்சத்தில் அது இயக்கத்தை நிறுத்தி விடுகிறது.

இருதயத்துக்கு இரத்தத்தை வழங்கும் குழாய்கள் பாதிக்கப்படுவதற்கு அழற்சி (inflammation), கொலெஸ்ரெறோல் (cholesterol), இரத்த சர்க்கரை (blood sugar), இரத்த அழுத்தம் (blood pressure) போன்ற பல காரணங்கள் உண்டு. இவற்றைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்குத் தேவையான பல பதார்த்தங்களை நிலக்கடலை கொண்டிருக்கிறது. குறிப்பாக மக்னீசியம் (magnesium), செம்பு (copper), நிரம்பலடையாத கொழுப்பு (unsaturated fats), றெஸ்வரற்றோல் (resvaratrol) போன்ற அன்ரிஒக்சிடென்ற்ஸ் (antioxidants), புரதம் (protein), நார்ச்சத்து (fibre), அமிணோ அமிலங்கள் (amino acids) போன்ற பதார்த்தங்களே அவை. இவ்விரத்தக் குழாய்களின் உட்சவ்வில் (inner lining) ஏற்படும் காயங்களே பின்னர் இருதய வியாதிகளாக மாறுகின்றன. மேற்கூரிய பதார்த்தங்கள் இரத்தக்குழாய்களைப் பாதுகாப்பதாக மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

(2) புரதம்

அமெரிக்க விவசாயத் திணைக்கள ஆய்வின்படி, 100 கிராம்கள் நிலக்கடலையில் 25,8 கிராம் புரதச் சத்து இருக்கிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதயத்தின் தசைகள் உட்பட, உடலின் அனைத்து தசைகளினதும் உருவாக்கத்திற்கும் பராமரிப்பிற்கும் புரதச் சத்தே பாவிக்கப்படுகின்றது. அது மட்டுமல்லாது தசைகள் வலுவாகப் பற்றியிருக்கக்கூடிய வகையில் எலும்புகளையும் வலுவாக வைத்திருக்க உதவுகிறது இந்த புரதச் சத்து. உடலில் ஏற்படும் காயங்கள் விரைவாக ஆறுவதற்கு புரதச் சத்து அவசியம். வளரும் குழந்தைகள் ஆரோக்கியமான உடலமைப்பைப் பெற புரதம் அவசியம்.

(3) உடல் எடையைக் குறைக்கிறது

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் கட்டுப்பாடான அளவில் நிலக்கடலையை உண்பது நல்லது. உடல் எடைக்குக் காரணம் கொழுப்பு. கொழுப்பில் இரண்டு வகையுண்டு. ஒன்று பொதுவாக விலங்குகளிலிருந்து வெண்ணெய், தயிர், இறைச்சி, கொழுப்பு போன்ற வடிவங்களில் பெறப்படுவது. இதை நிரம்பலடைந்த கொழுப்பு (saturated fats) என்பர். சாதாரண அறை வெப்பநிலையில் இது கட்டியாகவே இருக்கும். மற்றது பொதுவாக தாவர உணவுகளிலுருந்து பெறப்படுவது. இது அறை வெப்பநிலையில் திரவமாக இருக்கும். பெரும்பாலான மரக்கறி எண்ணைகள் இவ்வகையானவை. இவை நிரம்பலடையாத கொழுப்பு (unsaturated fats) என அழைக்கப்படும். கொழுப்பு உடலுக்குத் தேவையான சக்தியையும், குளிரிலிருந்து பாதுகாப்பதற்கான தோலுக்குக் கீழான படலத்தையும் கொடுக்கிறது. உடலின் மேலதிகமான சர்க்கரையும் கொழுப்பாக மாற்றப்பட்டு ஈரல், வண்டி ஆகிய இடங்களில் சேமிக்கப்படுவதால் உடற் பருமன் அதிகரிக்கக் காரணமாகிறது.

இதே வேளை ந்மது மருத்துவர்கள் கூறும் ‘நல்ல கொலெஸ்றெறோல்’ (HDL) மற்றும் ‘கெட்ட கொலெஸ்றெறோல்’ (LDL) ஆகியவைக்கும் கொழுப்புக்கும் சம்பந்தமுண்டு. நிரம்பலடைந்த கொழுப்பு இரத்தத்தில் ‘கெட்ட கொலெஸ்றெறோலை’ அதிகரிக்கச் செய்கிறது. இதனால் இருதய வியாதிகள், இரத்தக்குழாய் அடைப்புகள் ஏற்படுகின்றன. மாறாக நிரம்பலடையாத கொழுப்பு இரத்தத்தில் ‘நல்ல கொலெஸ்றெறோலை’ அதிகரிக்கச் செய்கிறது. இது இருதய வியாதிகளையும், இரத்த அடைப்புக்களையும் வெகுவாகக் குறைக்கின்றது. அமெரிக்க விவசாயத் திணைக்கள ஆய்வின்படி 100 கிராம் நிலக்கடலையில் சுமார் 40 கிராம் நிரம்பலடையாத கொழுப்பும் சுமார் 6 கிராம் நிரம்பலடைந்த கொழுப்பும் இருக்கிறது என அறியப்படுகிறது.

(4) மூளையைப் பலப்படுத்துகிறது

அட இதை முன்னமே கூறியிருக்கலாமே என எண்ணம் உங்களுக்குத் தோன்றலாம். கூர்மையான மூளையை விருத்தி செய்ய வைட்டமின் B1, நியாசின் (niacin), ஃபோலேட் (folate) போன்ற பதார்த்தங்கள் தேவை. இவை அனைத்தும் நிலக்கடலையில் இருக்கிறது. வயது முதிரும்போது சிலருக்கு ஏற்படும் மறதி நோய்களைக் குறைக்கவும் இப் பதார்த்தங்கள் அவசியம். ஏற்கெனவே குறிப்பிட்டபடி நிலக்கடலையில் காணப்படும் றெஸ்வரற்றோல் எனப்படும் அன்ரிஒக்சிடண்ட் புலன்களின் கூர்மையையையும் (cognitive ability) சொல்வளத்தையும் (verbal fluency) அதிகரிக்கிறது. அத்தோடு நிலக்கடலையில் காணப்படும் பொலிஃபீனோல்கள் (polyphenols) மன உளைச்சல், சோர்வு ஆகியவற்றைக் குறைக்கிறது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

(5) எலும்புகளை வலுவாக்கிறது

வயது முதிரும்போது எமது சில எலும்புகள் பலம் குன்றுகின்றன. ஆரோக்கியமான எலும்புகளைப் பேணப் போதுமான கல்சியம், மங்கனீஸ், பொஸ்பரஸ் போன்ற வேதிப்பொருட்கள் அவசியம். நிலக்கடலையில் அதிகளவு மங்கனீஸ், பொஸ்பரஸ் மற்றும் வைட்டமின்களும் இருக்கின்றன.

(6) ஆரோக்கியமான தோல் (சருமம்)

நிலக்கடலையில் இருக்கும் றெஸ்வரற்றோல் மற்றும் நிரம்பலற்ற கொழுப்புக்கள் தோலினால் சுரக்கப்படும் நச்சுக் கழிவுகளை இலகுவாகக் கழற்றிவிட உதவுகின்றன. இதனால் தோல் எண்ணைத்தனமையற்று பள பளப்பாக இருக்கும். அதுமட்டுமல்லாது தோலில் சுருக்கள், புள்ளிகள், கோடுகள் விழுவதை றெஸ்வெறற்றெறோல் குறைக்கிறது. சொறியாஸிஸ் (Psoriasis), எக்சிமா (Eczema) போன்ற தோல் வியாதிகளைப் போக்க நிலக்கடலை உதவுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. நிலக்கடலையில் காணப்படும் வைட்டமின்களான C மற்றும் E ஆதியன சூரியனிலிருந்து வரும் புற ஊதாக்கற்றைகளின் தாக்கத்திலுருந்து தோலைப் பாதுகாக்கின்றன. அவைட்டமின் C தோலின் ‘ரப்பர் தன்மையை’ (elasticity) அதிகரிக்கச் செய்வதால் தோல் இளமையாகவும் பளபளப்பாகவும் இருக்க முடிகிறது.

(7) பார்வையில் தெளிவு

கட்புலன் சிறப்பாகத் தொழிற்படுவதற்கு பச்சை இலை மரக்கறி வகைகளும் நிலக்கடலையுமே மிகச்சிறந்த உணவுகள் எனக் கூறப்படுகிறது. மனித உடலிலுள்ள கலங்கள் அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைச் செய்வதற்கு பலவகையான தாதுப்பொருட்களைப் பாவிக்கின்றன. உதாரணத்திற்கு எலும்பு வளர்ச்சிக்கு கல்சியம் தேவை. அதே போல் தெளிவான பார்வைக்கு வைட்டமின் A அவசியம். ஆனால் இவை பற்றாக்குறையாக இருக்கின்றனவே என்பதற்காக குளிசைகளை நாம் அள்ளி விழுங்குவதால் சரிபடுத்திவிட முடியாது. கலங்கள் இவற்றை உள்ளெடுப்பதற்கு சில வாசல்கள் திறக்கப்படவேண்டும். நிலக்கடலையில் இருக்கும் துத்தநாகம் (Zinc) வைட்டமின் Aஉள்ளெடுப்பதற்கு அவசியம். அதே போல கலங்கள் இரும்புச்சத்தை உள்ளெடுப்பதற்கு வைட்டமின் C அவசியம். நிலக்கடலையில் இருக்கும் வைட்டமின் E தசையிழப்பு, கட்படலம் (cataract) உருவாகுவதையும் தடுக்கிறது.

(8) புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கிறது

நிலக்கடலை சாப்பிடுவதன்மூலம் புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கமுடியுமென ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. நிலக்கடலையில் காணப்படும் புரதங்கள், வைட்டமின் E, றெஸ்வெறற்றோல் போன்றவை புறுநோய்க் கலங்களுக்கு இரத்த ஓட்டம் செல்லாமல் த்டுப்பதன்மூலம் அவற்றின் வளர்ச்சியைத் தடுக்கின்றன எனக் கண்டறியப்பட்டுள்ளது.

(9) நீரிழிவுக்கு நல்லது

நிலக்கடலையில் சர்க்கரை (sugar) இல்லை. அதனால் நீரிழிவு வியாதி உள்ளவர்கள் பயப்படாமல் அதைச் சாப்பிடலாம். காலையில் நிலக்கடலையைச் சாப்பிடுவதன் மூலம் அந்த நாள் முழுவதுக்குமான சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியுமென ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதே வேளை நீரிழிவு வியாதிக்காரர் ஒருவர் இனிப்பான பண்டத்தைச் சாப்பிட்டதனால் இரத்தச் சர்க்கரை அளவு திடீரென உயர்ந்துவிடுவடும் தருணங்களில் நிலக்கடலையைச் சாப்பிட்டால் அது இந்த உயர்ச்சியைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிடுகிறது என அமெரிக்க மருத்துவர் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு கூறுகிறது.

(10) பித்தக் கற்கள் உருவாகுவதைத் தடுக்கிறது

25% வீதமானவர்கள் வருடத்தில் ஒருநாளாவது பித்தக்கற்கள் உருவாகுவதனால் அவதிப்படுகிறார்கள். கட்டுப்பாடற்ற கொலெஸ்றெறோல் அளவினால் இக்கற்கள் தோன்றுவதாகக் கூறப்படுகிறது. கொலெஸ்றெறோலைக் கட்டுப்படுத்தும் தன்மையைக் கொண்டது ஆதலால் தினமும் நிலக்கடலையைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு பித்தக் கற்கள் உருவாகுவது குறைவு எனக் கண்டறியப்பட்டுள்ளது. (Photo by Tom Hermans on Unsplash)

Print Friendly, PDF & Email