நாகதாளிப் பழத்திலிருந்து இரத்த சோகைக்கு மருந்து | குஜராத்தில் கண்டுபிடிப்பு

வரண்ட நிலத் தாவரமான நாகதாளியின் பழத்திலிருந்து இரத்த சோகைக்கான மருந்தொன்றை குஜராத்தைச் சேர்ந்த மருந்தாளர் (pharmacist) ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

குச் பிரதேசத்தைச் சேர்ந்த செளராஷ்ட்ர நாட்டு வைத்திய பாரம்பரிய நடைமுறைகளைப் பின்பற்றி குஜராத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் சோஹன், அவரது துணைவியார் ஹீட்டால் சோஹன் ஆகியோர் இம் மருந்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒப்புன்ஷியா வல்காரிஸ் (Opuntia Vulgaris) எனப்படும் நாகதாளியின் பழத்திலிருந்து பெறப்படும் சாற்றிலிருந்து செய்யப்படும் இம் மருந்துக்கான தயாரிப்பு உரிமத்தை இவர்களின் நிறுவனமான SHPERO Health LLP பெற்றிருக்கிறது. 12 வருட ஆராய்ச்சியின் பின்னர் டாக்டர் சோஹன் இம் மருந்தைக் கண்டுபிடித்திருக்கிறார்.

தற்போது இம் மருந்து மனிதர்கள் மீதான பரிசோதனைக்காக (clinical trials) அனுமதிக்கப்பட்டிருக்கிறது. மனிதரில் இம் மருந்து ஆபத்து எதுவும் விளைவிக்காது அதே வேளை இரத்தசோகை நோயைத் தீர்க்குமென நிரூபிக்கப்பட்டால் அரசு இதன் பொதுப்பாவனையை அங்கீகரிக்கும். அது நிறைவேறும் பட்சத்தில் தற்போது பாவனையிலிருக்கும் மருந்தின் விலையைவிட நான்கிலொரு மடங்கில் இது விற்பனையாகுமெனக் கூறப்படுகிறது.

 

டாக்டர் சோஹன்

தற்போது பாவனையிலிருக்கும் மருந்து இரத்தத்தினூடு செலுத்தவேண்டியுள்ளதென்றும் இம் மருந்து வாயினாலே உட்கொள்ளமுடியுமென்றும் தயாரிப்பாளர் தெரிவிக்கிறார்கள். குஜராத்தில் 63 வீதமான குழந்தைகள் (55% பெண்களும், 22% ஆண்களும்) இரத்தசோகை நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

இலங்கையிலும், இந்தியாவிலும் வரண்ட நிலங்களில் காணப்படும் நாகதாளி சப்பாத்திக் கள்ளி குடும்பத்தைச் சேர்ந்த தாவர வகையாகும். தென்னிந்தியாவில் சித்த, ஆயுர்வேத வைத்திய முறைகளில் குடல் வியாதிகளைக் குணப்படுத்தப் பரவலாகப் பாவிக்கப்பட்டுவரும் சிறந்ததொரு மூலிகையாகும்.

 

ஹீட்டால் சோஹன்

2018 முதல் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுவரும் இம் மருந்து, குளிசை வடிவத்தில், ஹெம்போயின் (Hempoin) என்ற பெயரில் சந்தைப்படுத்தடுமெனக் கூறப்பட்டுள்ளது.

இரத்தத்தில் செங்குருதித் துணிக்கைகள் குறைவாக இருப்பதை இரத்த சோகை என்பார்கள். சாதாரண இரத்தப் பரிசோதனையின்போது ஒருவருக்குக் ‘ஹீமோகுளோபின்’ குறைவாக இருக்கிறது எனக் கண்டால் அதை இரத்தசோகை (anemia) எனக் கூறுவார்கள். உடல் முழுவதற்கும் உயிர்வாயுவைக் கொண்டுசெல்வது இந்த ஹீமோகுளோபின் தான். எனவே இரத்தசோகை உள்ளவர்கள் களைப்பு, வலி போன்ற அறிகுறிகளைக் கொண்டிருப்பார்கள்.

இரத்தசோகை உள்ளவர்களுக்கு அதற்கான உடனடி சிகிச்சைகளாக இரத்தத்தின் மூலம் இரும்புச் சத்தை ஏற்றியோ (குளிசைகளுமுண்டு) அல்லது மிக மோசமான நிலையில் இரத்ததை ஏற்றியோ தற்காலிக சிகிச்சைகளைச் செய்தாலும் நீண்டகாலச் சிகிச்சையாக செங்குருதித் துணிக்கைகளை அதிகரிக்கச் செய்வதே வழியாகும்.

இச் சிகிச்சை வெற்றி பெறுமாயின், இந்தியாவின் (இலங்கையிலும்) ராஜஸ்தான், ராஜ்கட் போன்ற வரண்ட பிரதேச விவசாயிகளுக்கு வருமானம் தேடித்தரும் ஒரு பணப்பயிராக நாகதாளி மாறலாம்.

Print Friendly, PDF & Email