டெல்ற்றா பிளஸ் திரிபு ஆபத்தானது – எச்சரிக்கிறது இந்தியா

டெல்ற்றா எனப் பெயரிடப்பட்ட ‘இந்திய’ திரிபான கொறோணாவைரஸ் மீண்டும் ஒரு தடவை திரிபடைந்திருக்கிறது. டெல்ற்றா பிளஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இத் திரிபு ப்ல வழிகளிலும் முந்தைய திரிபுகளைவிட மிகவும் ஆபத்தானது என இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

மஹாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் சுமார் 40 தொற்றாளர்களில் இந் நோய் காணப்பட்டுள்ளதாக அது அறிவித்திருக்கிறது. செவ்வாயன்று இத் தொற்றின் எண்ணிக்கை 22 ஆக இருந்தது எனப்படுகிறது.

செவ்வாயன்று (22), மத்திய அரசின் சுகாதார குடும்ப நல அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம், இத் திரிபு ஒரு ‘அக்கறை காட்ட வேண்டிய திரிபு (variant of interest” (VoI)) எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ்களின் மரபணு வரிசைகளை ஆராயும் ஆய்வுகூடங்களின் சங்கம், இத் திரிபின் மரபணு வரிசையை ஆராய்ந்து முந்தைய திரிபுகளுடன் ஒப்பிட்டு, இத் திரிபின் பரவும் வேகம், தீவிரம், உறுப்புகளைப் பற்றிகொள்ளும் தன்மை ஆகியவற்றில் மிகவும் ஆபத்தான ஒன்றென அவதானித்துள்ளது. இதனடிப்படையில், மத்திய அரசின் சுகாதார செயலாளர், இத் திரிபை ஒரு ‘அக்கறை காட்ட வேண்டிய திரிபு’ (variant of interest” (VoI)) எநப் பிகடனப்படுத்தியுள்ளார். இதன் அர்த்தம் இத் திரிபு பற்றி மேலும் ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டும் என்பதே.

‘இந்திய வைரஸ்’ என முன்னர் அறியப்பட்டிருந்த டெல்ற்றா (B1.617) திரிபு மேலும் திரிபடைந்த போது அது கப்பா (B1.617.1) எனப் பெயரிடப்பட்டிருந்தது. இது மேலும் திரிபடைந்து (B1.617.2) இப்போது டெல்ற்றா பிளஸ் என்ற பெயரில் அழைக்கப்படுகிரது. இந்தியாவில் ஏப்ரல்-மே மாதங்களில் வேகமாகப் பரவிய இரண்டாவது அலையென வர்ணிக்கப்பட்ட தொற்றுக்கு டெல்ற்றா திரிபே காரணமாகும்.

இதன் தாக்கங்களில் முக்கியமானதாக இதுவரை அறியப்பட்ட விடயங்கள்: (1) கூடுதலாக சுவாசப்பைகளைத் தாக்குகிறது (2) உடல் உருவாக்கும் பிறபொருளெதிரிகளின் (antibodies) வீரியத்தைக் குறைக்கிறது (3) மிக வேகமாகப் பரவுகிறது.

டெல்ற்றா திரிபு சீனா, யப்பான், பிரித்தானியா, அமெரிக்கா, இலங்கை உட்பட 9 நாடுகளில் பரவியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முழுமையான தடுப்பூசிகள் எடுத்துக்கொண்டவர்களில் எவரும் வைரஸ் திரிபுகளால் பாதிக்கப்பட்டதாக நம்பத்தகுந்த செய்திகள் எதுவும் இதுவரை அறியப்படவில்லை.

Print Friendly, PDF & Email