‘சுவீட்னெர்’ (aspartame) புற்றுநோய்க்குக் காரணமாகலாம் – உலக சுகாதார அமைப்பு
சீனிக்கு (சர்க்கரை) பதிலாக செயற்கை சர்க்கரை (aspartame) பாவிப்பவர்களுக்கு எச்சரிக்கை. அது புற்றுநோய்க்குக் காரணமாக அமையக்கூடும் என உலக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. இரசாயன முறையில் தயாரிக்கப்படும் அஸ்பார்ட்டேம் ‘சுவீட்னர்’ என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. உடற் பருமனைக் குறைக்க விரும்புபவர்களால் அதிகம் விரும்பிப் பாவிக்கப்படும் இப்பதார்த்தத்தை காப்பி, தேநீர் போன்ற பானங்களுக்கு சீனிக்குப் பதிலாக பலர் பாவிக்கின்றனர். அதே வேளை கொக்கா கோலா, பெப்சி போன்ற நிறுவனங்கள் தயாரித்து ‘டயெட் கோக்’, ‘டயெட் பெப்சி’ என்ற பெயரில் விற்பனை செய்யும் பானங்களிலும் சீனிக்குப் பதிலாக இப்பதார்த்தமே பாவிக்கப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பின் கீழ் இயங்கும் புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச ஆணையம் (International Agency for Research on Cancer (IARC)) கடந்த வெள்ளியன்று வெளியிட்ட அறிக்கையில் அதிக அளவில் உட்கொண்டால் அஸ்பார்ட்டேம் ஈரல் புற்றுநோய் உண்டாவதற்குக் காரணமாக அமையலாம் எனத் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மேற்கொண்ட மூன்று பாரிய ஆய்வுகளின் பின்னர் இவ்வாணையம் மேற்கண்ட முடிவுக்கு வந்திருக்கிறது.
இருப்பினும் அஸ்பார்ட்டேம் மீதான முற்றான தடையை இவ்வாணையம் பரிந்துரைக்கவில்லை. ஒரு கிலோ கிராம் உடை எடையுள்ளவர்கள் ஒரு நளைக்கு 40 மி.கி. அஸ்பார்ட்டேம் வரை அருந்தலாம் என ஒரு தற்காலிக அளவை அது பரிந்துரைத்துள்ளது. உதாரணத்துக்கு 70 கிலோ எடையுள்ள ஒருவர் 2800 மி.கி. (2.8 கிராம்) அஸ்பார்ட்டேமை நாளொன்றுக்கு அருந்தலாம். இது 9 முதல் 14 டயெட் சோடாக்களை அருந்துவதற்குச் சமன்.
டயெட் சோடா, ‘சுயிங்கம்’ , இனிப்பு பண்டங்கள், குறைந்த கலரியுள்ள தயிர் (yogurt), சீரியல் போன்ற உணவுகளில் பொதுவாக அஸ்பார்ட்டேம் கலக்கப்படுகிறது. அதே வேளை கோப்பி, தேநீர் போன்ற பானங்களில் கலப்பதற்காக ‘நியூட்றாசுவீட்’, ‘கன்டாரெல்’, ‘ஈக்குவல்’ என்ற பெயர்களில் கோப்பி, தேநீர்க் கடைகளில் வழங்கப்படுகின்றன.
1974 இல் அஸ்பார்ட்டேமின் பாவனையை அமெரிக்கா முதந் முதலில் அங்கீகரித்திருந்தது. பிந்நர் 1980 இல் கொகா-கோலா தனது பானத்தில் கலந்து ‘டயெட் கோக்’ என்ற பெயரில் விற்பநை செய்தது. ஐரோப்பாவில் இது 1994 இல் தான் அங்கீகாரம் பெற்றது. இதனைத் தொடர்ந்து பல நோய்களுக்கும் இது காரணாக இருப்பதாகச் சந்தேகங்கள் எழுந்தன. ஈரல் மற்றும் நுரையீரல் புற்றுநோய், மூளை பாதிப்பு, முதுமை மறதி, வலிப்பு போன்றவை அவற்றில் சில. இருப்பினும் இவற்றுக்கான போதுமான ஆதாரங்கள் இல்லையெனக் கூறி மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்புகள் அஸ்பார்ட்டேமைக் கட்டுப்படுத்த மறுத்து வந்தன.
அஸ்பார்ட்டேமின் பாவனை மக்களில் ஏற்படுத்தும் விளைவுகளைத் தாம் தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக உலக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. (Photo by Towfiqu barbhuiya on Unsplash)