சீனாவில் வேகமாகப் பரவும் வைரஸ் |’சார்ஸ்’ எனச் சந்தேகம்!

இதுவரை 44 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

சீனாவின் வூஹான் நகரில் வேகமாகப் பரவி வரும் சளி சுரம் (pneumonia) பலரைப் பாதித்து வருகிறது. மனிதரின் நுரையீரலைத் தாக்குவதன் மூலம் சுவாசத் திணறலுக்கு உட்படுத்தும் இந்த மர்மமான வைரஸ், 2002-2003 ம் ஆண்டுகளில் உலகத்தை அச்சுறுத்திய ‘சார்ஸ்’ (Severe Acute Respiratory Syndrome (SARS)) ஆக இருக்கலாமோ என்ற சந்தேகத்தையும் தோற்றியுள்ளது.

2002, 2003 ம் ஆண்டுகளில் சார்ஸ், 26 நாடுகளில் காய்ச்சல் (சுரம்) போன்ற அறிகுறிகளைக் கொண்ட நோய், 8000 த்துக்கும் அதிகமானோரைத் தாக்கியும், 750 பேரின் மரணத்துக்கும் காரணமாகவும் இருந்ததாக அமெரிக்காவிலுள்ள நோய்த் தடுப்புக்கான மையம் (Centres for Disease Control and Prevention (CDC)) தெரிவிக்கிறது. அக்காலகட்டத்தில், சீனாவில் தொடங்கிய இக் கொள்ளை நோய் அங்கு 349 பேரினதும், ஹொங் கொங்கில் 299 பேரினதும் மரணங்களுக்குக் காரணமாகவிருந்தது.

சார்ஸ் வைரஸ் மனிதரிலிருந்து மனிதருக்குத் தொற்றும் ஒரு நோய். நோயாளி இருமும்போதோ அல்ல்து தும்மும்போதோ இவ் வைரஸ் அயலிலுள்ளவர்கள் மீதோ அல்லது பொருட்கள் மீதோ ஒட்டிக்கொள்கின்றன. 2004 இலிருந்து சீனாவில் சார்ஸ் ஒழிக்கப்பட்டுவிட்டது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்தத் தடவை சீனாவில், 44 பேர் பாதிக்கப்பட்டும், அவர்களில் 11 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரியவருகிறது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வூகான் நகரிலுள்ள ஹுஆனான் கடலுணவுச் சந்தை என்ற வியாபார நிலையத்தில் பணிபுரிபவர்களாவர். தற்போது இவ்வியாபார நிலையத்தை அரச அதிகாரிகள் கால வரையின்றி மூடியுள்ளது.

நோய்த்தடுப்பை முன்னிட்டு ஹொங் கொங், சிங்கப்பூர், தாய்வான் நாடுகளிலுள்ள விமான நிலையங்களில், சார்ஸ் காலங்களில் போல, சுரத்துடன் வரும் நோயாளிகளை அடையாளம் காணும் வெப்பமானிகளைப் பாவனைக்கு வைத்துள்ளார்கள்.

இந்தத் தடவை நோய்க்கான காரணம் என்னவென்று அதிகாரிகள் அறிவிக்காவிடினும், அது இன்ஃபுளுவென்சா, ஏவியன் இன்ஃபுளுவென்சா, அடீனா வைரஸ் மற்றும் பொதுவான சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் அல்லவெனவும் சார்ஸ் வைரசாக இருக்கலாமா என்பதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை என, உலக சுகாதார நிறுவனத்துக்கான சீனாவின் பிரதிநிதி கோடன் கலியா தெரிவித்தார்.

2002 இல் போல் அல்லாது, இந்தத் தடவை நோய் மனிதரிலிருந்து மனிதருக்குத் தொற்றுவதாக இன்னும் அறியப்படவில்லை.

Print Friendly, PDF & Email