சமிபாட்டுக் கோளாறுகளுக்கான மருந்து கோவிட்-19 நோயைக் குணப்படுத்துகிறதா?

இரைப்பைக் கோளாறுகளுக்கு நிவாரணமாகப் பாவிக்கும் ஃபமோரீடீன் (famotidine) என்னும் மருந்தை கோவிட்-19 நோயாளிகளில் வெற்றிகரமாகப் பரிசோதித்த ஆய்வு ஒன்று அமெரிக்காவில் இடம்பெற்றிருக்கிறது.

கோவிட்-19 நோயின் அறிகுறிகளான இருமல், மூச்சிரைப்பு ஆகியவற்றுடன் வந்த நோயாளிகளுக்கு ஃபமோரீடீன் மருந்தைக் கொடுத்தபோது அவர்களுக்கு அந்த உபாதைகளிலிருந்து நிவாரணம் கிடைத்ததாக கோல்ட் ஸிபிறிங் ஹார்பர் புற்றுநோய் ஆய்வு மையம் (Cold Spring Harbour Laboratory Cancer Centre)  தெரிவிக்கிறது.

சமிபாட்டுக் கோளாறுகள் உள்ளவர்கள் பொதுவாகப் பாவிக்கப்படும் இம் மருந்துக்கு பாரதூரமான பக்க விளைவுகள் எதுவுமில்லை. அதனால் இம் மருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட 10 கோவிட்-19 நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டது. இம் மருந்தை உட்கொண்டதும், அந்நோயாளிகள் அனைவரும் இருமல், மூச்சிரைப்பு போன்ற அறிகுறிகளிலிருந்து நிவாரணம் பெற்றிருந்தனர் என இந்த ஆய்வினைச் செய்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாய்வு, மருத்துவ சஞ்சிகையான ‘குடல்’ (Gut) இல் பிரசுரமாகியுள்ளது. சுய தனிமைப்படுத்தலிலுள்ளோருக்கு இம் மருந்து உபயோகமாகவிருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.  

அமில ஏவறை (acid reflux) மற்றும் நெஞ்செரிவு (heartburn) போன்ற சமிபாட்டுக் கோளாறுகள் இருப்பவர்களுக்கு ஃபமொரீடீன் பொதுவாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.


பரிசோதனை

இவ்வாய்வுக்காக, கோல்ட் ஸ்பிறிங் ஹார்பர் புற்றுநோய் ஆய்வு மையத்தின் விஞ்ஞானிகள் 6 ஆண்கள், 4 பெண்கள் கொண்ட 10 கோவிட்-19 நோயாளிகளைத் தேர்ந்தெடுத்தார்கள். 

புற்றுநோயாளிகளின் அறிகுறிகளின் தீவிரத்தை வழக்கமாக அளவிடும் ECOG PS எனப்படும் 4 அம்ச நெறிமுறைகளைக் கடைப்பிடித்து இந் நோயாளிகளின் – இருமல், மூச்சிரைப்பு, களைப்பு, தலைவலி, சுவை / மணமிழப்பு ஆகிய கோவிட்-19 நோயறிகுறிகளை அளவிட்டார்கள். 

கோவிட்-19 நோயின் தாக்கம் அதிகமாகவிருந்த நிலையில் அவர்களுக்கு 80 மி.கி. ஃபமோரீடீன், நாளுக்கு மூன்று தடவைகள் கொடுக்கப்பட்டது. சராசரியாக ஒவ்வொருவரும் 11 நாட்களுக்கு இம் மருந்தை எடுத்தனர்.

முடிவுகள்

நோயாளிகள் அனைவருமே, இம் மருந்தை எடுக்க ஆரம்பித்து 24 முதல் 48 மணித்தியாலங்களில் தமது கோவிட் -19 அறிகுறிகளிலிருந்து நிவாரணம் தெரியவாரம்பித்ததாகத் தெரிவித்தனர். 14 நாட்களில் அவர்களது அறிகுறிகள் முற்றாக நீங்கிவிட்டிருந்தன. இந்த மருந்து செய்த வேலை வயிற்றிலிருந்த அமிலத்தைக் குறைத்தது தான் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இருப்பினும், இது ஒரு ஆரம்ப ஆய்வே எனவும், கோவிட்-19 நோயாளிகளில் ஃபமொரீடீனின் விளைவை மேலும் நுணுக்கமாக ஆராயவேண்டுமெனவும் அவ் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 

எச்சரிக்கை: இக்கட்டுரை தகவலுக்காக மட்டுமே தரப்படுகிறது. வாசகர்கள் தமது சொந்த மருத்துவர்களின் ஆலோசனைகளின்படி மருந்துகளை உட்கொள்ள வேண்டும் என்பதை தமிழ்நலம் ஆணித்தரமாக வலியுறுத்துகிறது

Print Friendly, PDF & Email