கோவிட்: BA.2.75.2 ஓமிக்குறோன் திரிபு உடலின் அனைத்து எதிர்ப்பாற்றலையும் தவிர்க்கிறது – ஆய்வு
அகத்தியன்
தடுப்பு மருந்துகளினாலோ அல்லது கோவிட் தொற்றுக்களினாலோ இதுவரை எமது உடல்கள் பெற்றிருக்கும் எதிர்ப்பாற்றலை உதாசீனம் செய்துவிட்டுப் புதிய தொற்றுக்களை ஏற்படுத்தும் வைரஸ் திரிபுகளை (variants) எதிர்வரும் குளிர்காலத்தில் உலகம் எதிர்கொள்ள நேரிடும் என சுவீடனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளார்கள்.
இதுவரை நாம் எடுத்துவந்த தடுப்பு மருந்துகள் மூலமும் எம்மில் சிலர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியமை மூலமும் எமது உடல்கள் தயாரித்துவைத்திருந்த எதிர்ப்பு சக்திக்குக் காரணமான பிறபொருள் எதிரிகள் (antibodies) புதிதாக வரும் சார்ஸ் கொவ்-2 வைரஸ்கள் மற்றும் அவற்றின் திரிபுகளையும் கண்டு, தேடி அழிக்குமெனவே இதுவரை கூறப்பட்டு வருகிறது. அது உண்மையாயினும் தற்போது பரவி வரும் BA.2.75.2. என்ற வைரஸ் திரிபு ஏற்கெனவே உடலில் தயாராக இருக்கும் ‘பாதுகாப்பு படைகளை’ ஏமாற்றிவிடும் தன்மையைக் கொண்டவை என இந்த விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
ஏற்கெனவே ‘தமிழ் நலத்தில்’ வெளிவந்த கட்டுரைகளை வாசித்தவர்கள் வைரஸ்களும் உடலின் நோயெதிர்ப்பாற்றலும் எப்படித் தொழிற்படுகின்றன என அறிந்திருப்பீர்கள். இருப்பினும் சுருக்கமாக இன்னுமொருதடவை இங்கே கூறுகிறேன். உடலினுள் புகும் வைரஸ்களை அவற்றின் உடலமைப்புகளை ஞாபகத்தில் வைத்திருப்பதன் மூலம் பிறபொருளெதிரிகள் மற்றும் நோயெதிர்ப்புக் கலங்கள் இனம் கண்டு அழித்துவிடுகின்றன. குறிப்பாக சார்ச்-கொவ்-2 எனப்படும் கோவிட் நோய்க்குக் காரணமான வைரஸின் உடலிலுள்ள ஈட்டிப் புரதத்தையே (spike protein) உடலின் எதிர்ப்புப் ‘படையணி’ ஞாபகத்தில் வைத்திருக்கிறது. அதனால் இவ் வைரஸ் ஒவ்வொரு முறையும் தனது ஈட்டிப் புரதத்தில் சிறு மாற்றங்களைச் செய்துகொண்டு வர்ம்போது அதை நாம் ஒரு ‘திரிபு’ என அழைக்கிறோம். விஞ்ஞானிகளும் ஒவ்வொரு புதிய திரிபையும் ஆராய்ந்து அதற்கேற்ற தடுப்பு மருந்துகளைத் தயாரிக்கிறார்கள். இப் புதிய திரிபுகளுக்கேற்ப உடலும் தன் பங்குக்குப் புதிய பாதுகாப்புப் படையணிகளை உருவாக்குகிறது.
தற்போது புதிதாக வந்திருக்கும் ஓமிக்குரோன் குடும்பத்தைச் சேர்ந்த திரிபு உடலில் ஏற்கெனவே இருக்கின்ற பாதுகாப்பு படையணிகளால் இனம்கண்டுகொள்ளாத வகையில் தம்மை வடிவமைப்புச் செய்துள்ளமையால் அவை எவ்வித எதிர்ப்புமின்றி மனிதக் கலங்களுள் ஊடுருவித் தம்மை இனப்பெருக்கம் செய்துகொள்கின்றன.
கனடாவில் தற்போது ஐந்தாவது கட்டமாக (dose) ‘பைவேலன்ற்’ (bivalent vaccine) தடுப்பு மருந்தை எடுக்கச் சொல்கிறார்கள். இம் மருந்து ஆரம்பத்தில் வந்த வைரஸ்ஸையும் அதற்குப் பின் வந்த ஓமிக்குரோன் திரிபையும் கட்டுப்படுத்த வல்லது எனக் கூறப்படுகிரது. mRNA தொழில்நுட்பத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இம்மருந்து Moderna Spikevax Bivalent COVID-19 vaccine என்ற பெயரில் மொடேர்னா நிறுவனத்தாலும் Pfizer Comirnaty Bivalent COVID-19 vaccine என்ற பெயரில் ஃபைசர் நிறுவனத்தாலும் விற்பனை செய்யப்படுகின்றது. இருப்பினும் பல திரிபுகளை இம்மருந்துகள் கட்டுப்படுத்துமெனினும் வேறு பல புதிய ஓமிக்குரோன் திரிபுகள் ச்கல தடுப்புகளையும் மீறித் தொற்றிப் பரவுகின்றன என சென்றவாரம் வெளியான லான்செட் சஞ்சிகையில் வெளிவந்த கட்டுரையொன்று குறிப்பிடுகிறது.
தற்போது BA.5 என்னும் திரிபு பெரும்பாலும் ஆபிரிக்கா கண்டத்திலும் BA.5 மற்றும் BA.4 திரிபுகள் கனடாவிலும் தீவிரமாகப் பரவிவருவதாக கனடிய பொதுச்சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இவற்றைவிட BA.2.75 வின் திரிபான BA.2.75.2 பரவி வருவதாகவும் ஆனால் அது BA.5 அளவுக்கு பாதிப்பைத் தருவதில்லை எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனாலும் இத்துடன் வைரஸின் திரிபுகள் நின்றுவிடப்போவதில்லை என்பதையும் நாம் எதிர்பார்த்திருக்க வேண்டுமென அது எச்சரித்துள்ளது.