கோவிட்-19 நோயாளிகளில் நீண்டகால மூளை வியாதிகள்
அகத்தியன்
மூளை உட்பட ஏறத்தாழ உடலின் அத்தனை பாகங்களையும் கோவிட் -19 வைரஸ் தாக்குகிறதென தற்போது தெரியவந்துள்ளது. ஆகஸ்ட் 17 அன்று வெளியான லான்செட் சைக்கியாட்றி (Lancet Psychiatry) என்ற சஞ்சிகையில் வெளிவந்துள்ள கட்டுரையின்படி கோவிட் நோயால் பீடிக்கப்பட்ட சுமார் 1.28 மில்லியன் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் இம் முடிவை ஆராய்ச்சியாளர் எட்டியுள்ளனர். குழந்தைகள் முதல் முதியோர் வரை அவர்களது சிந்தனைகளில் நீண்டகாலப் பாதிப்பை கோவிட் ஏற்படுத்தியுள்ளதென இவ்வாய்வு தெரிவிக்கிறது.
அமெரிக்காவிலும், வேறு பல நாடுகளிலும் கோவிட் நோயாளிகள் மீது மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வின்படி, ஏனைய விதமான சுவாசத் தொற்றுநோய்க்குள்ளாகியவர்களைவிட, கோவிட்-19 தாக்கத்துக்குள்ளாகிய ஒருவர் இரண்டு மாதங்களில் மனப்பதட்டம் (anxiety) மற்றும் மனவழுத்தம் (depression) ஆகிய மனநோய்களுக்குள்ளாகிறார்கள் எனவும் இதைத் தொடர்ந்து 2 வருடங்கள் வரை மூளை மந்தம் ( brain fog), மனப்பிறள்வு (psychosis), வலிப்பு (seizures), மறதி (dementia) ஆகிய மூளை சம்பந்தப்பட்ட நோய்களால் பீடிக்கப்படும் சாத்தியமுள்ளவர்களாகிறார்கள் எனவும் தெரியவருகிறது.
கோவிட்-19 தொற்றுக்குப் பின் குறைந்தது ஒரு அறிகுறியாவது பலமாதங்களுக்குத் தொடர்ந்து இருப்பின் அதை “நீண்ட கோவிட்” (Long Covid) என அழைப்பர். இப்படியான “நீண்ட கோவிட்” இப்போது உலகம் முழுவதும் பரவலாகக் காணப்படுகிறது. அமெரிக்காவில் நோய்தொற்றிய 5 பேரில் ஒருவருக்கு சராசரியாக “நீண்ட கோவிட்” காணப்படுகிறது என நோய்க்கட்டுப்பாட்டு மையம் கூறுகிறது. இப்படியான “நீண்ட் கோவிட்” எப்படி உருவாகிறது என்பதை கடந்த வாரம் வெளியான ஆய்வின் முடிவுகள் விளக்குகின்றன.
இதன்படி, ஆரம்ப கோவிட் வைரஸை விட பின்னர் வந்த அதன் திரிபான ‘டெல்ற்றா’ (Delta) மற்றும் ‘ஓமைக்குரோன்’ (Omicron) ஆகியவற்றின் தொற்றுக்குள்ளாகியவர்கள் கூடுதலாக நரம்பு சம்பந்தமான வியாதிகளுக்கு உள்ளாகுகிறார்கள் எனவும் இது நோயாளிகளின் வயதுகளுக்கேற்ப வேறுபடுகிறது எனவும் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இவ்வாய்வின் முதன்மை விஞ்ஞானி மக்ஸீம் ரக்கே கூறுகிறார். குறிப்பாக, 65 வயதுக்கு மேற்பட்ட கோவிட் நோயாளிகள், இதர சுவாச நோய்களால் பீடிக்கப்பட்டவர்களைவிட, மூளை மந்தம், மறதி, மனப்பிறள்வு ஆகிய அறிகுறிகளைக் கொண்டிருப்பதாக இவ்வாய்வு தெரிவிக்கிறது.
இளைய வயதினர் மீது இத் தாக்கங்கள் குறைவாகவே இருக்கிறது எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் குழந்தைகள், கோவிட் 19 தொற்றுக்குள்ளாகை இரண்டு வருடங்களுக்குள் வலிப்பு நோய்களுக்கு உள்ளாகக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு எனவும் இவ்வாய்வு தெரிவிக்கிறது.