கோவிட்-19 | ஒக்ஸ்ஃபோர்ட் பலகலைக்கழகத்தின் தடுப்பு மருந்து விரைவில் விநியோகத்துக்கு வரும்!
இளையோரிலும் முதியோரிலும் சிறந்த தடுப்பாற்றலை உருவாக்குகிறது
ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்டு பரீட்சார்த்தம் செய்யப்பட்டுவரும் கோவிட்-19 தடுப்பு மருந்து இளையவர்களிலும், முதியவர்களிலும் சிறப்பான தடுப்பாற்றலை விருத்தி செய்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய மருந்து நிறுவனம் அஸ்ட்றாசெனிக்கா (AstraZeneca) வினால் தயாரிக்கப்படும் இம் மருந்து தற்போது மூன்றாம் கட்ட மனிதப் பரிசோதனையில் உள்ளது எனவும், குறிப்பிடத்தக்க அளவில் ஆபத்தான எந்த எதிர்விளைவுகளையும், குறிப்பாக முதியவர்களில், தரவில்லை எனவும் ஆராய்ச்சியாளர் தெரிவிக்கின்றனர்.
AZD1222 என்ற பெயரில் சந்தைபடுத்தப்படவிருக்கும் இம் மருந்து அரசாங்கத்தின் அனுமதிக்காகக் காத்திருக்கிறது. அதே வேளை, ஃபைசர் நிறுவனத்தின் PFE.N என்ற மருந்தும், பயோஎன்ரெக் நிறுவனத்தின் 22UAy.F என்ற மருந்தும் மனிதப் பரீட்சைகள் முடிவுற்ற நிலையில் அனுமதிக்காகக் காத்திருக்கின்றன.
ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தின் AZD1222 தடுப்பு மருந்து வயோதிபர்களில் மிகச் சிறப்பாகத் தடுப்பாற்றலை விருத்தி செய்வது ஆராய்ச்சியாளர்களுக்கு உற்சாகம் தருவதாயுள்ளது என்கிறார்கள். காரணம் வயது அதிகரிக்கும்போது தடுப்பாற்றல் பலவீனமடைவது வழக்கம். அதனால் தான் அநேகமான வயோதிபர்கள் தொற்றுநோய்களினால் இலகுவில் மரணமடைகிறார்கள்.
இத் தடுப்பு மருந்தின் விநியோகத்துக்கான அனைத்து தயாரிப்புகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அடுத்த வருட முற்பகுதியில் சந்தைக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டெனவும் பிரித்தானிய சுகாதார அமைச்சர் மற் ஹன்னொக் தெரிவித்துள்ளார்.
ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கடந்த ஜனவரி மாதம் AZD1222 தடுப்பு மருந்தின்மீதான ஆராய்ச்சி தொடங்கப்பட்டது. சிம்பான்சி குரங்குகளில் சாதாரண தடிமனைத் தரும் வைரஸைப் பலவீனமாக்கி அதன் மரபணுவரிசையை கொறோணாவைரஸின் புரதக்கூரின் (spike protein) மரபணுவரிசைக்கு மாற்றி இத் தடுப்பு மருந்தினூடு மனித உடலுக்குள் அனுப்புகிறார்கள். இப் புரதக்கூரை ஆயுதமாகப் பாவித்துத்தான் கொறோணோவைரஸ் மனிதக் கலங்களைத் தாக்குகிறது. மனித உடலின் தடுப்பாற்றல் செயலிழக்கப்பட்ட போலி வைரஸைக் கண்டவுடன் அதை நிஜமான எதிரியாக இனம்கண்டு அதற்கான தடுப்பாற்றலை உற்பத்தி செய்துகொள்கிறது. நிஜமான கொறோணோவைரஸ் உடலுக்குள் நுழையும்போது இத்தடுப்பாற்றல் கலங்கள் இந் நிஜமான வைரஸ்களை அழித்துவிடும் என்பதே இத் தடுப்பு மருந்தின் பின்னாலுள்ள தத்துவம்.
இத் தடுப்பு மருந்தை ஜூலை மாதம் மனிதர்களில் பரிசோதித்தபோது பலரின், குறிப்பாக வயோதிபரின் உடல்களில் எதிர்ப்பாற்றல் மிகச் சிறப்பாக அபிவிருத்தியடைந்திருந்ததை ஆராய்ச்சியாளர் அவதானித்தார்கள். 18 வயது முதல் 55 வயதுவரையான மனிதர்கள் இவ்வாராய்ச்சியில் பங்குபற்றியிருந்தார்கள்.
இம் மருந்தைத் தயாரிக்கும் அஸ்டாசெனெக்கா நிறுவனம் உலகின் பல நிறுவனங்களுடனும், அரசாங்கங்களுடனும் ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. அமெரிக்காவில் மனிதப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான அரசாங்கத்தின் அங்கீகாரம் மூன்று நாட்களுக்கு முதல் (வெள்ளி) கிடைத்திருக்கிறது.
நன்றி: marumoli.com
No related posts.