கோவிட்-19 இன் தாக்கத்தினால் மாரடைப்பு, இருதய வியாதிகள் அதிகரிப்பு

கோவிட்-19 தொற்றின் வேகம் தணிந்தாலும் அதன் தாக்கம் இன்னும் முற்றாக எம்மை விட்டுப் போகவில்லை. கோவிட்டின் பின்விளைவாக இப்போது மாரடைப்பு, இருதய வியாதிகள் போன்றவற்றால் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்படிப் பாதிப்புக்குள்ளாகுபவர்கள் குறிப்பாக இளையவயதினராகவிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

கோவிட் இருதயத்தைப் பலவழிகளிலும் தாக்குகிறது என்பதை நாம் முன்னரே அறிந்திருக்கிறோம். குறிப்பாக இருதயம் மற்றும் இரத்தச் சுற்றோட்டத்துக்குக் காரணமான இரத்தக்குழாய்களில் கோவிட் ஏற்படுத்தும் அழற்சி (inflammation) காரணமாக இரத்தம் கட்டியாக நேரிடுகிறது. இந்த இரத்தக் கட்டிகள் ஒடுங்கிய இரத்தக்குழாய்களில் சிக்குப்படும்போது அவை மாரடைப்பையோ அல்லது பாரிசவாதத்தையோ ஏற்படுத்துகின்றன என்கிறார் இருதயவியல் நிபுணர் டாக்டர் கிறிஸ்தோபர் ஓவர்கார்ட்.

சென்ற செப்டம்பர் மாதம் லொஸ் ஏஞ்ஞலிஸிலுள்ள சீடார்ஸ்-சைனாய் மருத்துவமனையினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின்போது 25 முதல் 44 வயதுவரையிலுள்ளவர்களில் 29.9% மானோர் மாரடைப்புக்குள்ளாகியிருந்தார்கள் எனவும், ஒப்பீட்டளவில் 45-64 வயதுடையோர் 19.6% மும், 65 வயதுக்கு மூத்தோர் 13.7% மாரடைப்புக்குள்ளாகியிருந்ததாகவும் தெரியவந்தது. இளைய வயதினருக்கும், இதர வயதினருக்குமிடையே அறிகுறிகளில் எந்தவித வித்தியாசமுமில்லை எனவும் கூறப்படுகிறது.

இவ்விடயத்தில் நாம் எல்லோரும் எமது நோயறிகுறிகள் குறித்து மிகவும் அவதானமாக இருக்கவேண்டுமென்கிறார் மருத்துவர் ஓவர்கார்ட். அதி தீவிரமான மார்பு வலி, அத்துடன் ஆறுதலாக அமர்ந்து இருக்கும்போது காணப்படும் தீவிர மார்புவலி; கைவழியே கீழிறங்கும் வகையான வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாடவேண்டும் என்கிறார் அவர்.

இதே வேளை கடந்த மார்ச் 2022 இல், கோவிட் தொற்றுக்குள்ளாகிய 150,000 முன்னாள் அமெரிக்க இராணுவத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது இவர்களில் 72% மானோரது இருதய நாடிகளில் படிவுகள் (plaque) ஏற்பட்டதால் இருதய வியாதிகளுக்குள்ளாகும் வாய்ப்புகள் அவர்களுக்கு இருந்தது எனவும், இவர்களில் 63% பேருக்கு மாரடைப்பும் 52% மானோருக்கு பக்கவாதமும் (stroke) ஏற்படும் சாத்தியமிருந்தது எனவும் காணப்பட்டது. அதுமட்டுமல்லாது 2021 இல் கனடாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது கோவிட் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 45% மானோருக்கு இருதயம் காயப்பட்டிருந்தது (cardiac injury) எனவும் காணப்பட்டிருந்தது.

இதே வேளை, சில கோவிட் தடுப்பு மருந்துகளும் இருதய அழற்சிக்குக் காரணமாக அமைந்திருந்தன எனச் சில ஆய்வுகள் கண்டிருந்தன. இருப்பினும் கோவிட்டின் தொற்றிலிருந்து தடுப்பு மருந்துகள் காப்பாற்றியவர்களை விட அவற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் குறைவு என்பதால் இவ்விடயம் அதிகம் பெரிதுபடுத்தப்படவில்லை. தடுப்பு மருந்தினால் ஏற்படும் இருதய அழற்சியின் காரணமாக இருதயத்தைச் சுற்றியுள்ள நார்ச்சவ்வு பாதிக்கப்படுதலோ (pericardiatis) அல்லது இருதயத்தின் தசைகள் அழற்சிக்குள்ளாகிப் பலமிழந்துபோவதோ (myocardiatis) நடைபெறலாம். அதே வேளை வைரஸ், பக்டீரியா தொற்றின் காரணமாகவும் இப்படியான வியாதிகள் ஏற்பட வாய்ப்புண்டு. (Photo by Amanda Canas on Unsplash

Print Friendly, PDF & Email