கோவிட் தொற்றின் பின் புலனாட்சிக் குறைபாடு (cognitive impairment)

20 வருட ஆயுள் மூப்பிற்குச் சமன்

அகத்தியன்

நீங்கள் கோவிட் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவரா? உங்கள் ஞாபக சக்தி தொற்றுக்கு முன்னர் இருந்த அளவுக்கு கூர்மையாக இருக்கிறதா? தெரிந்த பலரது பெயர்கள் இப்போது ஞாபகத்துக்கு வருவதில்லையா? உங்களது விவேகம் குறைந்துபோனதாக நீங்கள் கருதுகிறீர்களா? அப்படியானால் கொறோணாவைரஸின் தொற்று உங்கள் மூளையைப் பாதித்துவிட்டது என உறுதியாகக் கூறலாம். இப்படிக் கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.

பொதுவாக 50 முதல் 70 வயது வரையிலானவர்களுக்கு முதுமை மறதி எனப்படும் புலனாட்சித் தளர்வு (cognitive impairment) ஏற்படுவது வழக்கம். ஆனால் கோவிட் பெருந்தொற்றினால் பீடிக்கப்பட்டு மீண்டு வந்தவர்கள், அவர்கள் மத்திம வயதுக்காரர்களாக இருப்பினும், அவர்களில இந்த ‘முதுமை’ இயல்புகள் வெளிப்படுவதை ஆராய்ச்சியாளர்கள் அவதானித்து வருகின்றனர். கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழக மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள் இணைந்து செய்த ஆராய்ச்சியின் பயனாக இப்படியான விடயங்கள் தெரியவந்துள்ளன.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், தொற்றிலிருந்து மீண்டு 6 மாதங்களுக்குப் பின்னரும்கூட இப் பாதிப்பு அவதானிக்கப்பட்டுள்ளது என்பதே. மனிதர்களின் விவேகத்தை அளக்கும் IQ சுட்டியில் குறைந்தது 10 புள்ளிகள் குறைவுள்ள நிலைக்கு இந் நோயாளிகள் செல்லவேண்டியிருக்கின்றது என்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள்.

கோவிட் பெருந்தொற்று எமது உடலில் எப்படியான பாதிப்புகளையெல்லாம் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை நாம் இன்னும் முற்றாக அறிந்துகொண்டவர்களில்லை. அதன் பல தாக்கங்கள் தமக்கேயுரிய அறிகுறிகளைப் பல மாதங்கள் கடந்த பின்னரும்கூடக் காட்டி வருகின்றன. நோயிலிருந்தும் குணமடைந்த பலரது மூளை, நுரையீரல், சிறுநீரகம், இருதயம் என்று உடலின் பல முக்கிய உறுப்புக்களில் கொறோணாவைரஸ் விட்டுச் சென்ற பாதிப்புக்கள் பல இப்போது தான் மருத்துவர்களினதும் விஞ்ஞானிகளினதும் கவனங்களை ஈர்த்து வருகின்றன.

மூளையில் ஏற்படும் பாதிப்புகளில் ஞாபகக் குறைவு, புலன்கள் கொண்டுவரும் தகவல்களைச் சீர்தூக்கிப் பார்த்து முடிவுகளை எட்ட முடியாமை (எண்ணத் தடுமாற்றம்) போன்றவை முக்கியமானவை. இப் பாதிப்புகளிலிருந்து சிலர் மீண்டிருக்கிறார்கள் எனினும் அதற்கான காலம் சிலருக்கு சற்று அதிகமானதாகவே இருக்கிறது. இதற்கு காரணம் ஒருவரது உடலில் இத் தொற்று எந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அளவிடுவதற்கான கருவிகள் எதுமில்லை. சிலரது உடலின் ஆரோக்கிய நிலை, சிலரது பிறப்பு மரபணுக்களின் தாங்கு சக்தி, சிலரது இரத்த வகை என்று பல காரணிகள் ஒருவரது உடலில் கோவிட் பெருந்தொற்றின் பாதிப்பின் அளவைத் தீர்மானிக்கின்றன என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதே வேளை தொற்றும் வைரஸ் திரிபுகளின் வீரியம் இன்னுமொரு காரணமாகவும் அமைகிறது.

ஆனாலும் பெரும்பாலான கோவிட் நோயாளிகளில், நீண்ட காலங்களின் பின்னரும் காணப்படும் ஒரு பொதுமை அவர்களது ஞாபக சக்தியில் காணப்படும் குறைபாடு. சில சொற்களை மறந்துவிடுதல், மூளை மந்தம், களைப்பு, தூக்கக்குறைபாடு, மனப்பதட்டம் (anxiety) மற்றும் PTSD ஆகியன இந்நோயாளிகளில் பொது அறிகுறிகளாகும்.

பிரித்தானியாவில் செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின்படி 7 பேரில் ஒருவருக்கு இப்படியான ஆரோக்கியக் குறைபாடுகள் காணப்படுகின்றன எனவும், நோயிலிருந்து மீண்டு 12 வாரங்களுக்குப் பிறகும் இவ்வறிகுறிகளை இந்நோயாளிகள் கொண்டிருந்தனர் எனவும் அறிய முடிகிறது. இந் நோயாளிகளில் முக்கால்வாசிப் பேர் கோவிட் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களாகவும் காணப்பட்டார்கள்.

கேம்பிறிட்ஜ் ந்கரத்திலுள்ள அட்டென்புரூக் மருத்துவமனையில் 46 பேரில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்போது அவர்களது புலனாட்சித் திறன்களைக் கணனிகளின் உதவியுடன் விஞ்ஞானிகள் மதிப்பிட்டார்கள். ஞாபகத் திறமை, கவனக் குவிப்பு, காரணப்படுத்தல் (reasoning) போன்ற விடயங்கள் அப்போது ஆராயப்பட்டன. இதன் பெறுபேறாகப் பலர் தமது கணிப்புகளில் தவறிழைத்தும், கிரகிப்பில் தாமதத்தையும் காட்டியிருக்கிறார்கள். ஆறு மாதங்களுக்குப் பின்னருங்கூட இதே நிலை அவர்களில் அவதானிக்கப்பட்டது. சுவாசக் கருவிகள் (mechanical ventilators) பொருத்தப்பட்ட பலரில் இது மிகவும் மோசமாகவிருந்ததும் அவதானிக்கப்பட்டது. இது ஒருவரது ஆயுளை 20 வருடங்களால் அதிகரிப்பதற்குச் சமமானது என்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள்.

மூளையில் ஏற்படும் செயற்பாட்டுக் கோளாறுகளான முதுமை மறதி (dementia), இயற்கான மூப்பெய்தல் (routine ageing) ஆகியவற்றுக்கு மாறாக, கோவிட் தொற்றினால் ஏற்படும் மாற்றங்கள் தனித்துவமானவை என்கிறார் இவ்வாராய்ச்சியில் ஈடுபட்டுவரும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் டேவிட் மேனன்.

“இதிலுள்ள நல்ல செய்தி என்னவென்றால் பல மாதங்களின் பின்னர் இந் நோயாளிகளை நாம் மீண்டும் ஆராய்ந்தபோது, மிகத் தாமதமாகவேனும், சில முன்னேற்றங்களை அவதானிக்க முடிந்தது” என்கிறார் பேராசிரிய மேனன்.

Print Friendly, PDF & Email