கொறோனா வைரஸ் | சீனாவிலிருந்து இன்னுமொரு தொற்று நோய்!

சீனாவிலிருந்து மேலுமொரு வைரஸ் தொற்றுநோய் உலகமெங்கும் பரவி வருவது குறித்துப் பல நாடுகள் தடுப்பு முன்னேற்பாடுகளைச் செய்துவருகின்றன.

சென்ற மாதம் வூஹான் நகரத்தில் 217 பேருக்கு இந் நோய் தொற்றியிருக்கக் கண்டு பல நோய்த்தடுப்பு முயற்சிகளை சீன அரசாங்கம் மேற்கொண்டு வந்திருந்தத். இருப்பினும் பல வருடங்களுக்கு முன்னர் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய சார்ஸ் நோயை ஒத்த இந்த வைரஸ் சீனா முழுவதும் வேகமாகப் பரவிவருகிறது எனவும் இந்த வாரம் மட்டும் 139 புதிய நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர் என்றும் தெரிய வருகிறது.

இந்த வாரம் சீனப் புதுவருடக் கொண்டாட்டங்களை முன்னிட்டுப் 400 மில்லியன் மக்கள் உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வார்கள் என்பதனால் பல நாடுகளும் விமானநிலையங்களில் நோய்த்தடுப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

2002 – 2003 வருடங்களில், சீனாவிலும், ஹொங் கொங்கிலுமாக 650 பேர் சார்ஸ் என்னும் இன்னுமொரு வைரஸ் தொற்றுக்கு மரணமாகியிருந்தார்கள். இந்த தடவை சார்ஸையொத்த வைரஸ் தாக்கி, இதுவரை, மூன்று பேர் மரணமடந்துள்ளதாக அறியப்படுகிறது. தாய்லாந்து, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளிலும் இன் நோய் பரவியிருப்பதாக அறியப்படுகிறது.


அறிகுறிகள்

 • தும்மல் (sneezing)
 • மூக்கினால் நீர் வடிதல் (runny nose)
 • களைப்பு (fatigue)
 • இருமல் (cough)
 • சில வேளகளில், காய்ச்சல் (fever)
 • தொண்டை அரிப்பு (sore throat)
 • தொய்வு (asthma)

சிகிச்சைகள்

இந் நோய்த்தொற்றுக்கு சிகிச்சைகள் எதுவுமில்லை. இருமல், காய்ச்சலுக்கான மருந்தகங்களில் வாங்கக்கூடிய மருத்துகளையும் (Over the Counter Medication (OTC)), போதுமான அளவு ஓய்வெடுத்தலுமே ஒரு நோயாளி செய்யக்கூடியது.

 • போதுமான ஓய்வு, கடுமையான வேலைகளைத் தவிர்த்தல்
 • தேவையான் அளவுக்கு நீர் அருந்துதல்
 • புகைத்தலையும் புகைபிடிக்கும் இடங்களையும் தவிர்த்தல்
 • காய்ச்சல், நோவு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் மருந்துகளை உட்கொள்ளல் (acetaminophen, ibuprofen etc.)
 • ஆவி உருவாக்கும் உபகரணங்களை (humidifier or vaporizer) பாவித்தல்


இன்று காலை மட்டும் வூஹான் நகர சீஹீ மருத்துவமனையில் 100 நோயாளிகளுக்கு மேல் சிகிச்சைக்காகக் காத்திருக்கிறார்கள். மருத்துவரைப் பார்ப்பதற்கு ஒரு நோயாளி 3-4 மணித்தியாலங்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது எனச் சொல்லப்படுகிறது.

இந்தத் தடவை பரவி வரும் ‘கொறோணா வைரஸ்’ விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குத் தாவும் வகையினது எனவும், வூஹான் நாகரிலுள்ள கடலுணவுச் சந்தையொன்றிலிருந்து இது ஆரம்பமானது எனவும் கூறப்படுகிறது.

விலங்கிலிருந்து மனிதருக்குத் தொற்றுவதில் ஆரம்பித்தாலும் தொடுகையின் மூலம் மனிதரிலிருந்து மனிதருக்குத் தொற்றும் அபாயமும் இருக்கிறது என உலக சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

சம்பந்தப்பட்ட கடலுணவுச் சந்தை ஜனவரி 1ம் திகதி மூடப்பட்டுவிட்டாலும், சில நோயாளிகளுக்கும் அச் சந்தைக்கும் எதுவித தொடர்புகளும் இருக்கவில்லை எனவும் வாஇரஸ் எங்கிருந்து ஆரம்பித்தது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அறிவிக்கப்பட்டதைவிட நோய்த் தொற்று அதிகமெனவும், 2003 சார்ஸ் ஐப் போலவே இம்முறையும் அரசு அதைத் தடுக்கும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவில்லை; பல விடயங்களை அரசு மூடி மறைக்கிறது எனவும் குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன.

Print Friendly, PDF & Email