கொறோனாவைரஸ் | தாய்லாந்தில் வெற்றிகரமான சிகிச்சை!

48 மணித்தியாலங்களில் நோயாளி குணமாகினார்

கொறோனாவைரஸ் (2019-nCoV) தொற்றிய நோயாளி ஒருவருக்கு வெற்றிகரமாகச் சிகிச்சையளித்துள்ளதாக தாய்லாந்து சுகாதார அமைச்சு அறிவித்திருக்கிறது.

இன்ஃபுளுவென்சா, எச்.ஐ.வி., போன்ற வைரசைக் கட்டுப்படுத்தப் பாவிக்கும் மருந்துக் கலவை ஒன்றின் மூலம் சிகிச்சை வழங்கப்பட்ட ஒரு சீனப் பெண்மணி பிரமிக்கத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

நோய்த் தொற்றுடன் அனுமதிக்கப்பட்ட 71 வயதுப் பெண்ணுக்கு இச் சிகிச்சை வழங்கி 48 மணித்தியாலங்களின் பின்னர் அப்பெண்ணில் நோய்த் தொற்று முற்றாக நீங்கிவிட்டிருந்ததாக அமைச்சின் ஊடக சந்திப்பின்போது சாக்டர் கிரியெங்சக் அத்திபோண்வானிக் தெரிவித்தார் என ஏ.எப்.பி. செய்தி ஊடகம் தெரிவித்திருக்கிறது.

ஃபுளூ சிகிச்சைக்குப் பாவிக்கும் ஒசெல்ட்டாமிவிர் (oseltamivir) மருத்துடன், HIV வைரஸ் சிகிச்சைக்குப் பாவிக்கும் லொபினாவிர் மற்றும் ரிற்றினாவிர் (lopinavir and ritinavir) ஆகிய மருந்துகளையும் கலந்து மருத்துவர்கள் இப் பெண்மணிக்குச் சிகிச்சையளித்தார்கள் என்றும் முடிவுகள் வெற்றிகரமானை என்று தெரிந்த பின்னர்தான் அதை ஊடகங்களுக்கு தெரியப்படுத்துவதாகவும் டாக்டர் கிரியென்சக் தெரிவித்தார்.

தாய்லாந்தில் இதுவரை 19 உறுதிப்படுத்தப்பட்ட நோய் தொற்றியோர் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் 8 பேர் குணமாகி வீடு திரும்பிவிட்டனர்.

தாய்லாந்தின் பொருளாதாரம் பெரும்பாலும் சுற்றுலாவில் தங்கியிருப்பதும் அங்கு வரும் பயணிகளில் பெரும்பாலானோர் சீனாவிலிருந்து வருவதனாலும், அவர்களை வரவேற்று உபசரிப்பதில் அரசு கவனமெடுத்து வருகிறது. குறிப்பிட்ட பெண்மணி குணாமாகியதும் தாய்லாந்தின் சுகாதார அமைச்சர் அனுத்தின் சார்ண்விரக்குல் மருத்துவமனைக்கு நேரே சென்று அப் பெண்ணுடன் உரையாடியதன் மூலம் முன்னுதாரணமாகத் திகழ்ந்துள்ளார்.

அதே வேளை, தாய்லாந்தைச் சேர்ந்த டாக்சி ஓட்டுனர் ஒருவர் நோயின் அறிகுறிகளைக் கொண்டுள்ளதாகவும் அவர் சீனாவுக்குச் சென்று வராதவாரக இருப்பதனால் இவ் வைரஸ் மனைதரிலிருந்து மனிதருக்குத் தாவ ஆரம்பித்திருக்கலாமோ என்ற அச்சமும் இப்போது மருத்துவ சமூகத்தைப் பீடித்திருக்கிறது.

Print Friendly, PDF & Email