கொறோனாவைரஸ் | உலக சுகாதார நிறுவனம் அவசர நிலைமை பிரகடனம்!

உயிரிழந்தோர் 213, நோய் தொற்றியோர் 9692

கொறோனாவைரஸ் தொற்றுநோய் தொடர்பாக உலகம் முழுவதுக்குமான அவசரகாலப் பிரகடனத்தை இன்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது.

இதுவரை காலமும் இந்த அவசரகாலப் பிரகடனம் சீனாவில் மட்டுமே நடைமுறையிலிலிருந்தது. அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 213 ஆகவும் நோய் தொற்றியோர் தொகை 9,692 ஆகவும் உயர்ந்ததை அடுத்து இப் பிரகடனம் உலகமெங்கும் விஸ்தரிக்கப்பட்டது. இதைவிட 102,000 மக்கள் அங்கு கண்காணிப்பில் உள்ளார்கள். இதுவரை 18 நாடுகள் நோய் தொற்றிய நாடுகளின் பட்டியலில் உள்ளன.

இந் நோய் எப்படிப் பரவுகிறது, எவ்வளவு ஆபத்தானது என்பதை அறிய விஞ்ஞானிகள் அவசர ஆராய்ச்சிகளில் இறங்கியுள்ளார்கள்.

“சீனா இந் நோயைக் கட்டுப்படுத்துவதற்கான வசதிகளைக் கொண்ட நாடு. நோய் இதர நாடுகளுக்குப் பரவுவது பற்றியே நாங்கள் அச்சம் கொள்கிறோம். இந் நோயை எதிர்கொள்ளத் தயாராக இல்லாத வறிய நாடுகள் பற்றிக் கவலைப்படுகிறோம்” என உலக சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ரெட்றோஸ் அடனொம் கெப்ரயீசஸ் தெரிவித்துள்ளார்.

வசதியுள்ள நாடுகள் போதிய தயாரிப்புகளைச் செய்துள்ளன. ரஸ்யா, சீனாவுடனான தனது 4,180 கி.மீ. எல்லையை மூடியுள்ளது. பல அரசுகள் தமது நாட்டு மக்களுக்கு பயண எச்சரிக்கைகளை விடுத்து வருகிறார்கள். பல நாடுகள் சீனாவுக்கான விமானப் பயணங்களை நிறுத்தியுள்ளது. வெளிநாடுகளுடனான சீனாவின் வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் இப் பிரகடனம் பல நிபந்தனைகளையும் நடைமுறைகளையும் உலகநாடுகளுக்கு பரிந்துரைக்கும் அதே வேளை, வசதியற்ற நாடுகளுக்கு நிதியையும், இதர வளங்களையும் வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்திலுள்ளது. “இந் நோயைக் கட்டுப்படுத்த சீனா தன்னாலியன்ற முயற்சிகள் அனைத்தையும் செய்கிறது. அதே வேளை நோய்த் தொற்றினால் பாதிக்கப்படும் வசதியற்ற நாடுகளுக்கு உதவிகளைச் செய்ய சீனா தயாராக இருக்கிறது” என ரெட்றோஸ் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email