கொறோனாவைரஸ் | இருதய நோயாளிகள் ஏன் கவனமெடுக்கவேண்டும்?

Dr. Kanaga N.Sena, MD
Neurologist
Bridgeport, CT. USA

மார்ச் 15, 2020

Dr. Kanaga Sena MD
கடந்த சில வாரங்கள், மாதங்களாக உலகைக் கலக்கிவரும் கொறோனாவைரஸ் (Sars2-Covid-19) எதிர்பார்த்ததைவிட மிக மோசமானதாக இருக்கிறது என்பதை இப்போது உலக சுகாதார நிறுவனம் உட்பட உலக அரசாங்கங்களும், பொதுமக்களும் உணரத்தொடங்கியிருக்கிறார்கள்.

கோவிட்-19 எனப் பெயரிடப்பட்டிருக்கும் இவ் வைரஸ் சார்ஸ் வகையைச் (Severe Acute Respiratory Symptom -SARS) சேர்ந்ததெனினும் அதற்கான தடுப்பு அல்லது சிகிச்சை மருந்துகள் எதையும் மருத்துவ உலகம் தயாரித்து வைத்திருக்கவில்லை. அதே வேளை நமது உடம்பும் இப் புதிய வைரஸைச் சமாளிக்கக்கூடிய எதிர்ப்பாற்றலைத் தயாரிப்பதற்கு (adaptive immune response) அவகாசம் கிடைக்கவில்லை. அதற்குள் வைரஸ் தன் ஆற்றலைக் காட்டிவிட்டது.

இவ் வைரஸ் பற்றியும், அதன் தொற்றைத் தவிர்ப்பதற்கு மக்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்பதை அரசுகளும், மருத்துவ உலகமும் ஊடகங்கள் மூலம் நாளாந்தம் அறிவித்துக்கொண்டிருக்கின்றன. எனவே இங்கு அதைப்பற்றி விளக்கம் தேவையில்லை. ஆனால் அவர்கள் மக்களுக்கு தெளிவாக அறிவுறுத்தாத ஒரு விடயத்தை மட்டும் விளக்க விரும்புகிறேன்.

What are pre-existing conditions?

இவ் வைரசின் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் பற்றிக் கூறும்போது, முதியோர் (70 வயதுக்கு மேற்பட்டோர்), இருதய நோய், இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களைக் (pre-existing conditions) கொண்டவர்களாகவிருக்கிறார்கள் என மட்டுமே சொல்லப்படுகிறது. அதைப் பற்றிக் கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால் நல்லது என நான் நினைக்கிறேன்.

இது பற்றி அமெரிக்காவிலுள்ள யேல் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் / மருத்துவர்கள் போன்றோர், மருத்துவ சமூகத்தில் கலந்தாலோசித்து ஒரு அறிக்கையை கருத்துப்பகிர்வுக்காக விட்டிருந்தார்கள். அதன் பிரகாரம் இருதய நோயுள்ளவர்கள், இரத்த உயரழுத்தமுடையவர்கள், நீரிழிவு வியாதிக்காரர் போன்றோருக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் சில மருந்து வகைகளின் செயற்பாடுகளை, இந்த கோவிட்-19 வைரஸ் தனக்குச் சாதகமாகப் பாவித்துக்கொள்கிறதா என ஒரு கருதுகோள் (hypothesis) முன்வைக்கப்பட்டது. எனவே அப்படியானவர்களுக்கு விசேட எச்சரிக்கை கொடுக்கப்பட வேண்டுமா என்பதே இந்த மருத்துவர்களின் கேள்வியாக இருக்கிறது.

இம் மருந்துகளின் செயற்பாடுகள் சாதாரண மக்களுக்குப் புரிந்துகொள்வது கொஞ்சம் கடினமாகவிருந்தாலும், இயன்ற முறையில் இங்கு அதை எளிமைப்படுத்திக்கூற முயற்சிக்கிறேன்.

மனித உடம்பின் ஆகச்சிறிய அங்கம் கலம் (cell) எனப்படும். இப்படி பல கோடி கலங்களினால் எமது உடம்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. எமது உடம்பு ஆரோக்கியமாக இருப்பதற்கு முதலில் இக் கலங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

ஒருவருக்கு நோய்க்கிருமி தொற்றுகிறதென்றால், அக்கிருமி குடலிலோ அல்லது வேறெந்த திறந்த அறைகளிலோ ஒளித்திருந்தால் அவற்றை நாம் தேடிப்பிடித்து மருந்துகளினால் அழித்துவிடலாம். ஆனால் சில கிருமிகளோ கெட்டித் தனமாக நமது கலங்களுக்கு உள்ளே சென்று அவற்றைத் தமது விருப்பத்துக்கேற்ப மாற்றி விடுகின்றன. சில அவற்றின் மரபணுக்களிலேயே மாற்றங்களைச் செய்துவிட்டு தமது இனத்தையும் பெருக்கிவிடுகின்றன. நாம் கொடுக்கும் மருந்து கூட இவற்றை ஒன்றும் செய்ய முடியாது; ஏனெனில் இது கலங்களுக்குள் நடைபெறும் செயற்பாடுகள்.

புரிகிறது, ஆனால் அவை கலங்களுக்குள் எப்படிப் புக முடிகிறது என நீங்கள் கேட்கலாம். இது தான் கொஞ்சம் விளக்குவதற்குச் சிக்கலானது.

வைரஸ்கள் தமது தொழிற்பாட்டைச் செய்வதற்கு, அவை கலங்களின் சுவரைத் (சவ்வு / membrane) துளைத்துக்கொண்டு உள்ளே செல்ல வேண்டும்.

Receptors and Ligands

கலங்கள் சாதாரணமாக தேவையில்லாத ஒன்றையும் உள்ளே அனுமதிப்பதில்லை. சில ஹோர்மோன்கள், இன்சுலின் போன்ற மருந்துகள் மூலக்கூறுகள் வடிவத்தில் உள்ளே போனால் தான் வேலை செய்யும். (இங்கே நான் சில ஆங்கிலச் சொற்களுக்கு தொழிற்பாட்டு ரீதியில் விளக்கம் தரக்கூடிய தமிழ்ச் சொற்களைப் பாவிக்கிறேன். அவை உண்மையான மொழிமாற்றம் (translation) அல்ல) அதற்கு உடல் ஒரு உத்தியைப் பாவிக்கிறது. கலங்களின் உள்ளே அல்லது சுவருக்கு வெளியே சில ‘பூட்டு’க்களை (receptors) வைத்திருக்கும். உள்ளே வரவிரும்பும் மூலக்கூறுகளை ‘திறப்புக்கள்’ (ligands) என உதாரணமாகக் கொள்ளலாம். பூட்டும் திறப்பும் ஒன்றுக்கொன்று இணங்கிக்கொண்டால் அது பூட்டைத் திறந்து வாசலையும் திறந்து விடும்.

கிருமிகள் கலங்களுக்குள் புகுவதற்கு முன்னர் தம்மோடு சோடி சேரக்கூடிய receptors ஐத் தேடிக்கொண்டிருக்கும். கிடைத்தவுடன் அவற்றோடு ஒட்டிக்கொண்டு தமக்குத் தேவையான வகையில் அதை மாற்றிவிடும். இனப்பெருக்கம் தான் அதன் தேவையாக இருந்தால் அப்படியான தொழிற்பாட்டைத் தரவல்ல சோடியைக் கண்டுபிடித்துவிடும்.

இப்படியான பலவகையான பூட்டுக்கள் கலங்களின் சுவர்களில் உள்ளன. எஸ்ட்றோஜின், ரெஸ்டாஸ்ரெறொன், ஸ்ரெறோயிட் போன்ற ஹோர்மோன்களும் வேறு பல புரதங்கள், மூலக்கூறுகள் போன்றவை தமக்கு இணையான ‘பூட்டுகளின்’ மூலம் வாசல்களை (pathways) உருவாக்கி உள்ளே நுழைகின்றன.

ACE-2 Receptors

நமது கொறோனா வைரஸும், தான் உள்ளே நுழைவதற்கு முயற்சிக்கும். ஆனால் சரியான பூட்டைக் கண்டுபிடிக்க வேண்டும். அதன் அதிர்ஷடம், எமது கலங்களில் ACE-2 (Angiotensin Converting Enzyme-2 (ACE-2)) என்ற ஒரு பூட்டை அது கண்டுபிடித்து அதைத் திறக்கும் வழியையும் அறிந்துவைத்திருக்கிறது. அது எப்படி என்பதை விளக்குவதானால் இக்கட்டுரை நீண்டுவிடும்.

ஒரு கலத்தின் சுவரில் அதிகம் ACE-2 receptors (பூட்டுகள்) காணப்பட்டு எல்லாப் பூட்டுகளையும் திறக்க ஒரே திறப்பு போதுமென்றால் திருடன் என்ன செய்வான்?

கோவிட்-2 (Sars 2 COVID-19) வைரஸ் தொற்றிய நோயாளிகளின் சுவாசப்பைகள், சிறுநீரகங்கள், உணவுப் பாதை போன்ற உறுப்புகளில் அளவுக்கதிகமாக ACE-2 receptors இருக்கின்றன என விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். ஏற்கெனவே ‘திறப்பை’ வைத்திருக்கும் COVID-19 வைரஸுக்கு இதைவிட அதிர்ஷ்டம் வேறென்ன வேண்டும்?

இதே வேளை, இன்னுமொரு விடயத்தையும் அவர்கள் ஆராய்ந்தார்கள். இப்படியான நோயாளிகளுக்கு முன்கூட்டியே வேறு ஏதாவது நோய்கள் இருந்தனவா என்பதே அவர்களுக்கு எழுந்த கேள்வியாக இருந்தது.

ACE Inhibitors

அவர்களில் பலருக்கு உயர் அழுத்தம் (high blood pressure), படபடப்பு (hyper tension), நீரிழிவு (diabetes) ஆகியன இருந்ததும் அதற்கு அவர்கள் ACE Inhibitors ரக மருத்துகளை எடுத்துக்கொண்டதாகவும் அறியப்பட்டது.

இரத்தக்குழய்கள் சுருக்கமடைவதன் மூலம் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. ACE Inhibitor / blocker / Renin Angiotensin System (RAS) வகையான மருந்துகள் இரத்தக்குழாய்களில் இறுக்கத்தைத் தவிர்த்து இலகுவாக விரிவடையச் செய்கின்றன. இதனால் இரத்த அழுத்தம் குறைக்கப்பட்டாலும், அதன் எதிர்விளைவாக இவ்விரத்தக்குழாய்கள், சுவாசப்பைச் சுவர்கள் ஆகியவற்றில் உள்ள கலங்களில் ACE-2 receptors இன் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

இப்படியாக ஏற்கெனவே ACE-2 receptors அதிகமாயுள்ள சுவாசப்பைகளின் உட் சுவர்களில் சார்ஸ்-கொவ்-2 தொற்று ஆரம்பித்து விரைவில் பரவிவிடுகிறது.

இது ஒரு அனுமானம் மட்டுமே. இரத்த அழுத்தம், நீரிழிவு, நெஞ்சு படபடப்பு, இருதய வியாதி போன்ற நோய்களுக்காக எடுக்கப்படும் மருந்துகளுக்கும் COVID-19 வைரஸ் தொற்றுக்கும் தொடர்புகள் இருக்கிறதா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் அறிகுறிகள் இருக்கும் நோயாளிகள் உடனடியாக அவரவரது மருத்துவர்களிடம் ஆலோசனைகளைப் பெறுவது நல்லது

Print Friendly, PDF & Email