கொறோனாவைரஸ் | இத்தாலியில் மரணங்கள் அதிகமாக இருப்பதற்கான காரணம் என்ன?
சீனாவுக்கு வெளியே இத்தாலியில்தான் அதிகம் பேர் கொறோனாவைரஸினால் மரணமாகியிருக்கிறார்கள். நேற்று வரைக்கும் (திங்கள்) 9172 உறுதிபடுத்தப்பட்ட நோயாளர்களும், 463 பேர் மரணித்தும் உள்ளார்கள். உலக சுகாதார நிறுவனம் பாவிக்கும் இறப்பு வீத அளவையின்படி இது 5% த்தில் இருக்கிறது. உலக சராசரி 3.4%. காரணம் என்ன?
சந்தேகிக்கப்படும் காரணங்களில் ஒன்று, வயது. ஐரோப்பாவிலேயே அதிக முதியோரைக் கொண்ட நாடு இத்தாலி. அங்கு 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 23%த்துக்கு மேல் இருக்கிறார்கள். அங்குள்ள மக்களின் சராசரி வயது 47.3, ஒப்பீட்டளவில் அமெரிக்காவில் 38.3 (நியூயோர்க் டைம்ஸ்). கோவிட்-19 வைரஸினால் இத்தாலியில் மரணமானோர்களில் பெரும்பாலோர் 80, 90 வயது முதியோர்கள்.
வயதுக்கு அடுத்தப்டியாகச் சந்தேகிக்கப்படும் காரணம், நோயெதிர்ப்புச் சக்தி (weaker immune system) குறைவாக இருப்பது.
உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை நிர்ப்பீடனம் என உயிரியலார் சொல்வார்கள். உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் அந்நிய உயிரிகள், கிருமிகள், பொருட்கள் எதுவாயிருந்தாலும் அவற்றிலிருந்து உடலைப் பாதுகாக்கும் தொழிலை இது செய்கிறது. இது சரியாகத் தொழிற்படும்போது, வைரஸ், பக்டீரியா, ஒட்டுண்ணிகள் (parasites) உள்ளிட்ட ‘எதிரிகளை’ விரைவாக இனங்கண்டு அவற்றை அழிக்கும் பணியைச் செய்கிறது.
புற்றுநோய், நீரிழிவு நோய்களைக் கொண்டவர்களிலும், முதியோர்களிலும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் அவர்களைக் கோவிட்-19 போன்ற வைரஸ்கள் இலகுவாகத் தாக்கக்கூடியாத இருக்கிறது என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
இன்னுமொரு காரணம், ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழும் மக்கள் சமூகமாக ஊடாடும்போது, அவர்களில் பலவீனமாவர்கள் அதிகமிருந்தால் அவர்களிடையே நோய்த்தொற்றுக்களும் மரணங்களும் அதிகரிக்க வாய்ப்புண்டு. அத்தோடு இவை சிறிய சமூகங்களாக இருக்கும்பட்சத்தில் அங்கு இருக்கக்கூடிய மருத்துவ வசதிகளும் இத் திடீர் அதிகரிப்பை நிர்வகிக்கக்கூடிய வசதிகளைக் கொண்டிருக்க மாட்டா. சீனாவில் வூஹான் நகரில் இப்படியான நிலைமையே இருந்தது (5.8% இறப்பு வீதம்) என சமீபத்திய அறிக்கையொன்று கூறுகிறது.
இத்தாலிய மக்களது கலாச்சாரப் பண்புகளில் ஒன்று குடும்ப உறவுகளும், சமூக ஒற்றுமையும். இத்தாலிய முதிய சமூகங்களிடையே சமூக ஊடாட்டம், இதர ஐரோப்பிய சமூகங்களை விட அதிகம். தேவாலயங்களுக்குத் தவறாமல் செல்வது, சந்தைகள், சமூகநிலையங்களில் முதியோர் ஒன்றுகூடுவது போன்ற அவர்களது கலாச்சாரப் பண்புகளும் திடீர் நோய்த்தொற்றுக்குக் காரணமாக இருக்கலாமென்ற சந்தேகமும் உள்ளது.
மார்ச் 7 வரைக்கும், இத்தாலியில் 42,000 பேர் நோய்த்தொற்றுக்காகப் பரிசோதிக்கப்பட்டுள்ளார்கள். மற்றய நாடுகளுடன் ஒப்பிடும்போது இது ஒரு கணிசமான தொகை. அப்பரிசோதனையின் பெறுபேறுகளின்படி இத்தாலியில் வந்திருக்கும் நோய்த்தொற்று மிகப் பாரதூரமானதும், அவசரமாகக் கையாளப்படவேண்டிய ஒன்றெனவும் அங்குள்ள மருத்துவ அதிகாரிகள் கருதுகிறார்கள்.
No related posts.