கொறோணாவைரஸுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி நாளடைவில் குறைந்துபோகிறதா?

அகத்தியன்

– இல்லை உடல் அதற்கான மாற்றுத் திட்டத்தை வைத்துள்ளது என்கிறது ஒரு ஆய்வு

கொறோணாவைரஸ் தொற்றியவர்களின் உடலிலும், கோவிட் தடுப்பூசி எடுத்தவர்களின் உடலிலும் முதலில் மேற்கொள்ளப்படும் தடுப்ப்பாற்றல் நடவடிக்கைகளின்போது உருவாகுவது பிரபொருளெதிரிகள் (antibodies). தற்போதய நடைமுறைகளின்படி இரண்டு தடுப்பூசிகளை எடுத்தவர்களை ‘முற்றான தடுப்பாற்றல் கொண்டவர்கள்’ (fully vaccinated) என அழைக்கிறார்கள். அதாவது இவர்களது உடல்களில் மீண்டும் நோய் தொற்றாதவாறு தடுப்பதற்குப் போதுமான பிறபொருளெதிரிகள் உள்ளன என மருத்துவ உலகம் தீர்மானிக்கிறது. ஒவ்வொரு தடுப்பூசி தயாரிப்பாளரும் இந்த ‘முற்றான தடுப்புத் திறனை’ (efficacy) 70% முதல் 95% வரை என அறிவிக்கிறார்கள். ஆனால் இந் நிலைமை எத்தனை நட்களுக்குத் தாக்குப் பிடிக்கும், எத்தனை நாட்களுககுப் பிறகு ஒருவர் அடுத்த ‘ஊக்கி தடுப்பூசியை’ ( booster shot) எடுக்கவேண்டும் என்பது பற்றிய தீர்க்கமான ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.

பென்சில்வேனியா பல்லலைக்கழக ஆராய்ச்சியாளர் இதற்கான மறுமொழியை உங்களுக்குத் தருகிறார்கள். “அஞ்சற்க! உங்கள் உடலுக்கு ஊக்கி தடுப்பூசி தேவையேயில்லை. ஏற்கெனெவே ஒருவரது உடலிலிருந்து தடுப்பாற்றல் குறைந்துகொண்டு வரும்போது உடல் அதை நிவர்த்தி செய்வதற்கான மாற்றுத் திட்டத்தை விருத்தி செய்துகொள்கிறது” என்கிறார்கள் அவர்கள்.

பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பெரெல்மான் ஸ்கூல் ஒஃப் மெடிசின் பிரிவைச் சேர்ந்த விஞ்ஞானிகளே நாம் அறிந்த mRNA தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தவர்கள். இத் தொழில்நுட்பத்தைப் பாவித்தே ஃபைசர்/பயோஎன்ரெக் மற்றும் மொடேர்ணா ஆகிய நிறுவனங்கள் தமது தடுப்பூசிகளைத் தயாரித்து வருகின்றன.

பெரெல்மான் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த வ்ஞ்ஞானிகள் சமீபத்தில் செய்த ஆராய்ச்சியின்போது, mRNA தடுப்பூசிகளை எடுத்த 61 பேரை, தடுப்பூசிகளை எடுத்ததிலிருந்து அடுத்த 6 மாதங்களுக்கு தொடர்ந்து பரிசோதித்து வந்தார்கள். அவர்கள் பெற்ற தரவுகளினபடி, தடுப்பூசி பெற்றவர்களின் உடல்களில் பிறபொருளெதிரிகள் படிப்படியாகக் குறைந்துகொண்டு வந்தன எனவும் ஆனால் உடலின தடுப்பாற்றல் (immune system) SARS-CoV-2 வைரஸை நனறாக ‘ஞாபகப் படுத்தி” வைத்துக் கொண்டது என்பதையும் அவர்கள் அவதானித்தார்கள். உடலின நிர்ப்பீடனக் கலங்களான B மற்றும் T கலங்களே இந்த ஞாபகசக்திக்குப் பொறுப்பான கலங்கள். எப்படி நாள் போகப்போக பிறபொருளெதிரிகள் குறைந்துகொண்டு போகின்றனவோ அதே போல நாள் போகப் போக இந்த ‘ஞாபகக் கலங்களின்’ எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு போனதை அவர்கள் அவதானித்தார்கள்.

இஞ் ஞாபகக் கலங்களில் B கலங்கள் எலும்பு மச்சையில் உற்பத்தியாகி இரத்தோட்டத்தில் கலந்துகொள்கின்றன. T கலங்கள் தைமஸ் சுரப்பியில் உற்பத்தியாகின்றன. இரத்தத்தில் இருக்கும் கிருமிகளை அழிப்பது B கலங்களின் தொழில் அதே வேளை தொற்றுக்குள்ளாகிய மனிதக் கலங்களை அழிக்கும் வேலையை T கலங்கள் செய்கின்றன. (கலங்களில் தொற்றிய கிருமிகள் தம்மைப் பெருக்கிக்கொள்வதற்கு முந்பாக அவற்றை அழைத்துவிடவேண்டும்). இரண்டும் வெவ்வேறு அவதாரங்களை அவ்வப்போது எடுப்பதன் மூலம் நோய்க்கிருமியை அடையாளம் காண்பதோடு அவற்றை அழிப்பதற்கான திட்டங்களை வகுத்துக் கொண்டு செயற்படுகின்றன. நோய்க் கிருமிகள் உடலில் உள்ளவரை இக்கலங்கள் அவற்றை அழித்து உடலைப் பாதுகாக்கின்றன. நோய்க் கிருமிகள் முற்றாக ஒழிக்கப்பட்ட பின்னர் அவை தமது நடவடிக்கைகளைச் சுருக்கிக் கொண்டாலும் மீண்டும் புதிதாக ஒரு கிருமியைக் கண்டால் உடனே தம்மைத் தேவையான அளவு எண்ணிக்கையில் பெருக்கிக்கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கி விடுகின்றன.

இஞ் ஞாபகக் கலங்களின் நடவடிக்கைகள் பற்றி ஏற்கெனவே அறியப்பட்டிருந்தாலும், SARS-CoV-2 வைரஸ் தொடர்பாக இவற்றின் நடவடிக்கைகளை இப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு ஆராய்ந்தது. அவர்களின அறிக்கை ஆகஸ்ட் 23 அன்று வெளிவந்துள்ளது. வேகமாகப் பரவும் டெல்ட்டா திரிபைக் கட்டுப்படுத்துவதில் கோவிட் தடுப்பூசிகள் எதிர்பார்த்த அளவு திருப்தியாகச் செயற்படவில்லை என்ற மருத்துவ சமூகத்தின் அங்கலாய்ப்பைக் கருத்தில் கொண்டு இவ்வாரய்ச்சியை விஞ்ஞானிகள் மேற்கொண்டிருந்தார்கள். இரண்டாவது தடுப்பூசி ஏற்றப்பட்டு 5 மாதங்கள் நிறைவடைவதனால் மூன்றாவது தடுப்பூசியை வழங்க வேண்டுமா என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட பலர் கேள்வியெழுப்பியிருந்தார்கள்.

மூன்றாவது ஊசி உடலில் சுற்றியோடும் பிறபொருளெதிகளை அதிகரிப்பதன் மூலம் SARS-CoV-2 வைரஸ்களை நீண்ட காலத்துக்குத் தடுக்குமென்பது உறுதிப்படுத்தப்ப்ட்ட ஒன்றாகினும், நீண்ட காலத்துக்கு அது தாக்குப் பிடிக்கப் போவதில்லை எனவும், உடலின் இயற்கையான தடுப்பாற்றலை விருத்தி செய்துகொள்வதே நல்லது எனவும் இவ்விஞ்ஞானிகள் குழுவில் ஒருவரான ஜோன் வெரி தெரிவித்தார்.

“பிறபொருளெதிரிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டு போகும்போது உள்ளார்ந்த நோய்த் தொற்று ( local infection) ஆரம்பிக்குமெனவும் குருதியில் சுற்றோடிக்கொண்டிருக்கும் B ஞாபகக் கலம் அதை உடனடியாக இனம்கண்டு, தகவல்களைப் பரிமாறி கொன்றொழிக்கும் புதிய பிறபொருளெதிரிகளைப் பெருந்தொகையாக, மிகவும் வேகமாக உற்பத்திசெய்துகொண்டு நோய்ப்பரவலைத் தடுத்துவிடுகின்றது” என அவர் மேலும் தெரிவித்தார்.

அதே வேளை, ஒப்பீட்டளவில் லேசாகத் தொற்று வந்த ஒருவரது உடலில் உருவாகிய பிறபொருளெதிகளை விட, ஃபைசர் / பயோஎன்ரெக் மற்றும் மொடேர்ணா தடுப்பூசிகளை எடுத்தவர்களின் உடலில் காணப்படும் பிறபொருளெதிரிகள், வைரஸின் அல்ஃபா, பீற்றா, டெல்ற்றா திரிபுகளிலிருந்து அதிகரித்த பாதுகாப்பை வழங்குகின்றன என்பதையும் இவ் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி உறுதிப்படுத்துகிறது.

அத்தோடு, தடுப்பூசிகளின் செயற்பாட்டால் உருவாக்கப்பட்ட T கலங்கள் தடுப்பூசியை எடுத்து 6 மாதங்களின் பின்னரும் செயற்பாட்டு நிலையில் இருந்தன என்பதையும் தாம் கண்டறிந்ததாக விஞ்ஞானி வெரி தெரிவித்தார். எனவே மிக மோசமான கோவிட் தொற்றிலிருந்தும், மருத்துவமனை சிகிச்சைகளிலுமிருந்தும் தடுப்பூசிகள் எம்மைப் பாதுகாக்கின்றன என்பதில் ஐயமே இல்லை என்பதை இவ்வாராய்ச்சி உறுதி செய்கிறது.

இவ்வாராய்ச்சியிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான விடயம் என்னவென்றால், சுற்றோட்டத்தில் இருக்கும் பிறபொருளெதிரிகள் ( circulating antibodies) நோய்த் தொற்றிலிருந்து உடலைப் பாதுக்கிறது அதே வேளை மூக்கு, தொணடைக் குழிகளில் மறைந்திருந்துவிட்டுத் தாமதித்து சுற்றோட்டத்துக்கு வரும் அல்லது சுவாசக்குழாய்களை அடையும் கிருமிகளை இனம் கண்டு ஒழிபக்கும் நடவடிக்கைகளை இந்த ஞாபகக் கலங்களே செய்கின்றன. இதனால் நோயின் தீவிரம் குறைவாக இருப்பதோடு மருத்துவமனை சேவைகளும் தேவைப்படுவதில்லை. மாறாக தடுப்பூசிகளை எடுக்காதவர்களால்தான் அதிகம் நோய்ப்பரவல் ஏற்படுகிறது என்கிறார் ஜோன் வெரி.

Print Friendly, PDF & Email