கொரோனாவைரஸ் பரிசோதனை: 45 நிமிடங்களில் முடிவு தெரியும்!
ஒருவருக்கு கோவிட் – 19 நோய்த்தொற்றுள்ளதா எனக் கண்டுபிடிப்பதற்குரிய பரிசோதனை முறையொன்றுக்கு அமெரிக்க உணவு, மருந்து நிர்வாகம் (Food and Drug Administration – FDA) அவசரகால அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறது. இதன் மூலம் ஒருவரின் மாதிரி (sample) கொடுக்கப்பட்டு 45 நிமிடங்களில் அவருக்கு கிருமித் தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டுபிடித்துவிடலாம்.
கலிபோர்ணியாவிலுள்ள Cepheid என்னும் நிறுவனத்தால் செய்யப்பட்ட இக் கருவி மார்ச் 30 க்கு முன்னர் அமெரிக்க பரிசோதனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுமெனக் கூறப்பட்டுள்ளது. ஆரம்பத்தில், இது மருத்துவ மனைகளில் அவசர சேவைகள் பிரிவிலும், அனுமதிக்காக்கக் காத்துக்கொண்டிருக்கும் நோயாளிகள் பிரிவிலும் (triage) பாவிக்கப்படுமெனத் தெரிகிறது.
“இந்தத் தொழில்நுட்பத்தை மருத்துவர்களின் அலுவலகங்களில் பாவிப்பது இப்போதைக்கு அனுமதிக்கப்படுமெனத் தான் நம்பவில்லை” என Cepheid நிறுவனத்தின் முதன்மை மருத்துவ அதிகாரி டேவிட் பேர்சிங் தெரிவித்தார்.
இதற்கு முதற் காரணம், Cepheid நிறுவனத்தின் உற்பத்தி வசதிகள் போதாமை. அடுத்துவரும் வாரங்களில் பல மில்லியன்கள் பரிசோதனைகளை இக் கருவிகளால் செய்யமுடியுமென பேர்சிங் தெரிவித்தார்.
ஆரம்பத்தில் நோய்க்கட்டுப்பாட்டு மையத்தால் (Centre for Disease Control) அனுப்பப்பட்ட பரிசோதனைக் கருவிகள் பழுதடைந்த காரணத்தினாலும், அத்தோடு, தனிப்பட்ட நிறுவனங்கள் இக் கருவிகளைத் தயாரிப்பதை அரசாங்கம் அனுமதிக்காமையினாலும், அமெரிக்காவில் நோய் வேகமாகப் பரவிவிட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தற்போது தனிப்பட்ட நிறுவனங்களின் தயாரிப்புகளை அரசாங்கம் அனுமதித்துள்ளது.
கடந்த சில வாரங்களில் பரிசோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதால், உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென்று அதிகரித்துள்ளது. இனறு (மார்ச் 21) வரை அமெரிக்காவில் 24,000 பேர் நோய்த் தொற்றுள்ளவர்களெனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (CNN)
No related posts.