கொரோனாவைரஸ் | தெரியவேண்டிய விடயங்கள்

எஸ்.ரகுராஜ் M.D.

எஸ்.ரகுராஜ், MD

கொரோனா வைரஸ் பீதி உலகம் முழுவதும் ஆட்டிப்படைக்கிறது. பயம் என்பது மனித இயல்பு, நியாயமானதும் கூட. அப் பயத்திலிருந்து விடுபடுவதற்கு ஒரே வழி அப் பயத்திற்குக் காரணமானதைப் பற்றியோ அல்லது காரணமானவரைப் பற்றியோ அறிந்துகொள்வதுதான். உலகத்தின் தற்போதய பயத்தின் காரணம் கொறோனாவைரஸ். அதைப்பற்றிக் கொஞ்சம்…

கொரோனா வைரஸ் என்றால் என்ன? (What is coronavirus?)

கொரோனா (corona) என்பது இலத்தீன் சொல். அதன் தமிழ் மொழிபெயர்ப்பு ‘முடி’ (crown) – அரச / அரசியர்க்கு சூட்டும் முடி. இம் முடியில் முட்கள் போல் இந்த வைரசின் வெளிப்பகுதியிலும் முட்கள் போன்று இருப்பதால் இதைக் கொறோனாவைரஸ் என அழைத்தார்கள். சூரியக் கதிர்கள் போல இருப்பதாலும் அது கொறோனா என அழைக்கப்படுகிறது எனவும் கூறுகிறார்கள். மருத்துவ சமூகம் அதை 2019-nCoV (2019 Novel CoronaVirus) எனவும் அழைக்கிறது. நிரந்தரமான ஒரு பெயர் சூட்டும் வரை இப் பெயரே வழங்கும்.

இதே போன்று வடிவமுள்ள வேறு பல வைரஸ்களும் ஏற்கெனவே வந்துள்ளன. 2002-2003 காலப்பகுதியில் உலகைக் கலக்கிய ‘சார்ஸ்’ (Severe Acute Respiratory Syndrome SARS) மற்றும் 2012 இல் அறியப்பட்ட ‘மேர்ஸ்’ (Middle East Respiratory Syndrome-MERS) ஆகிய வைரஸ்கள் கிட்டத்தட்ட ஒரே வகையின என்பதால் உலக சுகாதார நிறுவனம் இவை எல்லாவற்றையும் ஒரே குடும்பத்தவை என வகைப்படுத்தியிருக்கிறது.

அநேகமான வைரஸ்கள் விலங்குகளிலிருந்து மனிதருக்குத் தொற்றிக்கொண்டவை என ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். ‘சார்ஸ்’ வைரஸ் காட்டுப் பூனையிலிருந்தும், ‘மேர்ஸ்’ வைரஸ் ஒட்டகத்திலிருந்தும் தொற்றியனவெனவும், தற்போது அறியப்பட்ட இன்னும் பெயர் வைக்கப்படாத வைரஸ் வெளவாலிலிருந்து தொற்றியிருக்கலாமெனச் சந்தேகப்படுவதாகவும் தெரிகிறது. இதே போல இன்னும் பல கொறோனாவைரஸ்கள் பல விலங்குகளில் வாழ்ந்துகொண்டிருந்தாலும் அவை இன்னும் மனிதருக்குத் தொற்றிக்கொள்ளவில்லை.

2019-nCoV வைரஸ் முதன் முதலில் இந்த வருடம் ஜனவரி மாதம் 7ம் திகதி சீனாவில் மருத்துவ அதிகாரிகள் கண்டு பிடித்தார்கள். இதன் மரபணு அமைப்பை (genome sequence) ஆராய்ந்து பார்த்தபோது இது முன்னர் அறியப்படாத புத்தம் புதிய வைரஸ் ஆக இருந்தபடியால் அதை Novel (new) virus என அழைத்தார்கள்.

இவ்வைரஸ் சீனாவின் வூஹான் மாகாணத்திலுள்ள ஒரு விலங்குச் சந்தையில் இருந்து மனிதர்களுக்குத் தொற்றிக்கொண்டது எனக்கூறப்படுகிறது.

வைரஸ்களின் மரபணுக்களில் மாற்றங்கள் நிகழ்வதும் அவை மேலும் புதிய வகைகளை (strains) உருவாக்குவதும் வழமை. என்ன இருந்தாலும், இவ் வைரஸ்கள் மனிதரிலிருந்து மனிதருக்குத் தொற்றும் தகைமையைப் பெற்றுவிட்டனவா என்பதை இன்னும் விஞ்ஞானிகளால் உறுதி செய்ய முடியவில்லை.

வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் என்ன? (What are the symptoms?)

உலக சுகாதார நிறுவனத்தின்படி, காய்ச்சல், இருமல் (dry cough), மூச்சுத் திணறல், மூச்சிழுக்கச் சிரமப்படுதல் ஆகியன அறிகுறிகளாக இருக்கலாம். ஆனால் ஒருவருக்கு அறிகுறிகள் வெளியில் தெரிவதற்கு முன்னரே அவர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம். சிலரில் அறிகுறிகள் வெளித் தோற்றுவதற்கு இரண்டு வாரங்கள் வரை எடுக்கலாம்.

நோய் முற்றிய நிலையில் சுவாசப் பைகளில் நிமோனியா (சளி சுரம்) உருவாகிவிட்டால் சுவாசப்பைகளின் உள்ளே சிறு அறைகளில் (நுரை) காற்றுக்குப் பதிலாக நீர் தேங்கிவிட நேரிடுகிறது. இதனால் சுவாசப்பைகளினால் வழக்கமான அளவுக்கு காற்றை / ஒக்சிசனை வைத்துக்கொள்ளும் கொள்ளளவு குறைக்கப்படுகிறது. இதனால் உடலுக்குத் தேவையான உயிர்வாயு (ஒட்சிசன்) கிடைக்காமல் சிறுநீரகம் போன்ற அங்கங்கள் இறந்துபோக நேரிடுகிறது.

அதே வேளை உடலுக்குப் போதுமான உயிர்வாயு கிடைக்காமையால், உடலின் தேவையைப் பூர்த்திசெய்வதற்காக இருதயம் மிகவும் கடுமையாக உழைக்கமுற்பட்டு இறுதியில் இயலாமையால் நின்றுபோக நேரிடுகிறது.

இதையே மிகக் கடுமையானதும் சடுதியுமானதுமான சுவாச நோய் (Severe Acute Respiratory Syndrome -SARS) என அழைக்கிறோம். வேறு காரணங்களுக்காக நிமோனியா வரும்போதும், அது முற்றிய நிலையில், கிட்டத்தட்ட இதே நிலைமைதான். சுவாசப்பைகளுள் ‘தண்ணீர் (சளி) சேர்ந்துவிட்டது’ என்று மருத்துவர்கள் சொல்வது இதைத்தான். இச் சளியை வெளியே தள்ளிவிட உடல் எடுக்கும் முயற்சிதான் இருமல்.

இவ் வைரஸ் எந்தளவு தூரத்துக்கு உயிராபத்தை விளைவிக்கக் கூடியது? (How deadly is it?)

2019-nCoV வைரஸ் முந்திய ‘சார்ஸ்’, போன்ற அளவுக்குக் கொடியது அல்ல என விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். ‘சார்ஸ்’ காலத்தில் 800 பேரளவில் மரணமடைந்திருந்தார்கள். அதுவும் சீனாலிருந்துதான் புறப்பட்டது. ‘மேர்ஸ்’ அதிகம் பரவவில்லை எனினும் அது ‘சார்ஸ்’ ஐ விடக் கொடியதாயிருந்தது. நோய் தொற்றியவர்களில் அரைவாசிப்பேர் மரணமானார்கள்.

இவ் வைரஸ் ஒரு குறிப்பிட்ட இனத்தவரை மட்டுமே தாக்குகிறதா? (Does this virus attack only specific race?)

இவ் வைரஸ் சீனாவில் ஆரம்பித்திருந்தாலும் (ஹூபே மாகாணம்), அங்கு பலர் மரணமடைந்திருந்தாலும் அது எங்கும், அவரையும் தாக்கலாம். ஏற்கெனவே பல காரணங்களுக்காக நோயெதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களைத் தான் தாக்குகிறது. சீனாவில் இறந்தவர்களில் பெரும்பாலானோர் இந்த வகையினர். நேற்று சீனாவுக்கு வெளியே, பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒருவர் இன் நோயினால் மரணமடைந்திருக்கிறார்.

இப் பரவலைத் தடுக்க எப்படியான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன? (What is being done to stop its spread?)

இந் நோய் ஆசியா, ஐரோப்பா, அமெரிக்காவென்று பல கண்டங்களுக்கும் பரவியிருக்கிறது. மக்களின் நடமாட்டங்களைக் கட்டுப்படுத்துவது முதல் பல சுகாதாரத் தடுப்புமுறைகளை நடைமுறைப்படுத்துவதுவரை பல வழிகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பக்டீரியா தொற்றுக்கு ‘அண்டிபயோட்டிக்’ கொடுப்பதுபோல் வைரஸ் தொற்றுக்கு மருந்து ஏதுமில்லை. உடல் தானாக எதிர்ப்பு சக்தியை உருவாக்கி வைரஸ்களைக் கட்டுப்படுத்தும்வரை படுக்கையில் ஓய்வெடுத்துக்கொள்வதும், நிமோனியா கண்டிருந்தால் செயற்கை சுவாசக் கருவிகளைப் பாவித்து உடலுக்குப் போதுமான உயிர்வாயு கிடைக்க வழிசெய்வதும் முக்கியமானது.

உலக சுகாதார நிறுவனம் இவ் வைரஸ் தொற்றை ஒரு உலக அவசரகாலச் சம்பவமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர், 2009 இல் பன்றிக் காய்ச்சல், 2014 இல் இளம்பிள்ளை வாதம், 2014 இல் இபோலா, 2016 இல் சீக்கா, 2019 இல், மறுபடியும், இபோலா எனப் பலதடவைகள் அவசரகால பிரகடனங்களை இந் நிறுவனம் செய்திருக்கிறது.

Print Friendly, PDF & Email