கோவிட்-19 வியாதிக்குப் பொறுப்பான SARS-CoV-2 சீனத் தயாரிப்பல்ல

உலகில் பீதியைக் கிளப்பிவரும் கோவிட்-19 வியாதிக்குப் பொறுப்பான SARS-CoV-2 சீனத் தயாரிப்பல்ல எனக் கூறுகிறது ஒரு ஆய்வுக்குழு.

SARS-CoV-2, வூஹான் ஆய்வுகூடத்தில் தயாரிக்கப்பட்டதென்றும் அது அங்கிருந்து தப்பியோடி மனிதரில் தாவியிருந்ததென்றும் வதந்தியொன்று அந்த வைரசைவிட வேகமாகப் பரவி வருகிறது.

அவ்வதந்தியில் உண்மையில்லை என ஒரு ஆய்வுக்குழு நிறுவியிருப்பதாக ‘இயற்கை வைத்தியம்’ (Nature Medicine) என்னும் ஆங்கில சஞ்சிகை தனது மார்ச் 17 இதழில் வெளிவந்த கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறது.

இவ்வாய்வின்போது விஞ்ஞானிகள் தற்போதைய SARS-CoV-2 வைரஸின் மரபணுக் குறியீட்டை (genome), இதுவரை அறியப்பட்ட ஆறு கொறோனாவைரஸ்களின் மரபணுக்களுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தனர். அவை SARS, MERS, HKU1, NL63, OC43,229E ஆகும். இவற்றில், ஒப்பீட்டளவில் SARS, MERS இரண்டும் SARS-CoV-2 ஐப் போலவே மிகவும் ஆபத்தானவை.

இக் குழுவில் ஒருவரான கிறிஸ்டியன் ஆண்டெர்சென், ஸ்கிறிப்ஸ் றிசேர்ச் (Scripps Research) என்னும் நிறுவனத்தில் நிர்ப்பீடனம் மற்றும் நுண்ணுயிரியல் (immunology and microbiology) துறையில் உதவிப் பேராசிரியராக உள்ளார். இவரும் இவரது துணை விஞ்ஞானிகளும் இந்த வைரஸின் கோதிலிருக்கும் முட்களின் கட்டமைப்பை ஆராய்ந்தனர்.

கொறோனாவைரஸின் மேற்பரப்பில் காணப்படும் இம் முட்கள் மனிதக் கலங்களின் சுவர்களில் கொழுவிக்கொள்வதற்கு ஏற்ற வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளன. அக்கலங்களை வெற்றிகரமாகப் பற்றிக்கொண்டதும் கலங்களுக்குள் இவ்வைரஸ்கள் நுழைகின்றன.

புரதங்களால் ஆக்கப்பட்ட இம் முட்களின் இரண்டு முக்கிய அம்சங்களின் மரபணு வரிசையை (gene sequence) இவ் விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். அவற்றில் ஒன்று: the grabber எனப்படும் receptor-binding domain. இதுதான் மனித கலங்களைப் பற்றிப் பிடிக்கும் ‘உறுப்பு’. மற்றது: cleavage site. இதன் மூலம் வைரஸ் மனிதக்கலங்களின் சுவர்களைப் பிளந்துகொண்டு உள்ளே நுழைகிறது.

இவ்வாய்வின் மூலம் அவர்கள் கண்டுபிடித்தது: மனிதக் கலங்களின் சுவர்களின் வெளிப்பகுதியில் காணப்படும் ACE2 எனப்படும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் பங்கெடுக்கும், receptor ஐ இலக்கு வைத்து இவ் வைரஸின் முட்களில் விசேடமான கொழுக்கிகள் உருவாக்கப்பட்டிருந்தமை. இந்தக் கொழுக்கி மிக விசேடமாக, ஒரு குறிப்பிட்ட தேவைக்காக உருவாக்கப்பட்ட கருவி. இதை வைரஸ் தான் இசைவாக்கமடைவதன் மூலம் உருவாக்கியதா அல்லது மனிதர்களால் ஆய்வுகூடத்தில் வேண்டுமென்றே மாற்றப்பட்ட (genetic engineering) அம்சமா என்பதே விஞ்ஞானிகளுக்குள் எழுந்த கேள்வி.

SARS-CoV-2 வைரஸ் உருவ அமைப்பைப் பொறுத்த வரையில் 20 வருடங்களுக்கு முன்னர் தாக்கிய SARS வைரஸை ஒத்திருந்த படியால், விஞ்ஞானிகள் அதன் உடலமைப்பையும் அதன் மரபணு வரிசையையும் ஆராய்ந்தனர். Genetic engineering நடைமுறையப் பாவித்து மரபணு வரிசையில் மாற்றங்களைச் செய்து SARS வைரஸின் உடலமைப்பை SARS-CoV-2 ஆக மாற்றி அதில் விசேட ‘கொழுக்கி’ களையும் உருவாக்கிப் பார்த்தனர். ஆனாலும் உண்மையான SARS-CoV-2 வைரஸ், கலங்களை இறுகப் பற்றிக்கொள்வதுபோல், இவர்களால் உருவாக்கிய SARS-CoV-2 வினால் முடியவில்லை. எனவே SARS-CoV-2 வைரஸ் மனிதக் கலங்களையைத் தாக்கும் விதத்தில் இயற்கையாக இசைவாக்கமடைந்திருக்க முடியுமே தவிர genetic engineering முறையினால் செயற்கையாக மாற்றப்பட்டிருக்க முடியாது என்னும் தீர்மானத்திற்கு வந்தனர். இயற்கை மனிதர்களைவிட விவேகமானது என அவர்கள் ஒத்துக்கொண்டனர்.

Related:  கொறோனாவைரஸ் | கனடாவின் முதல் வைரஸ் மரணம் பிரிட்டிஷ் மொலம்பியா மாகாணத்தில்!

இவ் வைரஸ் ஆய்வுகூடத்திலிருந்து தப்பியோடவில்லை என்பதற்கு இன்னுமொரு ஆதாரத்தையும் இவ்வாய்வின்போது அவர்கள் கண்டுபிடித்தார்கள்.

SARS-CoV-2 வைரசின் மூலக்கூறுகளினாலான கட்டமைப்பு, ஏற்கெனவே அறியப்பட்ட மிகுதி 8 கொறோனா வகை வைரஸ்களுடன் ஒத்துப்போவதை விட, வெளவால்களிலும், எறும்புண்ணி விலங்குகளிலும் (pangolins) காணப்பட்ட வைரஸ்களுடன் மிகவும் ஒத்துப்போவதை அவர்கள் கண்டறிந்தார்கள். இவ்விலங்குகளினால் முன்னர் எப்போதும் மனிதர் பாதிக்கப்படாமையால் அவ்விலங்குகளில் காணப்படும் வைரஸ்களைப் பற்றி எவரும் ஆராய்ந்திருக்கவில்லை.

“வேண்டுமென்றே ஒருவர் மனிதரைத் தாக்கும் நோய்க்கிருமியொன்றை ஆய்வுகூடத்தில் உருவாக்க விரும்பினால், அவர் ஏற்கெனவே மனிதரைப் பாதிக்கும் ஒரு கிருமியைத்தான் genetic engineering மூலம் மாற்ற எத்தனிப்பார்” என்கிறார்கள் ஸ்கிறிப்ஸ் விஞ்ஞானிகள்.

அப்போ, இந்த SARS-CoV-2 வைரஸ் எங்கிருந்து வந்தது? ஸ்கிறிப்ஸ் விஞ்ஞானிகள் இரண்டு சாத்தியங்களைக் கூறுகிறார்கள்.

ஒன்று: இதுவரை மனிதகுலத்தைப் புரட்டிப் போட்டுவரும் இதர வைரஸ்களைப் போலவே SARS-CoV-2 வைரஸும் ஒரு விலங்கிலிருந்து மனிதருக்குத் தாவியிருக்க வேண்டும். SARS (2002-2003) புனுகுப் பூனையிலிருந்தும் (புனுகு ஒரு வாசனைத் திரவியம், சீன, ஆயுர்வேத வைத்தியர்களால் பாவிக்கப்படுகிறது), MERS ஒட்டகத்திலிருந்தும் மனிதருக்குத் தாவின என்பது நிரூபிக்கப்பட்டதொன்று.

SARS-CoV-2 ஐப் பொறுத்த வரையில், அதன் மூலம் வெளவால் எனவும் அதிலிருந்து எறும்புண்ணிக்குத் தாவிப் பின்னர் மனிதரில் தாவியிருக்கவேண்டுமெனவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆனால் அவர்களுக்கு இருக்கும் கேள்வியென்னவென்றால், இவ் வைரஸ் தனது தாக்கு திறனை (கொலைவெறியை ?) விலங்கினுள் இருக்கும்போது பெற்றதா அல்லது மனிதருக்குள் தாவியபின்னர் மேலும் இசவாக்கமடைந்து கொண்டதா என்பதே.

ஏற்கெனவே குறிப்பிட்டபடி, SARS-CoV-2 வைரஸின் இரண்டு முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றான ‘கொழுக்கி’ , எறும்புண்ணியில் காணப்பட்ட வைரஸிலும் காணப்படுகிறது. ஆனால், மனித கலங்களைத் துளையிடப் பாவிக்கும் கருவி (அம்சம்) அவ் வைரஸ்களில் இல்லை. எனவே எறும்புண்ணியிலிருந்து மனிதருக்குத் தாவிய பின்னரே இவ் வைரஸ் தன் தேவையையும், இலக்கையும் வைத்து இசைவாக்கமடைந்துள்ளதா என்பதே விஞ்ஞானிகளைத் துளைத்துவரும் கேள்வி. இது உண்மையாகும் பட்சத்தில், அதி விவேகமான இக் கொறோனா வைரஸ் தொடர்ந்தும் இசைவாக்கமடைவதன் மூலம் மனிதகுலத்தின் பேரழிவுக்குக் காரணமாக அமையவும் கூடும்.

இதுவரை கிடைத்த தகவல்களை வைத்துக்கொண்டு விஞ்ஞானிகள் இக் கொள்ளைநோயின் எதிர்காலத்தைத் திட்டமிடலாம். இந்த வைரஸ் முழுமையான நோய்க்கிருமியாகவே (pathogenic form) மனித உடலில் புகுந்திருப்பின், இனி வருங்காலங்களிலும் மேலு மேலும் நோய்த் தொற்றுக்கள் உண்டாக வாய்ப்புண்டு. இவ் வைரஸ்கள் விலங்குகளின் உடல்களில் தொடர்ந்தும் வாழ்ந்துகொண்டிருப்பின் அவை எப்போதும் மனிதர்மேல் தாவலாம். மனிதரில் தாவிய பின்னர் அவ்வைரஸ்கள் இசைவாக்கமடைந்து நோய்க்கிருமிகளாக (pathogenic) மாறுமானால், அதற்கு முன்னதாகவே எங்கள் உடலின் இசைவாக்கம் நோயெதிர்ப்பு ஆற்றலை உருவாக்கி அவற்றை அழிப்பதற்கு அவகாசம் கிடைக்கலாம் என்கிறர்கள் விஞ்ஞானிகள்.

Print Friendly, PDF & Email