கொரோனாவைரஸைத் துரத்த கோமூத்திரமருந்தும் அகில இந்திய இந்துமகாசபையினர்

புது டெல்ஹி-மார்ச் 14, 2020

கொரோனாவைரஸ் நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்க, பசுவின் சிறுநீரை அருந்தும் வைபவமொன்று, இன்று சனிக்கிழமை, அகில இந்திய இந்துமகா சபையினரால் இந்தியாவில் கொண்டாடப்பட்டுள்ளது.

இந்தியாவின் தலைநகரான புது டெல்ஹியில் இருக்கும் அகில இந்திய இந்துமகாசபையின் தலைமைச் செயலகத்தில் இக் கொண்டாட்டம் நடத்தப்பட்டுள்ளது. சுமார் 200 பேர் கலந்துகொண்ட இக் கொண்டாட்டத்தை நாடு தழுவிய ரீதியில் நடத்துவதற்கு மகாசபையினர் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

“கடந்த 21 வருடங்களாக நாம் கோமூத்திரத்தைக் குடித்தும், அதில் குளித்தும் வருகிறோம். ஆங்கில மருந்துகளைக் குடிக்கவேண்டிய தேவை எஅம்க்கு ஒருபோதும் ஏற்பட்டதில்லை” என இக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட ஓம் பிரகாஷ் தெரிவித்தார்.

அகில இந்திய இந்து அமைப்பின் தலைவரான சக்ரபாணி மஹராஜ், கொறோனாவைரஸ் போன்றதொரு கேலிச் சித்திரத்தின் ‘வாயில்’ கரண்டியொன்றின் மூலம் பசு மூத்திரத்தைப் பருக்குவதாகப் பாசாங்கு செய்வதாகப் படம் பிடித்து வைபவம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

பசு மூத்திரம் ஒரு மருந்தெனவும், அது புற்றுநோய் போன்ற நோய்களைக் குணமாக்கிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடியின் பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறார்கள்.

பசு மூத்திரம் மற்றும் பசுச் சாணம் மூலம் கொரோணாவைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்கொள்ள முடியுமென, சட்டசபை அமர்வொன்றின்போது அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள பா.ஜ.க. தலைவரொருவர் சமீபத்தில் கூறியிருந்தார்.

நோய்களைக் குணமாக்கும் எந்தவித குணாம்சங்களும் பசு மூத்திரத்துக்கு இல்லை என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கொரோனாவைரஸ், உலகம் முழுவதும் 140,000 பேரைப் பாதித்தும், 5000 பேரின் மரணத்துக்குக் காரணமாகவும் உள்ளது. அதைக் குணமாக்கத்தக்க மருந்து எதவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை (ராய்ட்டர்ஸ்)

Print Friendly, PDF & Email