கையெழுத்தே உங்கள் ‘தலையெழுத்து’

கணனியில் தட்டச்சு செய்து உங்கள் ஆக்கங்களைப் பதிவு செய்வதை விட அவற்றை உங்கள் கைகளினால் எழுதும்போது உங்கள் மூளை திறம்பட வேலை செய்வதுடன் கற்றலும் அதிகரிக்கிறது என்கிறது ஒரு ஆய்வு.

ஒரு காகிதத்தில் பேனாவால் எழுதும்போதோ அல்லது ஒரு கணனித் திரையில் கைகளினாலோ அல்லது மின்பேனாக்களினாலோ எழுதும்போது ஞாபகக் கலங்கள் உட்பட மூளையின் பெரும்பாலான பகுதிகள் செயற்படவாரம்பிக்கின்றன. 36 மாணவர்கள் கொண்ட குழுவொன்றுக்கு தட்டச்சு மற்றும் பேனாவால் எழுதும் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு அவர்களது மூளையின் செயற்பாடுகள் அவதானிக்கப்பட்டது. இதன் பெறுபேறுகளாக, பேனாவால் எழுதும்போது மூளையின் கற்றலுக்கான கலங்களும் ஞாபகக் கலங்களும் அதிக செயற்பாட்டுக்குள்ளாகியிருந்தன. ஒப்பீட்டளவில் தட்டச்சு செய்யும்போது இக்கலங்கள் அதிக செயற்பாட்டுக்குள்ளாகவில்லை.

தட்டச்சு செய்தவர்கள் பின்னர் கையெழுத்துக்கு மாற்றப்பட்டபோது அவர்களது எழுத்துக்கூட்டல் மூலம் சொற்களையும் வாக்கியங்களையும் உருவாக்கும் திறனும் ஞாபகத் திறனும் அதிகரித்திருந்தமை அவதானிக்கப்பட்டது.

மூளையின் பல பகுதிகளிடையே ஏற்படும் மின்னிணைப்புகள் மூலமே நரம்புக்கலங்கள் தமக்கென ஒதுக்கப்பட்ட செயற்பாடுகளைச் செய்கின்றன. ஆனால் இந்நரம்புக்கலங்களிடையே எதோ காரணங்களுக்காக மின்னிணைப்புகள் ஏற்படாவிட்டால் அக்குறிப்பிட்ட செயற்பாடோ அல்லது அது சம்பந்தமான ஞாபகப் பதிவையோ இக்கலங்கள் ஞாபகத்தில் வைத்திருக்க மாட்டா. இன்னுமொரு தடவை இம்மின்னிணைப்புகள் வெற்றிகரமாக நடைபெறும் பட்சத்தில் இந்நரம்புக் கலங்கள் அவற்றை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும். இம்மின்னிணைப்புகள் வெற்றிகரமாக நிகழ நரம்புக் கலங்கள் மட்டுமல்ல இதர உடலும் ஆரோக்கியமா இருக்கவேண்டும். இரத்தோட்டம் தடைப்பட்டு இந்நரம்புக் கலங்கள் இறந்துபோக நேரின் இக்கலங்களினால் வழங்கப்பட்டுவந்த செயற்பாடுகள் முற்றாக நின்றுவிடும்.

இந்நரம்புக் கலங்களிடையே ஏற்படும் மின்னிணைப்புகளின் பலத்தை அறிய EEG எனப்படும் பதிவு முறையொன்று பாவிக்கப்படுகிறது. 256 சிறிய உணரிகளால் (sensors) உருவாக்கப்பட்ட ஒரு வலையொன்றைத் தலையின் பேல் போர்த்தி மூளையின் நரம்புக்கலங்களிடையேயான மின்னிணைப்புகளை விஞ்ஞானிகள் அவதானிப்பதன் மூலம் இப்படியான பல பரிசோதனைகளை அவர்கள் செய்கிறார்கள். இதற்கு முன்னர் மூளையின் சில பிரதேசங்களுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை வைத்து அங்கு செயற்பாடுகள் அதிகம் நிகழ்வதனால்தான் அங்கு அதிகம் ஒக்சிசன் தேவைப்பட்டது என்ற ஊகத்தில் குறிப்பிட்ட நரம்புக்கலங்களின் செயற்பாடுகளை அவதானித்தனர். இதற்கு அவர்கள் FMRI எனப்படும் காந்த அதிர்வலை அவதானிப்பு கருவிகளைப் பயன்படுத்தினர். மாறாக EEG கருவி மின்னிணைப்பு தொழிற்பாட்டைத் துல்லியமாக அவதானிக்கிறது. FMRI பயன்பாட்டின்போது பரிசோதனைக்குட்படுபவர் இப்பெரிய இயந்திரத்தினூடு செலுத்தப்படவேண்டும். EEG கருவி மேசையில் இருக்கும்போதே தலையில் பொருத்தப்படலாம்.

மேற்குறிப்பிட்ட கையெழுத்துப் பரிசோதனையின்போது கையின் துல்லியமான அசைவையும் அப்போது மூளையின் நரம்புக்கலங்களின் செயற்பாடுகளும் பதிவுசெய்யப்பட்டன. அப்போது ஒவ்வொரு எழுத்தையும் தனித்தனியாக எழுதும்போது அதற்கேற்றாற்போல் மூளையின் பல பாகங்கள் செயற்பாட்டுக்குள்ளாகின. ஆனால் அதே எழுத்தை விசைப்பலகையின் ஒரு பொத்தானை அழுத்துவதல் பெறும்போது மூளையின் செயற்பாடு மிகவும் குறுகியதாகவே இருந்தது என இவ்வாரய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானி வான் டெ மியர் தெரிவித்தார்.

இவ்வாரய்ச்சியின் பெறுபேறாக அமெரிக்காவின் பல மாநிலங்களிலுள்ள பாடசாலைகளில் மாணவர்களுக்கு சில மணிநேர கையெழுத்துப் பயிற்சி வகுப்புகள் இவ்வருட முதல் ஆரம்பமாகவுள்ளன.

‘சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்’ என்ற தமிழ்ப் பழமொழியின் யதார்த்தத்தை நிரூபிக்க இத்தன அண்டுகள் பிடித்திருக்கிறது. (Pic Credit: Neuroscience News)

Print Friendly, PDF & Email