குடல் பக்டீரியா புற்றுநோயைத் தடுக்கும் – ஆய்வு
குடலில் வளரும் பக்டீரியாக்கள் சுரக்கும் கழிவுகளால் உடலின் நிர்ப்பீடன ஆற்றல் தூண்டப்பட்டு குடலில் ஏற்படக்கூடிய புற்றுநோய்க் கலங்களை அழிக்கிறது என அல்பேர்ட்டா பல்கலைக்கழக ஆய்வொன்று கூறுகிறது.
பக்டீரியாக்கள் வெளிவிடும் கழிவுகள் புற்றுநோய்க் கலங்களின் வெளிச்சுவர்களில் காணப்படும் மூலக்கூறுகளைத் தூண்டிவிடுவதால் அவ்விடத்தை நோக்கி T-Cells எனப்படும் உடலின் நிர்ப்பீடனக் கலங்கள் விரைந்து சென்று புற்றுநோய்க் கலங்களைத் தாக்கி அழிக்கின்றன என்றும் அது மட்டுமலாது இக் கழிவுகள் புற்றுநோய்க் கலங்களின் கருவுக்குள் (nucleus) சென்று அங்குள்ள DNA மரபணுக்களில் மாற்றங்களைச் செய்வதனால் நிர்ப்பீடனக் கலங்கள் அங்கும் சென்று புற்றுநோய்க் கலங்களை முற்றாக அழித்துவிடுகின்றன என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
“பக்டீரியாக்களின் கழிவுகள் புற்றுநோய்க் கலங்களின் சுவர்களில் சில குறிக்கப்பட்ட மூலக்கூறுகளை மாற்றி அவற்றை அடையாளம் காட்டிகளாக ஆக்கிவிடுவதால் T-cells அவற்றை இலகுவாகக் கண்டுபிடித்து தாக்கியழித்துவிடுகின்றன” என இவ்வாய்வில் ஈடுபட்ட பேராசிரியர் கிறிஸ்டி பேக்கர் தெரிவித்துள்ளார்.
பெருங்குடல்-குதம் ஆகிய குடற்பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய் ஆண்களைக் கொல்லும் இரண்டாவது வகையான புற்றுநோயாகும். பெண்களில் இந்நோய் மூன்றாவது பட்டியலில் இருக்கிறது. 2022 இல் மட்டும் இந்நோயால் 9,400 கனடியர்கள் மரணமடைந்திருப்பதாக கனடிய புற்றுநோய்க் கழகம் தெரிவிக்கிறது.
“நார்ச்சத்தை (fibre) அதிகம் கொண்ட உணவுகள் புற்றுநோயைத் தடுக்கின்றன என நாங்கள் அறிந்திருக்கிறோம் ஆனால் அது எப்படி நிகழ்கிறது என்பதற்கான காரணத்தை நாம் இப்போதுதான் கண்டறிந்திருக்கிறோம்” என பேராசிரியர் பேக்கர் தெரிவிதுள்ளார்.
நார்ச்சத்துள்ள உனவை பக்டீரியாக்கள் உண்ணும்போது பெருந்தொகையான கழிவுகளை அவை விட்டுச் செல்கின்றன. எலிகளிலும், மனிதர்களிலும் இருந்து எடுக்கப்பட்ட புற்றுநோய்க் கலங்களை இக் கழிவுகளுடன் சேர்த்து ஆய்வுகூடத்தில் பரிசோதித்தபோது புற்றுநோய்க் கலங்கள் அழிக்கப்படுவதை விஞ்ஞானிகள் கண்டு உறுதி செய்துள்ளனர். இப்பரிசோதனைகளைத் திரும்பத் திரும்பச் செய்து முடிவுகளை அவர்கள் உறுதி செய்துள்ளனர்.
“ஒரு நோயாளியின் குடலில் போதுமான அளவு பக்டீரியா இல்லையெனில் அவர்களுக்கு பக்டீரியா குளிசைகளைக் கொடுத்து அவர்களின் நிர்ப்பீடன ஆற்றலைக் கூட்டிக் கொள்ளமுடியும் எனவும் தனியே நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவதால் மட்டும் இவ்வாற்றலைக் கூட்டிக்கொண்டுவிட முடியாது” என அவர் தெரிவித்தார்.
தேவைக்கதிகமான அண்டிபயோட்டிக் பாவனை போன்றவற்றால் சில நட்புள்ள பக்டீரியாக்களும் கொன்றொழிக்கப்படுகின்றன. இதனால் probiotic போன்ற பக்டீரியாக்களை மீள்வளர்ப்புச் செய்யும் வழிமுறைகளை நாம் செய்வதும் அவசியம். (Credit: Unsplash/CC0 Public Domain)