கியூபெக் முதியோர் இல்லத்தில் 31 பேர் மரணம்!
கனடாவின் பிரஞ்சு மாகாணமான கியூபெக்கிலுள்ள முதியோர் இல்லமொன்றில் கடந்த ஒரு மாதத்தில் 31 பேர் இறந்துள்ளதாகத் தெரியவருகிறது.
மொன்றியலுக்கு வெளியேயுள்ள டோர்வால் என்னும் நகரிலுள்ள CHSLD Herron என்னும் பெயரில் இயங்கும் முதியோரில்லமொன்றில் இச் சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இது குறித்து, மொன்றியல் காவற்துறை மற்றும் மரண விசாரணை அதிகாரி அலுவலகம் ஆகியன விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
கியூபெக் மாகாண அரசின் சுகாதார அமைச்சு இம் முதியோரில்லத்தைப் பொறுப்பேற்று அறக்கட்டளை ஒன்றின்கீழ் நிர்வகித்து வருகிறது.
மார்ச் மாதத்தின் இறுதி பகுதியில் அமைச்சின் சுகாதார பரிசோதகர்கள் இவ் வில்லத்தைப் பரிசோதிக்க வந்திருந்தபோது அங்கு வேலை செய்த பெரும்பாலான பணியாட்கள் வேலைக்குச் சமூகமளித்திருக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வில்லத்தில் 150 முதியோர் வரை பராமரிக்கப்பட்டு வந்துள்ளனர். தாங்கள் பரிசோதித்தபோது இல்லம் மிகவும் மோசமான நிலையில் இருந்ததெனவும், அங்கு பராமரிக்கப்பட்டு வந்த முதியோர் பற்றிய தகவல்களைக் கொடுக்க உரிமையாளர் மறுத்த காரணத்தினால், நீதிமன்றத்தின் கட்டளையுடன் கடந்த புதனன்று முதியோர் மீதான தகவற் கோப்புகளைத் தாம் கையேற்க்க முடிந்ததென அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன் பிரகாரம் குறைந்தது 5 மரணங்களாவது கோவிட-19 நோயினால் ஏற்பட்டிருக்கலாம் என அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
“மிக மோசமான புறக்கணிப்பு இங்கு நடைபெற்றிருக்கிறது’ என மாகாண முதலமைச்சர் பிரான்ஸுவா லெகோ தெரிவித்துள்ளார்.
கியூபெக்கின், கட்டினோ நகரைத் தளமாகக் கொண்ட கட்டாசா குரூப் அண்ட் டெவெலப்மென்ட் என்ற நிறுவனம் இம்முதியோர் இல்லத்தின் உரிமையாளர் எனவும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களாக சாமிர் ஷோவிரியம் அவரது மூன்று மகள்களின் பெயர்களும் பதியப்பட்டுள்ளன. கியூபெக் மாகாணத்தில் பல முதியோர் இல்லங்களை இந்த நிறுவனம் நிர்வகித்து வருகிறது.
இங்கு பராமரிக்கப்பட்ட முதியோர் மிகவும் மோசமாக உதாசீனம் செய்யப்பட்ட நிலையில் இருந்தார்கள் என அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
“எனது தந்தையார் இம் முதியோரில்லத்தில் கடந்த மூன்று வருடங்களாகத் தங்கியிருந்தார். கடந்த இரண்டு வாரங்களாக அவருக்கு தண்ணீர் கூட வழங்கப்படவில்லை. மிகுந்த அசுத்தமான நிலையில் அவர் வைக்கப்பட்டிருந்தார். சனியன்று அவர் இறந்து போனார்” என்கிறார் ட்ரெல் வைட்ஹெட். கடந்த வார இறுதியில்தான் அவருக்கு கோவிட-19 நோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு ஒரு வாரத்துக்கு குடும்பத்தினரால் முதியோரில்லத்துக்குப் போக முடியவில்லை. சனி காலையன்று வந்த தொலைபேசியழைப்பின் மூலம் தந்தையாரின் இறப்பு அறிவிக்கப்பட்டிருந்தது என்கிறார் வைட்ஹெட்.
தனது தந்தையார் பார்க்கின்சன் வியாதியால் பீடிக்கப்பட்டிருந்தார் எனவும், அவரால் முறையாக உரையாட முடியாதிருந்தது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மொன்றியல் காவற்துறை இதை ஒரு குற்றச் சம்பவமாக எடுத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
No related posts.