காது, மூக்கு குத்துவதற்கான மருத்துவ காரணங்கள்

தமிழர் காதணிகளை அணிவது பண்டைக் காலம் தொடக்கம் இருந்துவரும் பழக்கம். அதே போன்று தென்னமெரிக்கா, ஆபிரிக்கா, பொலினேசியா, அவுஸ்திரேலியா, நியூசீலந்து, மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த் பூர்வ குடிகளும் பல்வேறு மூலங்களில், பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்ட அணிகளை உடலின் பல்வேறு உறுப்புகளிலும் அணிவது வழக்கமாக இருந்தது. சிலர் தத்தம் கலாச்சார நம்பிக்கைகளுக்காகவும், சிலர் மருத்துவ காரணங்களுக்காகவும் சிலர் தமது அந்தஸ்த்தை வெளிப்படுத்துவதற்காகவும் இப்படியான அணிகலன்களை அணிந்துவந்திருக்கின்றனர். பண்டைத் தமிழகத்திலிருந்து கிரேக்கத்திற்கு ஏற்றுமதியான சங்கு வளையல்கள் காதணிகளாக அணியப்பட்ட வரலாறும் உண்டு. “சங்கறுப்பதெங்கள் குலம் சங்கரனார்க்கேது குலம்” என்று பாடிய நக்கீரரது குலம் சங்குகளை அறுத்து ஆபரணங்கள் செய்து வந்ததாகக் கருதப்படுகிறது.

தமிழ்நாட்டில் இப்போதும் ஒணப்பத் தட்டு என்ற பெயரில் கம்மல்களை அணியும் கிராமத்தவர் இருக்கிறார்கள். அதே ஏளை புத்தர், மகாவீரர் போன்றோரின் காதுகளின் சோணைகள் நீண்டு தொங்குவதற்கும் காதணிகளே காரணம். உலோகங்கள், கற்கள், தாவரங்களிலிருந்து கிடைக்கும் பொருட்களிலுமிருந்து இவ்வணிகள் செய்யப்பட்டன. சங்க இலக்கியங்களை ஆராய்ந்தவர்கள் 39 வகையான காதணிகள் அக்காலத்தில் அணியப்பட்டதாகக் கூறிவருகிறார்கள். அட்டிகை,இட்டடிக்கை, ஓலை, மாணிக்க ஓலை, கடிப்பினை, கடுக்கண், கன்னப்பூ, குண்டலம், குணிக்கை, குதம்பை, குறடு, குழை, குவளை, கொப்பு, சன்னாவ தஞ்சம், சின்னப்பூ, செவிப்பூ, தடுப்பு, தண்டட்டி, தாளுருவி, திரிசரி, தோடு, பொன்தோடு, மணித்தோடு, நவசரி, நவகண்டிகை, நாகபடம், பஞ்சசரி, பாம்படம், பாம்பணி, புகடி, மகரி, மஞ்சிகை மடல், மாத்திரை, முடுச்சு, முருகு, மேலீடு, வல்லிகை, வாளி இவை சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றன. பிற்காலத்தில் தமிழ்நாட்டின் பழங்குடிகள் மத்தியில் மாட்டல், பூங்கொப்புமணி, பூட்டுக்காப்பு, தொங்கல், அட்டியல், பொன்மணி, திருச்சூலி, அலுக்குத்து, சரப்பளி,கொப்பு, முருக்கச்சி, ஒணப்புத்தட்டு, எதிர்தட்டு, குறுக்குத்தட்டு, தண்டட்டி, முடிச்சு, நாகவட்டம், அரசளிவாளி ஆகிய அணிகலன்களையும் காதுகளில் குத்தும் வழக்கம் இருந்து வருகிறது. பின்னர் மராட்டியரின் வருகையுடன் ஜிமிக்கி கம்மல் தமிழ்நாட்டில் அறிமுகமாகியது. நம்மூரில் பெண் பிள்ளைகளுக்கு காது குத்தும்போது முதலில் வேப்பம் குச்சியும் பின்னர் வசதிக்கேற்ப தங்க நகைகளும் அணிகலன்களாகின்றன.

தமிழ்நாட்டின் சில பழங்குடிகள் தென்னை அல்லது பனை ஓலைகளை நீரில் ஊறப்போட்டு பின்னர் அவற்றைச் சுருட்டிக் காதுத் துளைகளில் செருகுவது வழக்கமாக இருந்துவந்தது. திருவிழாக் காலங்களில் இவ்வோலைகளின் துளைகளில் விதம் விதமான பூக்கள், விதைகள், பாசிமணிகள் போன்றவற்றைச் செருகிக் கொள்வார்கள். இப்போது மூத்தவர்கள் மட்டுமே இப்பழக்கத்தைக் கைக்கொண்டு வருகிறார்கள். இளையவர்கள் காதுகளில் துளைகளிடுவதைத் தவிர்த்து போலி காதணிகளை ஒட்டுவதற்குப் பழகிவிட்டார்கள்.

கப்பலில் வேலை செய்யும் ஆண்கள் கடுக்கண் போன்ற காதணிகளை அடையாளத்திற்காக அணிந்திருப்பர். தற்செயலாக விபத்து ஏற்பட்டு உடல் கரையை அடைய நேரின் அவர் அடையாளம் காணப்பட்டு அவரது உடலில் காணப்படும் அணிகலன்களை விற்று உடல்களை அடக்கம் செய்யும் பழக்கமும் இருந்தது. ஐரோப்பாவில் அவுஸ்திரிய மலையில் பனிக்கட்டியில் உறைந்து பாதுகாக்கப்பட்ட 5000 வருடப் பழமையானது எனக் கருதப்படும் மம்மியின் காதுகளில் 7 முதல் 11 மி.மீ வரியுள்ள துளைகள் காணப்பட்டுள்ளன.

1960 களில் வட அமெரிக்காவில் புகழ்பெற்ற ஹிப்பி கலாச்சார எழுகையின்போது பலர் இந்திய ஆன்மீக ஞானத்தால் ஈர்க்கப்பட்டு இந்தியாவுக்கு வந்து போனபோது காது, மூக்கு அணிகளை அணியும் கலாச்சாரத்தை அமெரிக்காவுக்குக் கொண்டு சென்றனர். இதன் அடுத்தகட்ட வளர்ச்சியாக உடலின் பல பாகங்களிலும் துளைகளை இட்டு அவற்றில் உலோகங்களினாலான அணிகலன்களை அணிவது நாகரீகமாக ஆகிவிட்டது.

நவீன உலகில் இவ்வகையான ஆபரணங்கள் அழகுணர்ச்சிகளை வெளிப்படுத்துபவை எனப் பார்க்கப்பட்டாலும் பண்டைய கலாச்சாரங்கள் அவற்றை மருத்துவ காரணங்களுக்காகவும் பயன்படுத்தினர். உடலின் சகல அங்கங்களுடனும் தொடர்புகளை வைத்திருக்கும் உறுப்பாகக் காதின் அங்கங்கள் பார்க்கபடுகின்றன. சீன கலாச்சாரத்தில் காணப்படும் அக்கியூபங்க்‌ஷர் எனப்படும் நரம்பு முடிச்சுகளைக் கிள்ர்ச்சியூட்டும் வகையிலான சிகிச்சை முறைகளில் ஒன்றாகவே காது குத்துதலும் பார்க்கப்படுகிறது.

காதின் சோணைக்கு மேல் நடுப்பகுதியில் ( daith) இருக்கும் மென்னெலும்புகளில் (cartilege) ஆபரணங்கள் அணியப்படும்போது தீராத் தலைவலி (migraine) உடபடப் பல வலிகளிலிருந்து மூளை தப்பித்துக்கொள்ள முடியுமென்கிறது நவீன மருத்துவம். காதின் ஓரத்தில் காணப்படும் மென்னெலும்பின் மேல் வளைவில் (helix) காதணிகளை அணியும்போது மன அழுத்தம் காரணமாக ஏற்படும் தூக்கமின்மை மற்றும் சில ஒவ்வாமை வியாதிகளிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. காதின் வெளி மென்னெலும்பிற்கு அடுத்தபடியாக இருக்கும் மென்னெலும்பபில் (rook) காதணிகளை அணியும்போது, குறிப்பாக பெண்கள், மாதவிடாய் மற்றும் சமிபாட்டுத் தொகுதி உபாதைகளிலிருந்து நிவாரணம் பெறமுடியும். இவ்வுறுப்பின் கீழ் பகுதி கர்ப்பப்பை, இடுப்பு போன்ற பெண்மைக்கான உறுப்புகளுடனும் மேல் பகுதி சிறுநீர்ப்பை, சிறுகுடல், சிறுநீரகம் மர்றும் சியாட்டிக் நரம்பு ஆகியவற்றுடனும் தொடர்புடையது.

காதின் வெளிப்பகுதியான சங்கு (conch) எனப்படும் பரந்த குழியுடைய பகுதியில் அணியப்படும் காதணிகள் முதுகு வலி, இடுப்பு வலி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் தருகிறது. காதுத் துவாரத்தை அண்மி இருக்கும் மூடி போன்ற பகுதியில் (tragus) காதணிகள் அனியப்படும்போது பசி, கோபம் ஆகியவற்றைத் தணிப்பதுடன் புகைத்தல் போன்ற கெட்ட பழக்கங்களிலிருந்தும் விடுபட ஏதுவாகிறது.

இவற்றைவிட சமீபத்தில் விஞ்ஞானிகளால் அறியப்பட்ட இன்னுமொரு விடயம் காதுத் துளைகளில் வாழும் நுண்கிருமிகளால் கிடைக்கும் நன்மைகள் பற்றியது. பொதுவாக எங்கள் உடலின் உரோமத்தில் பல ட்றில்லியன் எண்ணிக்கையில் நுண்கிருமிகள் வாழ்கின்றன. பிறக்கும்போதே தாயின் உடலிலிருந்து தாவும் இக்கிருமிகள் வாழ்நாள் முழுவதும் பிள்ளைகளில் வாழ்கின்றன. மனித உடலும் இக்கிருமிகளும் ஒரு பரஸ்பர உறவாடல் மூலம் (symbiotic relationship) ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்கின்றன(ர்). நமது உடலில் தொற்றக்கூடிய தீங்கு விளைவிக்கும் கிருமிகளை அழிப்பது முதல் உரோமத்தின் தோற்றம், வெப்பநிலை ஆகியவற்றைப் பராமரிப்பது வரை இந்நுண்கிருமிகள் எமக்கு உதவி புரிகின்றன.

சமீபத்தில் கனடாவின் மக்கில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மொன்றியல் நகரிலுள்ள பச்சை குத்தும் நிலையங்களிலிருந்து காதுகளில் துளைகளிட்ட 28 தொண்டர்களை ஆராய்ந்தனர். அவர்களின் காதுகளிலிருந்து துளையிடுவதற்கு முன்னரும் பின்னரும் (துளைகளிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிச் சருமச் செதில்களை ) ஆராய்ந்தபோது அங்கிருந்த நுண்ணுயிர் சமூகத்தில் மிகவும் பாரதூரமான மாற்றங்களை அவதானித்தனர். துளைகளிட்ட பின்னர் அங்கு, மூக்கு, கமக்கட்டு போன்ற இடங்களில் வதியும் பல்லின பக்டீரியாக்கள் குடிவந்திருந்ததை அவர்கள் அவதானித்தனர்.

அதே வேளை தீங்கு விளைவிக்கக்கூடிய பக்டீரியாக்களும் இதர நல்ல பக்டீரியாக்களுடன் இணைந்து வாழும்போது தமது கெட்ட குணங்களை வெளிப்படுத்தாது இசைபட வாழ்வதையும் அவர்கள் அவதானித்தனர்.

“காதுகளில் துளையிடுதல் போன்ற விடயங்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக நடைபெற்றுவரும் விடயமாக இருந்தாலும் அவை பலவகையான நுண்ணுயிர்களுக்கு வாழிடமாக அமைந்திருப்பதை இப்போதுதான் நாம் அறிந்துகொண்டிருக்கிறோம்” என மகில் பல்கலைக்கழகத்தின் உயிரியல் விஞ்ஞானியான சார்ள்ஸ் சூ தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email