கழிவு நீரைப் பரிசோதிப்பதால் கொறோனாவைரஸின் இரண்டாம் வருகையை எதிர்வுகூறலாம்
வீடுகளிலிருந்தும், சமூகப்பாவனைகளிலுமிருந்தும் பெறப்படும் கழிவு நீரைப் பரிசோதிப்பதன் மூலம் கொறோனாவைரஸ் அதில் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள முடியும் எனக் கனடிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். வேறு பல நாடுகளிலும் விஞ்ஞானிகள் இம் முறையை நோய்ப்பரவலை முன்கூட்டியே அறியும் எச்சரிக்கை செய்வதற்காகப் பாவிக்க உத்தேசித்துள்ளார்கள்.
சிலர் தமக்கு நோய்த் தொற்று இருக்கிறது எனபதை அறியாமலேயே நடமாடுவதால் இலகுவாக நோய்ப்பரவலைச் செய்துவிடுகிறார்கள். சமூகமாக வாழும் மக்களின் கழிவுநீரைப் பரிசோதிப்பதன் மூலம் அவற்றில் வைரஸ்கள் இருக்கிறதா என்பதை முன்கூட்டியே தீர்மானித்து அச் சமூகங்களைத் தனிமைப்படுத்திப் பரிசோதனைகளை மேற்கொள்ளமுடியுமென விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
ஒரு குடும்பத்திலுள்ள அத்தனை பேரையும் பரிசோதிப்பதைவிட அவர்கள் பாவிக்கும் கழிப்பறைத் தண்ணீரைப் பரிசோதித்து முடிவுகளைத் தீர்மானித்து விடலாம். தனித்தனியே பரிசோதனைகளை (PCR) மேற்கொள்வது ஒன்ராறியோ, கியூபெக் போன்ற பெரிய மாகாணங்களுக்கு சிரமங்களையும், செலவுகளையும் கொடுத்துவரும் விடயமாகும்.
“கழிவு நீரைப் பரிசோதிப்பதன் மூலம் அதை ஒரு முன்கூட்டிய எச்சரிக்கை அறிவிப்புக்குப் பாவிக்கலாம்” என விண்ட்சர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மைக் மக்கே தெரிவிக்கிறார். கழிவுக் குழாய்களில் வரும் தண்ணீரிலுள்ள வைரஸ்களின் எண்ணிக்கையை அளவிடுவதன் மூலம் ஒரு வீட்டிலோ அல்லது சமூகத்திலோ எவ்வளவு தூரம் நோய் பரவியிருக்கிறது என்பதை எதிர்வுகூறலாம் எனபது விஞ்ஞானிகளின் கருத்தாகும்.
இப்பரிசோதனைகளை பல கனடிய நகரங்களிலும் பரீட்சார்த்த முறையில் செய்துகொள்ள முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் வெற்றி காணப்பட்டால் சமூகம் சமூகமாக இப் பரிசோதனைகளைச் செய்து, நோயிருப்பது கண்டுபிடிக்கப்படின் அச் சமூகங்களையோ, அல்லது தனியார் வீடுகளையோ, தனிமைப்படுத்த முடியுமென்பது இவ் விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பு.
இன் நடைமுறை பிரான்சிலும், நெதெர்லாந்திலும் பரீட்சிக்கப்பட்டு வெற்றிகரமான முடிவுகளைத் தந்திருப்பதாக அறிவிக்கப்படுகிறது.
கனடாவில் இப்படியான பரிசோதனைகள் வெவேறு தேவைகளுக்காக ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஒன்ராறியோவில் (வாக்கெற்றன்) சில வருடங்களுக்கு முன்னர் வெள்ளப்பெருக்கோடு பரவிய பக்டீரியத் தொற்றைத் தொடர்ந்து பல கிராமியச் சமூகங்களின் குடிநீர்வழங்கல், கிணற்று நீர் ஆகியன ஒழுங்காகப் பரிசோதிக்கப்பட்டு வருகின்றது. சட்ட விரோத போதைவஸ்துப் பாவனையைக் கண்டறிய சில வீடுகளின் கழிவுநீர் இரகசியமாகப் பரிசோதிக்கப்படுவதும் வழக்கம். (அசோசியேட்டட் பிரெஸ்)
No related posts.