ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை பொறிக்கப்பட வேண்டும் – கனடா சட்டம் கொண்டுவருகிறது


‘புகைத்தல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும்’ என்னும் எச்சரிக்கை தற்போது பல நாடுகளிலும் பல வழிகளிலும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகிறது. சில நாடுகளில் சிகரெட் பெட்டிகளில் வெளியே குரூரமான படங்களைப் பிரசுரிப்பத்வும் வழக்கம். ஆனாலும் புகைப்பவர்கள் பலர் இப்படங்களுக்குப் பழகிப்போய்விடுகிறார்கள். இக்காரணங்களுக்காக கனடா நாட்டில் அதன் உளநலம் மற்றும் போதை தவிர்ப்பு அமைச்சர் கரோலின் பென்னெற் புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்து வைக்கிறார்.

இச் சட்டத்தின் பிரகாரம் ஒவ்வொரு தனிச் சிகரெட்டிலும் ‘புகைத்தல் உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும்’ என்பது போன்ற எச்சரிக்கை வாசகங்கள் பொறிக்கப்பட வேண்டும். இது நிறைவேறினால் இப்படியான எச்சரிக்கைகளை வெளியிடும் முதல நாடு கனடாவாகவே இருக்கும்.

கனடிய சிகரெட் நிறுவனங்கள் தமது தயாரிப்புகளில் இம் மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும் என கடந்த வெள்ளியன்று (ஜூன் 10) அமைச்சர் பென்னெற் அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து இது தொடர்பான 75 நாள் ஆலோசனை கோரும் காலமென அறிவித்திருக்கிறார். இது ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் 2023 ஆம் ஆண்டின் பின்னரைப் பகுதியில் கனடாவில் தயாரிக்கப்படும் அனைத்து சிகரெட்டுகளும் இப்படியான எச்சரிக்கைகளைத் தாங்கி வரும். இதுவரை பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட எச்சரிக்கை வாசகம் ” ஒவ்வொரு புகையிழுப்பிலும் நஞ்சு (poison in every puff)” எனக் கூறப்படுகிறது. சிகரெட் பெட்டிகளின் வெளிப்புறத்திலும் பலவிதமான நலக்கேடு, வியாதிகள் பற்றிய வசனங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். புகைத்தலினால் ஏற்படும் வியாதிகளாக வயிறு மற்றும் குடல் புற்று நோய்கள், நீரழிவு, இருதய வியாதி ஆகியன குறிப்பிடப்படுகின்றன.

2000 ஆம் ஆண்டில் கனடா, முதன் முதலாக சிகரெட் பெட்டிகளில் புறூநோயாளிகளின் குரூரமான படங்களைப் பிரசுரித்ததன் மூலம் புகைப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது பின்னர் உலகின் பல நாடுகளாலும் பின்பற்றப்பட்டது. 2012 இல் இப்படியான படங்கள் சிகரெட் பெட்டியின் முன், பின் பக்கங்களின் 75% பரப்பளவை உள்ளடக்கவேண்டுமெனச் சட்டமியற்றப்பட்டது. இப்படங்கள் அனைத்தும் முன்னாள் புகை பிடிப்பவர்கள் இறந்ததன் பின்னர் அவர்களுடன் முன்கூட்டிய சம்மதத்தோடு பிரசுரிக்கப்பட்டன. ஆரம்பத்தில் இப்படங்கள் பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியையும் அருவருப்பையும் கொடுத்திருந்தாலும் இத்தனை வருடங்களுக்குப் பிறகு அது அதன் தாக்கத்தை இழந்துவிட்டது; புகைப்பவர்கள் அவற்றுக்குப் பழகிக்கொண்டு விட்டனர். எனவே புதி வழிகளில் அவர்களை எச்சரிக்க வேண்டும் என அமைச்சர் பென்னெற் கருதுகிறார்.

கனடாவில் புகைப்பவர்களின் எண்ணிக்கை பெரும்பாலும் குறைந்துவிட்டதெனினும், அத சனத்தொகையில் 10% மானோர் இப்போதும் புகைபிடிக்கிறார்கள். 2035 இல் இதை அரைவாசியாகக் குறைக்கவேண்டுமென்பது அரசாங்கத்தின் திட்டம். கனடாவில் 48,000 பேர் புகைத்தல் சம்பந்தப்பட்ட வியாதிகளினால் வருடாந்தம் மரணமடைகிறார்கள். 80% மான நுரையீரல் புற்றுநோய்க்கு புகைத்தலே காரணமாகவிருக்கிறது.

Print Friendly, PDF & Email